நாவலாகிறது வயலூர் பண்ணை வீடு நினைவுகள்!

திரைப்பட இயக்குநரும் எழுத்தாளருமான நேசமிகு ராஜகுமாரன் எழுதிய பதிவு இது. தான் பிறந்து வளர்ந்த வயலூர் வீட்டின் நினைவுகளை ஈரம் சொட்டச் சொட்ட கவித்துவமாக எழுதியிருக்கிறார்.

பல அபூர்வக் கதைகளை அடைகாக்கும் எங்கள் வயலூர் வீடு. கீழத் தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்ற வயலூர் பண்ணை வீடு.

இந்த வளாகக் கேட்டைக் கடந்து, யாரும் உள் நுழைய முடியாத முதலாளித்துவ பழம்பெருமையை ஒரு காலத்தில் சுமந்திருந்தது. ஊரில் இதையும் சேர்த்து இன்னும் ஏழு வீடுகள் எங்களுக்கு இருந்தன, அப்பா பெரியப்பா காலம் வரை.

என் தாத்தா கட்டிய எங்கள் சொந்த பெருமாள் கோயில்தான் ஊர்க் கோயிலும். ஊரின் மொத்த நிலம் 48 வேலியும் எங்கள் குடும்ப சொத்து ஒரு காலத்தில்.

பெரியப்பா பண்ணையார், மிராசுதார், முதலாளி. அப்பா கவிஞர். அண்ணாமலை பல்கலையில் முதல் தலைமுறை இன்டெர்மீடியட் படித்தவர்.

மெல்ல தன் வீட்டில் முதலாளித்துவத்தை கட்டுடைத்தவர்.

நவீன ரசனை கொண்ட படைப்பாளி. அதனால்தான் கலைஞர், சுரதா, இராம. அரங்கண்ணல், ஆரூர்தாஸ் போன்றவர்களின் நண்பரானார். அதனால்தான் அவரை ஊரில் எல்லோருக்கும் பிடித்தது.

அதனால்தான் பெரியப்பாவுக்கு மட்டும் அவரைப் பிடிக்காமல் போனது. அதனால்தான் சண்டை போட்டு பிரிந்தவர்கள் இறுதி வரையில் ஒருவர் முகத்தில் ஒருவர் விழிக்கவில்லை. அதனால்தான் பெரியப்பாவின் மரணத்துக்கும் அப்பா போகவில்லை.

வாரிசு இல்லாத அவருக்கு 3 வயது சிறுவனான நான் கொள்ளிவைத்த கதையை அம்மா சொல்லியுள்ளது.

பெரியப்பாவின் மரணத்துக்குப் பின், அப்பாவின் அழைப்பில் ஏனைய சமூகத்தினர் எங்கள் வீட்டுக்குள் வந்திருக்கின்றனர்.

படத்தில் சிவப்புத் துண்டு அணிந்திருக்கும் சுப்பிரமணியன், தாத்தா காலத்து பண்ணையாளின் பேரன்.

எங்கள் நிலம் இப்போது அவரிடம் குத்தகையில் உள்ளது. அவர்தான் எங்கள் வீட்டுக்குள் நுழைந்த முதல் தலைமுறை.

நான்தான் அவரின் குடிசை வீட்டுக்குள் அமர்ந்து சாப்பிட்ட முதல் தலைமுறை. இப்போது இந்த வீடு, எங்கள் நிலங்களின் ஒரு குத்தகைதாரர் வசம். அவரும் படத்தில். படத்தில் சிதிலமான கோயிலை புதுப்பித்துவிட்டேன்.

கோயில் நிலம் 30 ஏக்கர் ஊரில் உள்ள அனைத்து சமூகத்தினரிடமும் குத்தகையில் உள்ளது.

எங்கள் குடும்ப வரலாற்றுப் பின்னணியில் ஒரு நாவல் எழுதும் திட்டம் நெடு நாளாய் உள்ளது. 2023ல் கனியும் என நினைக்கிறேன். காலத்தின் புன்னகை புதிர்த்தன்மை கொண்டது!

Comments (0)
Add Comment