இந்திய ராணுவத்தால் ஒருபோதும் மறக்கமுடியாத நாள் டிசம்பர் 16.
இந்தியாவின் ஜென்ம வைரியாகக் கருதப்படும் பாகிஸ்தானை போரில் தோற்கடித்து, அந்நாட்டுப் படைகளை இந்திய ராணுவத்திடம் சரணடையச் செய்த நாள் இது என்பதால் நம் ராணுவ வீரர்கள் இந்நாளை வெற்றித் திருநாளாக கொண்டாடுகிறார்கள்.
இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின்போது பாகிஸ்தானுடன் இணைந்து கொண்டது கிழக்கு பாகிஸ்தான் என்று அறியப்பட்ட வங்கதேசம்.
ஆரம்பத்தில் ஒற்றுமையாக இருந்த கிழக்கு பாகிஸ்தானும், மேற்கு பாகிஸ்தானும் (தற்போதையை பாகிஸ்தான்) நாளடையில் தங்களுக்குள் முரண்படத் தொடங்கின.
குறிப்பாக கிழக்கு பாகிஸ்தான் மக்களிடம் இருந்து வரியை மட்டும் ஒழுங்காக வசூலிக்கும் மேற்கு பாகிஸ்தான் அரசு, தங்களுக்கு தேவையான நிதி உதவிகளைச் செய்வதில்லை என்றும், தங்கள் பிராந்தியத்தை பொருளாதார ரீதியாக முன்னேற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் கிழக்கு பாகிஸ்தான் பகுதியை சேர்ந்த தலைவர்கள் குற்றம் சாட்டினர்.
அத்துடன் கிழக்கு பாகிஸ்தான் பகுதியைச் சேர்ந்த மக்கள் பேசிவந்த வங்காள மொழிக்கு பாகிஸ்தான் அரசு உரிய மரியாதையை கொடுக்காததும் இரு பகுதிகளுக்கும் இடையிலான உரசலை அதிகப்படுத்தியது.
தங்கள் பிராந்தியத்தை பாகிஸ்தான் அரசு தொடர்ந்து புறக்கணித்து வந்ததால், அவாமி லீக் கட்சியின் தலைவராக இருந்த ஷேக் முஜிபுர் ரஹ்மானின் தலைமையில் அணிதிரளத் தொடங்கினர் வங்கதேசத்து மக்கள்.
பாகிஸ்தானின் அப்போதைய ஆட்சியாளரான யாஹியா கான், இதனால் கோபமடைந்தார். கிழக்கு பாகிஸ்தானில் அப்போது நடந்த தேர்தலில் அவாமி லீக் கட்சி வெற்றி பெற்றதை அவர் நிராகரித்தார்.
ஷேக் முஜிபுர் ரஹ்மான் பதவி ஏற்க அழைக்காமல் காலம் தாழ்த்தியதுடன் அப்பகுதியில் ராணுவ சட்டத்தைக் கொண்டு வந்தார். அவாமி லீக் கட்சியின் தலைவர்களை கைது செய்தார்.
இதனால் கொதித்துப் போன அப்பகுதி மக்கள் முக்தி வாஹினி என்ற அமைப்பை உருவாக்கி பாகிஸ்தானுக்கு எதிரான ஆயுதப் போரைத் தொடங்கினர்.
இதனால் 1971-ல் அந்நாட்டில் உள்நாட்டுப் போர் மூள ஆயிரக்கணக்கானோர் இந்தியாவுக்கு அகதிகளாக வரத் தொடங்கினர்.
பாகிஸ்தானில் நடந்துகொண்டிருந்த இந்தச் சம்பவங்களை எல்லாம் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார் இந்தியாவின் அப்போதைய பிரதமரான இந்திரா காந்தி.
ஒருபுறம் மேற்கு பாகிஸ்தான், மறுபுறம் கிழக்கு பாகிஸ்தான் என்று இந்தியாவின் இரு புறங்களிலுமாக இருந்துகொண்டு நம் நாட்டுக்கு பாகிஸ்தான் கொடுத்துவந்த தொல்லைகளுக்கு முடிவுகட்ட தக்க சமயத்தை எதிர்பார்த்து அவர் காத்திருந்தார்.
இந்தியாவின் உளவுப் படையான ரா, முக்தி வாஹினி அமைப்புக்கு ஆயுத உதவிகளை செய்துவந்ததாக பாகிஸ்தான் அரசு குற்றம் சாட்டியது.
அத்துடன் நில்லாமல் உள்நாட்டுப் போருக்கு காரணம் இந்தியாதான் என்று கூறி டிசம்பர் 3-ம் தேதி இந்தியாவின் மேற்குப் பகுதிகளில் போர் விமானங்கள் மூலம் குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியது. வரலாற்றில் பாகிஸ்தான் செய்த மிகப்பெரிய தவறாக இது மாறிப்போனது.
பாகிஸ்தானின் ஆணவத்தை அடக்க ஏற்கெனவே நேரம் பார்த்துக் கொண்டிருந்த இந்திரா காந்திக்கு, இது சரியான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.
இந்தியாவின் தலைமைத் தளபதியாக இருந்த மானெக்ஷாவை அழைத்த இந்திரா காந்தி, பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்டுமாறு உத்தரவிட்டார். இதற்கெனவே காத்திருந்தது போல இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது சீறிப் பாய்ந்தது.
ஒருபுறம் இந்திய ராணுவம் மறுபுறம் முக்தி வாஹினி அமைப்பு என்று கிழக்கு பாகிஸ்தானில் இரட்டை எதிரிகளைச் சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் திணறியது. மறுபுறம் மேற்கு பாகிஸ்தானின் முக்கிய நகரங்கள் மீது இந்திய விமானப்படை குண்டுமழை பொழிந்தது.
இந்தியாவின் அதிரடித் தாக்குதலை எதிர்த்து பாகிஸ்தானால் நீண்டநாள் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இந்தியாவின் மீது குண்டுகளை வீசிய 13 நாட்களிலேயே அந்நாடு தனது தோல்வியை ஒப்புக்கொண்டு சமாதானத்துக்கு வந்தது.
இந்தியப் படைகளிடம் தாங்கள் சரணடைந்ததற்கான ஒப்பந்தத்தில் 1971-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி கையெழுத்திட்டது. அத்துடன் கிழக்கு பாகிஸ்தான், வங்க தேசம் என்ற தனிநாடாக உருவானது.
அன்றைய தினம் மட்டும் பாகிஸ்தான் விவகாரத்தில் இந்தியா நுழைந்து அந்நாட்டில் இருந்து வங்கதேசத்தை பிரித்து தனி நாடாக ஆக்கியிருக்காவிட்டால் இன்று இந்தியாவின் இரண்டு தோள்களிலும் அமர்ந்து பாகிஸ்தான் தொல்லை கொடுத்துக்கொண்டிருக்கும்.
ஆக, பாகிஸ்தான் ராணுவத்தை சரணடைய வைத்ததுடன், அந்நாட்டையும் இரண்டாக பிரிக்க காரணமான இந்நாள் உண்மையிலேயே நமக்கு வெற்றித் திருநாள்தான்.
– பிரணதி