மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றேகால் ஆண்டுகள் உள்ள நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழும் அரசியல் மாற்றம் பா.ஜ.க.வுக்கு அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஒருசேர கொடுத்துள்ளது.
அண்மையில் நடந்த டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியிடம், நிர்வாகத்தை இழந்து, அதிர்ச்சியைச் சந்தித்தது பாஜக.
தொடர்ச்சியாய் இமாச்சலப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியைப் பறிகொடுத்தது பாஜகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருப்பது நிஜம்.
மோடி பிரதமராக பதவி ஏற்றபின் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் தவிர மற்ற அனைத்து மாநிலச் சட்டசபைத் தேர்தல்களிலும் காங்கிரசை மண்ணை கவ்வச்செய்த பாஜக, இமாச்சலபிரதேசத்தில் ஆட்சியை இழந்திருப்பது, அந்த கட்சியின் மூத்த தலைவர்களை கவலை கொள்ள செய்துள்ளது.
புத்தாண்டில் சவால்
புத்தாண்டின் தொடக்கத்திலேயே பிரதமர் மோடிக்கு சவால்கள் காத்திருக்கின்றன.
அடுத்த ஆண்டு (2023) நாடு முழுவதும் 9 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல்கள் நடக்க உள்ளன.
இது பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான, ‘அரைஇறுதித்’ தேர்வு என சொல்லலாம்.
இதன் வெற்றி-தோல்வி நிச்சயம், பொதுத்தேர்தலில் எதிரொலிக்கும்.
மக்களவையில் மொத்தம் 543 இடங்கள் உள்ளன.
பெரும்பான்மைக்கு, 272 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக 2014-ம் ஆண்டு தேர்தலில் 282 தொகுதிகளைக் கைப்பற்றி இருந்தது.
கடந்த, 2019 தேர்தலில், இதைவிட கூடுதல் தொகுதிகளில்- அதாவது 303 இடங்களை கைப்பற்றியது.
2024 ஆம் ஆண்டு நடைபெறப் போகும் தேர்தலில் எத்தனை இடங்கள் கிட்டும் என பாஜக தலைவர்கள் மட்டுமின்றி, அனைத்துக்கட்சி தலைவர்கள், அரசியல் ஆலோசகர்கள் உள்ளிட்டோர் புள்ளிவிவரங்களை ஆய்வு செய்து விவாதித்து வரும் சூழலில், 2023 ஆம் ஆண்டு 9 மாநில சட்டசபைத்.தேர்தல் நடைபெற உள்ளது.
விரைவில் அறிவிப்பு
9 மாநிலங்களில் மொத்தம் 116 எம்.பி. தொகுதிகள் உள்ளன.
பிப்ரவரி மாதம் மேகாலயா, மிசோரம், நாகலாந்து, திரிபுரா ஆகிய நான்கு மாநிலங்களில் தேர்தல் நடக்கிறது.
ஆம். புத்தாண்டு பிறந்த சில நாட்களில் இந்த 4 மாநில தேர்தலுக்கான அறிவிப்புகள் வெளியாகிவிடும்.
எந்த மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. அந்தக் கட்சி நான்கு மாநிலங்களில் தோற்றாலும் பெரிதாக கவலைப்படப்போவதில்லை.
ஆனால் பாஜக நிலை அப்படி அல்ல.
திரிபுராவில் பாஜக ஆட்சி நடக்கிறது. நாகலாந்தில் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. மேகாலயா மற்றும் மிசோரமில் பிராந்திய கட்சிகள் ஆட்சியில் உள்ளன.
எனவே, இந்தத் தேர்தல் மோடிக்கு அக்னி பரீட்சையாகவே இருக்கும். நான்கு மாநிலங்களிலும் மொத்தமாக 6 எம்.பி. தொகுதிகள் மட்டுமே உள்ளன என்றாலும், இதன் தாக்கம் பிற பகுதிகளில் எதிரொலிக்கும்.
கர்நாடகம்
பாஜக ஆட்சி நடைபெறும் கர்நாடக மாநிலத்தில் மே மாதம் தேர்தல்.
தென் மாநிலங்களில் பாஜக ஆட்சி நடக்கும் ஒரே மாநிலம் இது. (புதுச்சேரியில் கூட்டணி ஆட்சி)
கடந்த பொதுத்தேர்தலில் மொத்தமுள்ள 28 எம்.பி.தொகுதிகளில் 26 ஐ பாஜக அள்ளியது.
இங்கு, இந்தமுறை பாஜக வெல்லாது என கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன.
இந்த முடிவுகள் எம்.பி. தேர்தலில் எதிரொலிக்குமோ என பாஜக மேலிடம் அஞ்சுகிறது.
நவம்பர் மாதம்
காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் ராஜஸ்தான், சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களிலும், பாஜக ஆட்சியில் உள்ள மத்தியபிரதேசத்திலும் நவம்பர் மாதம் சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ளது.
தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆட்சியில் உள்ள தெலுங்கானாவில் டிசம்பர் மாதம் தேர்தல்.
பொதுத் தேர்தலுக்காக ஒவ்வொரு கட்சியும், இப்போதே பல்வேறு அணுகுமுறைகளை மேற்கொண்டுள்ள நிலையில், 9 மாநிலத் தேர்தலை மோடி எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என பார்க்கலாம்.
- பி.எம்.எம்.