விஷால் படம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று சில விஷயங்களைக் கோடிட்டுக் காட்ட முடியும். சண்டக்கோழி முதல் வீரமே வாகை சூடவா வரை அவரது படங்களில் பெரும்பாலானவற்றின் அடிநாதம் ஒரேமாதிரியானதாகத்தான் இருக்கும்.
அதாகப்பட்டது, விஷால் நடிக்கும் பாத்திரம் அமைதியான சுபாவம் கொண்டதாகத் தோன்றினாலும் ஆக்ஷனில் பின்னியெடுக்கக் கூடியது என்பது இடைவேளைக்கு முன்னதாகவே ரசிகர்களுக்குத் தெரிந்துவிடும். வில்லன்களுக்கும் அவர்களது அடியாட்களுக்கும் மட்டும்தான் தெரியாது.
யுவன்சங்கர்ராஜா இசையமைப்பில், ஏ.வினோத்குமார் இயக்கத்தில் விஷால், சுனைனா, பிரபு, தலைவாசல் விஜய், ரமணா, முனீஸ்காந்த் உள்ளிட்டோர் நடித்த ‘லத்தி’ படமும் மேற்சொன்ன வரிசையில் சேர்கிறதா அல்லது புதுமாதிரியான அனுபவத்தைத் தருகிறதா?
அடி பின்னலாமா..?
சஸ்பெண்ட் செய்யப்பட்டு ஆறு மாத காலமாகியும், மீண்டும் போலீஸ் வேலையில் சேர முடியாமல் அவதிப்படுகிறார் கான்ஸ்டபிள் முருகானந்தம் (விஷால்).
அவரது மனைவி கவிதா (சுனைனா) ஒரு மருத்துவமனையில் நர்ஸ் ஆக பணியாற்றுகிறார்.
ஒருநாள் இரவு தன்னிடம் ‘ஈவ் டீசிங்’ புகார் தெரிவிக்க வந்த பெண்ணைத் திருப்பியனுப்புகிறார் முருகன்; அடுத்தநாள் மருத்துவமனையில் அப்பெண் கற்பழித்துக் குற்றுயிரும் குலையுயிருமாக இருப்பதைக் காண்கிறார்.
அவரைத் துரத்தி துரத்தி காதலித்த பையனை லாக்கப்பில் லத்தியால் அடி வெளுக்கிறார்.
ஆனால், அந்தப் பெண் அளிக்கும் மரண வாக்குமூலத்தில், தன்னை இந்த கதிக்கு ஆளாக்கியது வேறொரு நபர் என்றும் அவரது அடையாளங்கள் இன்னென்ன என்றும் சொல்லிவிட்டு இறந்து போகிறார்.
அதன் தொடர்ச்சியாக, அடி வாங்கிய இளைஞரின் தந்தை மனித உரிமை ஆணையத்தில் புகார் கொடுக்க, முருகனின் வேலை பறி போகிறது.
இந்நிலையில், டிஐஜி கமல் (பிரபு) சிபாரிசில் மீண்டும் வேலையில் சேர்கிறார் முருகன். லத்தியை கையில் எடுக்க மாட்டேன் என்று சக பணியாளர்களிடம் உறுதியாகச் சொல்கிறார்.
அதற்கு மாறாக, கமல் மகளிடம் வம்பு செய்த ஒரு நபரை லத்தியால் பின்னியெடுக்கிறார் முருகன். அந்த நபரின் முகம் பிளாஸ்டிக் பையால் மூடப்பட்டிருக்கிறது.
முருகன் அடித்த நபரின் பெயர் வெள்ளை (ரமணா); பிரபல ரவுடி சுறாவின் மகன்.
அடித்தவனின் அடையாளத்தை நினைவில் வைத்திருக்கும் வெள்ளை, தன் ஆட்கள் மூலமாக முருகனைச் சென்னை முழுக்கத் தேடுகிறார்.
முருகனைக் கண்டபிறகு வெள்ளையும் அவரது ஆட்களும் என்ன செய்கின்றனர், அதற்கு முருகன் எப்படி பதிலடி கொடுக்கிறார் என்பதே ‘லத்தி’யின் கதை.
லத்தியை அடுத்து வரும் ‘சார்ஜ்’ என்ற இணைப்புச் சொல்லுக்கு ஏற்ப, படம் முழுக்க ஆக்ஷன் கொடிகட்டிப் பறக்கிறது.
இவ்வளவு ஏன், தன்னைத் துரத்தும் நூற்றுக்கும் மேற்பட்ட அடியாட்களிடம் இருந்து முருகானந்தம் தப்பிக்க முனைவதில் இருந்துதான் திரைக்கதையே தொடங்குகிறது.
பார்வையாளர்களிடம் சோர்வு பெருகுவதற்கான முழுமுதற் காரணமும் கூட அதுதான்.
எங்கே சறுக்கல்?
நூறு பேர் வந்தாலும் எதிர்த்து தாக்கக்கூடியவர் முருகன்; முதல் சில நிமிடங்களிலேயே இது தெளிவாகிவிட்டது. அதனால், இடைவேளைக்குப் பிறகான சில முக்கியமான திருப்பங்கள் பெரிதாக ஆச்சர்யப்படுத்தவில்லை.
படத்தின் மையமே முருகன் அவரது மகன் மீது வைத்திருக்கும் பாசம் தான். நிச்சயமாகத் திரைக்கதை அதிலிருந்துதான் தொடங்கியிருக்க வேண்டும்.
முருகன் மட்டுமல்லாமல் அவரது மகனும் வில்லன் கூட்டத்தினரிடம் மாட்டிக்கொண்டான் என்பதை வைத்தே பின்பாதியின் பெரும்பகுதி நகர்கிறது.
அப்படியிருக்க, மனைவியோடும் மகனோடும் முருகன் எவ்வளவு உறவுப் பிணைப்போடு இருந்தார் என்பது இன்னும் கொஞ்சம் விரிவாக சொல்லப்பட்டிருக்கலாம்.
வில்லன் தரப்பு வாழ்க்கை எப்படிப்பட்டது என்று தெரிந்திருந்தால், நாயகனையும் அவரைச் சார்ந்தவர்களையும் மீதான பிடிப்பு தானாக அதிகமாகியிருக்கும். அதுவே பின்பாதி ஆக்ஷன் காட்சிகளைக் கொண்டாடச் செய்திருக்கும்.
ஆனால், வில்லனும் அவரது மகனும் தங்களது வீட்டில், பொதுவிடங்களில் எப்படியிருந்தனர் என்பது படத்தில் காட்டப்படவே இல்லை.
அதனாலேயே எந்நேரமும் யாரையாவது அடித்து வம்பிழுக்க ஜீப்பிலும் காரிலுமே பயணிப்பார்களோ என்ற சலிப்பு ஏற்படுகிறது.
மற்றபடி வழக்கமான போலீஸ் படமாக இல்லாமல் இருப்பதற்கான அத்தனை வேலைகளையும் முன்பாதியில் மேற்கொண்டிருக்கிறார் இயக்குனர் ஏ.வினோத்குமார்.
திரைக்கதை வசனத்தில் ஒத்துழைப்பு நல்கியிருக்கும் பொன்.பார்த்திபன் பங்களிப்பும் அதில் கணிசமாக இருக்கும் என்று ஊகிக்க முடிகிறது.
தவிர்த்திருக்க வேண்டிய ‘க்ளிஷே’க்கள்!
போலீஸ் புகழ் பாடும் வசனங்களை படங்களில் கேட்டு கேட்டுச் சலித்தாகிவிட்டது. இன்றைய வாழ்வின் கஷ்டங்களோடும், காவல் துறையில் மேலிருந்து கீழ்நோக்கிப் பாயும் அதிகாரப் பாய்ச்சலோடும் போராடும் சாதாரண போலீஸ்காரர்களின் இயல்பான மனநிலையைக் காட்டும் சாதாரண வசனங்களே ‘லத்தி’க்கு தேவை. இயக்குனர் அதனைத் தவறவிட்டிருக்கிறார்.
ஒரு பெரிய அடுக்குமாடிக் கட்டடத்தில் திகட்டத் திகட்ட ஆக்ஷன் காட்சிகளை அடுக்கினாற் போதுமென்று நினைத்திருக்கிறார் இயக்குனர். அதற்கேற்றவாறு, ஆக்ஷன் பிரியர்களுக்கு இதில் விருந்தே தந்திருக்கிறார் சண்டைப்பயிற்சி இயக்குனர் பீட்டர் ஹெய்ன்.
பின்னணி இசையே முன்பாதிக் காட்சிகளை விறுவிறுப்பானதாக மாற்றியிருக்கிறது. யுவன் சங்கர் ராஜாவின் உழைப்பு அதனைச் சாதித்திருக்கிறது.
என்.பி.ஸ்ரீகாந்தின் படத்தொகுப்பு பணி முன்பாதியில் அருமை; பின்பாதியில் அந்த சிரத்தையைக் காட்டச் சந்தர்ப்பம் கிடைத்திருக்காது என்றே எண்ணத் தோன்றுகிறது.
கலை இயக்குனர் கண்ணனின் குழுவினர் அழுக்கான பொருட்களைத் தேடி அலைந்து திரிந்திருக்க வேண்டும். அதெல்லாம் சண்டைக்காட்சிகளில் அப்பட்டமாகத் தெரிகிறது.
ஒளிப்பதிவாளர்கள் பாலகிருஷ்ண தோட்டா, பாலசுப்பிரமணியெம் பணியானது ‘யதார்த்தமான’ ட்ரீட்மெண்டில் திரைக்கதையைக் கையாள உதவியிருக்கிறது.
விஷால், சுனைனா ஜோடி ரொம்பவும் அழகாகத் திரையில் தெரிகிறது; இப்போதிருக்கும் தோற்றத்தில், இன்னும் சில படங்களில் இருவரும் ஜோடியாக நடிக்கலாம்.
‘சில்லுக்கருப்பட்டி’ தந்த உற்சாகத்தில், இதில் இன்னும் பூரிப்புடன் தென்படுகிறார் சுனைனா. நல்ல பாத்திரங்கள் கிடைத்தால், இன்னும் ஒரு ரவுண்ட் வருவார்.
வசனம் பேசுவதில் மட்டும், இன்னும் ‘நானும்தான் மதுரைக்காரந்தாண்டா’ என்ற பாணியையே பின்பற்றுகிறார் விஷால். உண்மையில் ‘பாண்டிய நாடு’ டைப் படங்கள்தான் அவரது பலம்.
‘இரும்புத்திரை’ அதனை உணர்த்தியபிறகும் கூட திரும்பத் திரும்ப ‘சண்டக்கோழி’, ‘திமிரு’ படங்களையே அவர் பிரதியெடுக்க முயற்சிப்பதை என்னவென்று சொல்வது?
ஏ.வெங்கடேஷ், முனீஸ்காந்த், தலைவாசல் விஜய், வினோதினி, மிஷா உள்ளிட்டோர் இதில் நடித்திருக்கின்றனர். திரையில் வரும் ஆண்களின் எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டால், 3% கூட பெண்களின் இருப்பு இருக்காது.
வெகுநாட்களுக்குப் பிறகு பிரபுவுக்கு சொல்லும்படியான வேடம். அதேநேரத்தில், சுறா என்ற பாத்திரத்தில் வில்லனாக நடித்த சன்னிக்கு அத்தகைய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.
மிக முக்கியமாக, ரமணாவின் முகம் திரையில் தெரியத் தொடங்கியதுமே மொத்தப் படமும் ‘ப்பே..’ என்றாகிறது.
அவர் நல்ல நடிகர் என்றபோதும், இந்த கதைக்கு அவர் கொஞ்சம் கூட பொருத்தமில்லை என்பதே உண்மை.
‘சண்டக்கோழி’, ‘கதகளி’ உட்பட விஷால் நடித்த நிறைய படங்களில் சாயல் இக்கதையில் இருந்தபோதும், முன்பாதியில் திரைக்கதை வித்தியாசமாகத் தெரிய நிறையவே முயற்சித்திருக்கிறார் புதுமுக இயக்குனர் வினோத் குமார்.
அதில் ஒரு துளி கூட பின்பாதியில் தென்படவில்லை என்பதுதான் ‘லத்தி’யின் மிகப்பெரிய பலவீனம்.
வெறுமனே அதிரடியான ஆக்ஷன் காட்சிகளைப் பார்க்க வேண்டுமென்று விரும்புபவர்கள் தாராளமாக ‘லத்தி’யை ரசித்துச் சிலாகிக்க முடியும். அப்படியில்லையென்றால், ‘அடி பின்னிட்டாங்க’ என்று வருத்தப்பட வேண்டியிருக்கும்!
– உதய் பாடகலிங்கம்