சினிமாவின் சவலைக் குழந்தை தான் தொலைக்காட்சி!

– பிரபஞ்சன்

“அரசியலில் இரண்டு வகை உண்டு. ஒன்று கட்சி சார்ந்த அரசியல். மற்றது தத்துவம் சார்ந்த அரசியல். இரண்டையும் சரியான தரத்தில், விமர்சனங்களோடு தமிழர்களுக்குச் சொல்லும் பத்திரிகைகளே, தமிழர் வாங்கிப் படிக்க வேண்டிய பத்திரிகைகள்.

தமிழ் சினிமாவும், தொலைக்காட்சிகளும் தமிழர் மூளைகளில் குப்பைகளைக் கொண்டு சேர்க்கின்றன. எந்த மதிப்பீடுகளும் இல்லாத மானுடப் பண்பாட்டைக் கேலி செய்பவையாக இருக்கின்றன.

சினிமாவிலாவது அவ்வப்போது சில மாறுதல்கள் நடக்கின்றன. முன்னேற்றம் நோக்கிச் சில சினிமாக்கள் நகருகின்றன.

தொலைக்காட்சியோ சினிமாவின் சவலைக் குழந்தையாகவோ, பெண்களைக் குறித்த கொச்சைச் சித்தரிப்பாகவே இருக்கின்றது.

கலையும், தொழில்நுட்பமும் சேர்ந்து பிறப்பித்த புத்தம் புதிய ஊடகம் தொலைக்காட்சி. தமிழர்களைக் கொச்சைப்படுத்தி அவர்களின் சிந்தனைத் தளத்தைச் சிறுக்கச் செய்கின்றன தொலைக்காட்சித் தொடர்கள்.

சினிமா, தொலைக்காட்சி எதுவானாலும் கதையோ, கவிதையோ, நாடகமோ எதுவானாலும் கலையின் அடிப்படை மனித வாழ்க்கை தான்.

மனிதப் பாடுகள், மனித நிகழ்ச்சிகள், மனித துயரங்கள், மனிதப் போராட்டங்கள், மனித நம்பிக்கைகள், மனிதனின் வெற்றி தோல்விகள், மனித உன்னதங்கள், மனிதனின் அற்பங்கள் இவையே கலை; இவையே இலக்கியம்.

மனித வாழ்க்கையின் ஒரு சின்னக்கூறு தான் காதல். இந்தப் புரிதலுடன் கூடியத் தொலைக்காட்சியே இன்றையத் தேவை.

எனக்கு தமிழர்கள் மேல் நம்பிக்கை உண்டு. மாபெரும் சுதந்திரப் போராட்டத்தில் மகத்தான பங்காற்றியவர்கள் அவர்கள். முன்னேற்றத்துக்கான எந்த நல்ல முயற்சிகளுக்கும் அவர்கள் ஆதரவு தருவார்கள்.

காவிரி வற்றலாம். மனித நெஞ்சின் ஈரம் காய்வது இல்லை. எவ்வளவு தான் கால்பட்டுக் கசங்கினாலும் தினம் தினம் புற்கள் முளைக்கவே செய்கின்றன. பூக்கள் மலரவே செய்கின்றன.

நம்பிக்கையோடு முயல்வோம். தமிழர் வாழ்வில் புதிய ஒளியைப் பாய்ச்சும் மாற்றம் வரும் என்று நம்புவோம். நம்பிக்கை தானே வாழ்க்கை”

– காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள “பிரபஞ்சன் கட்டுரைகள்” (தொகுப்பு : ந.முருகேச பாண்டியன்) தொகுப்பில் உள்ள தமிழின் வளர்ச்சியில் தமிழனின் பங்கு” கட்டுரையிலிருந்து ஒரு பகுதி.

Comments (0)
Add Comment