புதிய ஒமிக்ரான் பரவல் – கவனமாக இருப்போம்!

சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் புதிய வகைக் கொரோனாத் தொற்று பரவ ஆரம்பித்திருக்கிறது.

பத்து லட்சம் பேர் வரை மறுபடியும் புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக சில ஆய்வு முடிவுகள் அறிவிக்கின்றன.

அமெரிக்காவில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்திருக்கிற ஆய்வறிக்கையின் படி- அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்து கோடியைத் தாண்டியிருக்கிறது. இதுவரை பத்து லட்சத்திற்கும் மேலானவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை கொரோனாவினால் ஐந்து லட்சத்து முப்பதாயிரம் பேர் வரை உயிரிழந்திருக்கிறார்கள். 46 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் இந்தியாவில் குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களில் நான்கு பேருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது தெரிய வந்திருக்கிறது.

ஒன்றிய அரசும் கொரோனா குறித்த கண்காணிப்பை அதிகப்படுத்தியிருக்கிறது. அயல்நாடுகளில் இருந்து வரும் பயணிகளைப் பரிசோதிப்பது நடந்து கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டிலும் கொரோனா மரபணு மாற்றத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகச் சொல்லியிருக்கிறார் தமிழகச் சுகாதாரத் துறை அமைச்சரான மா.சுப்பிரமணியன்.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் என்ன செய்யலாம்?

இந்திய அளவிலேயே கொரோனா தடுப்புக்கான பூஸ்டர் தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டவர்கள் 28 சதவிகிதம் பேர் மட்டுமே.

தற்போது கொரோனா புதுத்தொற்று நுழைய ஆரம்பித்திருக்கிற நிலையில், இரண்டாவது தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்வதைத் துரிதப்படுத்தியாக வேண்டும்.

எச்சரிக்கையாக முகக் கவசம் அணிவதையும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதையும் நம் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும்.

எப்போது உலக மயம் என்கிற சொல்லும், செயல்பாடும் இங்கே நுழைந்ததோ, அதன் பின்விளைவுகளையும் நாம் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும்.

Comments (0)
Add Comment