மிகவும் சீரிய கருத்துகளைச் சொல்லும் திரைப்படங்கள் புத்துணர்வூட்டும் காட்சியமைப்பைக் கொண்டிருக்க வேண்டும் அல்லது செவ்வியல் காட்சியாக்கம் என்று போற்றத்தக்க வகையில் ஒவ்வொரு பிரேமையும் பார்த்து பார்த்து செதுக்கியிருக்க வேண்டும்.
புதுமுக இயக்குனர் ரஃபீக் இஸ்மாயில் இயக்கத்தில் கண்ணா ரவி, குமரவேல், சார்லஸ் வினோத், கல்யாண் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ரத்தசாட்சி’ ட்ரெய்லர் பார்த்தபோது, மேற்சொன்ன இரண்டில் எந்த வகைமையில் அப்படம் அடங்கும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதற்கு விடை கிடைக்கிறதா என்ற ஆவலுடன் படம் பார்க்கத் தொடங்கினேன்.
சொல்லில் அடங்கா துயரம்!
அதிகார பீடத்தில் இருப்பவர்களின் முகத்தைக் கூட ஏறிட்டுப் பார்க்கமுடியாத பயத்துடன் ஒடுங்கி வாழும் மக்கள்.
அவர்களது உழைப்பை உறிஞ்சியதோடு பல வகையிலும் கொடுமைகளை வாரியிறைக்கும் அதிகார வர்க்கம்.
இவர்களுக்கு நடுவே, மேட்டையும் பள்ளத்தையும் சமதளமாக்கப் போராடும் புரட்சிக் கூட்டம். மூவரையும் அடக்கியாளும் வேட்கையோடு இன்னொரு திசையில் இருந்து கோடு கிழிக்கும் அரசு எந்திரம்.
நான்கு திசைகளில் இருந்தும் நீளும் கோடுகள் எந்த புள்ளியில் ஒன்றிணைகின்றன என்பதே ‘ரத்த சாட்சி’யின் மையம்.
இதுவரை நாம் கேள்விப்பட்ட அத்தனை புரட்சிக் கதைகளையும் நினைவூட்டுகிற காட்சியமைப்பு.
உழைப்புச் சுரண்டலைக் கண்ணில் காட்டினாலும் முழுக்கவே இது சாதீயத்தைப் பேசும் கதை. போலவே, காவல் துறை மீதான கடுமையான விமர்சனங்களும் கூட படத்தில் உண்டு. அவை எதுவுமே நேரடியாக நம் மனதைத் தொடவில்லை என்பதுதான் வருத்தம் தரும் விஷயம்.
சொல்லில் அடங்கா துயரம் இக்கதையின் பேசுபொருள் என்றாலும், அதனை அனுபவிக்கும் மக்களை, அவர்கள் வாழும் நிலப்பரப்பை, வாழ்வுச் சூழலை இன்னும் கொஞ்சம் விரிவாகப் பதிவு செய்திருக்கலாம்.
திறம்வாய்ந்த ஒருங்கிணைப்பு!
அப்புவாக நடித்திருக்கும் கண்ணா ரவி, ‘கைதி’ மூலமாக நமக்குப் பரிச்சயமான முகம். அவரது நடிப்பு சில இடங்களில் செயற்கையாகத் தெரிந்தாலும், இன்னொரு விஜய் சேதுபதி கிடைத்துவிட்டார் என்று சொல்ல வைக்கிறது.
போலீஸ் கான்ஸ்டபிளாக வரும் குமரவேல் பாத்திரம் புதிதல்ல என்றாலும், பெரிதாக போரடிக்கவில்லை. போலீஸ் அதிகாரியாக வரும் கல்யாணுக்குப் பெரிதாக வேலையில்லை.
ஆறுமுகம் பாலா, ஓஏகே சுந்தர், லிங்கமாக நடித்த அர்ஜுன் ராம் உட்பட அங்கொன்றும் இங்கொன்றுமாக தெரிந்த முகங்கள் படத்தில் உண்டு; நிறைய தெரியாத முகங்களும் உண்டு.
திரையில் கண்ணா ரவியைத் தவிர மற்றனைவரும் பெரிதாக தங்கள் இருப்பை வெளிப்படுத்த இடமில்லை.
நாயகன் மீது கவனம் குவிக்க வகை செய்தாலும், திரைக்கதையில் சுவாரஸ்யம் குன்றவும் இதுவே காரணமாகியிருக்கிறது.
ஜகதீஷ் ரவியின் ஒளிப்பதிவு ‘லைவ்’வாக ஒரு வறண்ட பிரதேசத்திற்குச் சென்று வந்த உணர்வை ஊட்டுகிறது. பிரகாஷ் கருணாநிதியின் படத்தொகுப்பு காட்சிகளில் சீர்மை தவழச் செய்திருக்கிறது.
பீரியட் படம் என்பதை உணரவைக்க, குறைவான பட்ஜெட்டில் நிறைவான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது கலை இயக்குனர் எழில் குழு.
ஜாவேத் ரியாஸின் இசையில் பாடல்கள் முழக்கங்களாகத் தெரிந்தாலும், ஆக்ஷன் காட்சிகளில் வேகம் கூட்டுகிறது பின்னணி இசை.
எழுத்தாளர் ஜெயமோகனின் ‘கைதிகள்’ சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்ட படம் இது;
வசனங்களில் ஆங்காங்கே வெளிப்படும் சொல்லாடல்களும் இயல்பான பேசுமொழிகளும் ஈர்க்கின்றன;
அதேநேரத்தில், அது இயல்பாக இருக்கிறதா என்ற கேள்வியும் சேர்ந்தே எழுகிறது.
தர்மபுரி வட்டாரத்தில் ஒருவர் திருநெல்வேலி தமிழ் பேசுவதற்கான காரணங்கள் ஏதும் திரைக்கதையில் விளக்கப்படவில்லை. போலவே, அந்த நிலப்பரப்பையும் மக்களின் வாழ்வையும் நம் மனதில் பதிய வைக்க இயக்குனர் முயற்சிக்கவில்லை.
ஆனாலும், காட்சிகளின் அழகியல் அடிப்படையில் பார்த்தால் நேர்த்தி மிகுந்து நிற்பதை மெச்சத்தான் வேண்டும்.
விளக்கம் வேண்டுமா?
ஆஹா ஓடிடியில் வெளியாகியிருக்கும் ‘ரத்தசாட்சி’, தமிழ் நிலத்தில் நக்சலைட்டுகளின் இருப்பை பதிவு செய்த படைப்பாக அடையாளம் காணப்படுகிறது. அதற்கேற்ப, நக்சலைட்டுகள் பற்றிய விளக்கம் திரைக்கதையின் தொடக்கத்தில் வசனமாகச் சொல்லப்படுகிறது.
90ஸ் கிட்ஸ்களுக்கு நக்சலைட்டுகள் பற்றிய புரிதலை ‘குருதிப்புனல்’ போன்ற படங்களும் ‘ராணுவ வீரன்’ போன்ற படங்களும் மட்டுமே தந்திருக்கின்றன. அது எந்தளவுக்குச் சரி என்பது இன்னொரு திசையில் நம்மை விவாதிக்க வைத்துவிடும்.
தர்மபுரி, கிருஷ்ணகிரி வட்டாரத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேண்டுமானால், நக்சல்பாரி அரசியல் பற்றிய அறிதல் கொஞ்சம் அதிகமாக இருக்கலாம்.
ஒடிசா, ஆந்திரா, மேற்கு வங்கத்தில் மட்டுமே அச்சிந்தனை வேரூன்றியதாகப் பலரும் நம்பி வரும் சூழலில், அது தொடர்பான சரியான முறையான விளக்கம் எதனையும் ‘ரத்தசாட்சி’ முன்வைக்காதது மிகப்பெரிய பலவீனம்.
மாறாக, இடதுசாரி சிந்தனையாளர்களுக்கான வரவேற்பு குறைந்துவரும் காலகட்டத்தில் நக்சலைட்டுகள் என்பவர்கள் ‘பழிக்குப் பழி’ எனும் வன்முறை சித்தாந்தம் கொண்டவர்கள் என்ற பார்வையே ‘ரத்தசாட்சி’யில் காணக் கிடைக்கிறது.
திரைக்கதை நகரத் தொடங்கிய சில நிமிடங்களில், வெளிநாடு சென்று மேற்படிப்பு படிக்க வருமாறு அழைப்பார் நாயகனை அவரது தோழி. நாயகன் மறுப்பார்.
அப்போது, ‘உங்களுக்கெல்லாம் பெரிய அறிவாளின்னு திமிர் இல்ல, நீங்க பண்றதெல்லாம் சுத்த முட்டாள்தனம்னு ஒருநாள் தெரிய வரும்’ என்று வசனம் பேசும் அந்த பெண் பாத்திரம்.
ஒட்டுமொத்த பொதுவுடைமை வாதங்களின் மீது இப்படைப்பு முன்வைக்கும் விமர்சனமாகவே அதனைக் கருதத் தோன்றுகிறது. அப்புறமென்ன, ரத்தமாவது சாட்சியாவது என்று முனுமுனுத்துவிட்டு கலைந்து போகத்தானே வேண்டும்!
– உதய் பாடகலிங்கம்