விசிக எம்.பி, ரவிக்குமார் கோரிக்கை
ராணுவத்தில் பெண்களை பாலின ரீதியாக பாகுபடுத்தக்கூடாது என்றும், அவர்களைத் தாக்குதல் பிரிவிலும் சேர்க்க வேண்டும் என்றும் மக்களவையில் விசிக பொதுச்செயலாளரும், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான துரை.ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து மக்களவையில் பேசிய அவர், இந்திய ராணுவத்தில் பெண்களுக்கு சமமான வாய்ப்பை உறுதி செய்ய பபிதா புனியா வழக்கில் 2020ம் ஆண்டு உச்சநீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டதாகவும், அரசாங்கங்கம் முன்வைத்த வாதங்கள் ‘பாலின ஸ்டீரியோடைப் ‘ என விமர்சித்ததாகவும்,
21 நவம்பர் 2022 இல், உச்ச நீதிமன்றம் ‘பபிதா புனியா’ தீர்ப்பை அமல்படுத்துவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டதாகவும், உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் இந்திய ராணுவத்தில் பபிதா புனியா தீர்ப்பை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பெண் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவதை நிறுத்தி வைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஜூனியர் அதிகாரிகள் பெண் அதிகாரிகளைப் புறக்கணிக்கும் போக்கையும்,
பபிதா புனியா வழக்கின் தீர்ப்புக்கு எதிராக இருக்கும் நடைமுறைகளையும் உடனடியாக நிறுத்துமாறு கோரப்பட்டுள்ளதாகவும்,
இராணுவத்தின் போர் பிரிவுகளை பெண்கள் அணுக முடியாததாக அமைத்திருப்பது நியாயமற்றது என்றும், பாலின சமத்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் கொள்கையைத் திருத்த வேண்டும் என்றும்,
பதவி உயர்வு மற்றும் பாலியல் துன்புறுத்தல் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணும் பாலினக் கொள்கை இந்திய ராணுவத்தில் இணைக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்திய ராணுவத்தில் பெண்களின் எண்ணிக்கையில் உள்ள மிகப் பெரிய ஏற்றத்தாழ்வைக் கருத்தில் கொண்டு, ஒட்டுமொத்தமாக மட்டுமல்லாமல், பல்வேறு பதவி உயர்வு மற்றும் பல்வேறு பிரிவுகளிலும்,
ராணுவத்தில் பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான துரை.ரவிக்குமார் வலியுறுத்தினார்.