– பத்மினியின் அந்திமக் காலப் பேச்சு
ஊர் சுற்றிக்குறிப்புகள் :
பத்மினி. தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நளினமான முகங்களில் இவருடைய முகமும் ஒன்று.
தலைகீழாகத் திருப்பிய வேல் ஒன்றின் அடிமுனை போன்று சரிந்த முகம். விரிந்த கண்கள். எப்போதும் குதூகலமாக இருப்பதைப் போன்ற பாவனை. சட்டென்று மாறும் முகபாவங்கள். நாட்டியத்தில் அப்படியொரு உற்சாகமான துள்ளல்.
கேரளாவிலிருந்து சென்னைக்கு வந்து, பத்மா சுப்பிரமணியத்தின் தந்தை இயக்குநர் கே.சுப்பிரமணியம் நடத்திவந்த நாட்டியப் பள்ளியில் தேர்ச்சி பெற்று, உதயசங்கர் எடுத்த நாட்டியப்படத்தில் தலைகாட்டினார்கள் பத்மினி, லலிதா, ராகினி சகோதரிகள்.
தொடர்ந்து பல படங்களில் நடனமாடி, அதன்பிறகு நடிப்பிற்குள் நுழைந்தார்கள்.
தமிழைக் குறுகிய காலத்தில் கற்றுக்கொண்டு தெளிவாகப் பேசி நடித்த பத்மினியும், சிவாஜிகணேசனும் இணைந்து நடித்த பல படங்களில், கறுப்பு வெள்ளைப் படங்களிலும், அவரது தோற்றம் வசீகரத்துடன் இருந்தது.
பணம், உத்தமபுத்திரன், மதுரைவீரன், மன்னாதி மன்னன், வஞ்சிக்கோட்டை வாலிபன் போன்ற படங்களில் பத்மினியிடம் வெளிப்பட்ட லாவகமான தோற்றமும், துடிப்பான நடனமும் ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் நடிக்கும்போது மாறிவிட்டது.
அவருடைய உடலமைப்பே சற்று மாறி, குரலில் இருந்த இனிமையும் மாறி முரடு தட்டிவிட்டது. இருந்தாலும், தில்லானா மோகனாம்பாள் படத்தில் மோகனா பாத்திரத்திற்கு முடிந்தவரை உயிரூட்டியிருந்தார்.
அமெரிக்காவுக்குப் போனாலும், அவருடன் பரதமும் அங்கு சென்றது. நடனப்பள்ளியை நடத்தி பரதத்தை அயல்மண்ணுக்குக் கொண்டுபோனார்.
‘பூவே பூச்சூட வா’ போன்ற படங்களில் முதுமையான காலத்திலும் நடித்திருந்த அவரைக் கடைசியாக சென்னை மயிலாப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நேரடியாகப் பார்க்க முடிந்தது.
தமிழ் சினிமாவில் ஆரம்பத்திலிருந்து அவர் நடித்த நடனக்காட்சிகளைத் தொகுத்து இரண்டு மணி நேரத்திற்குத் திரையிட்டபோது, முன்வரிசையில் பரவசமான பார்வையாளராக வேடிக்கை பார்த்தபடி இருந்தார்.
உடலும், தோற்றமும் வெகுவாகத் தளர்ந்திருந்தன. சில வார்த்தைகள் மட்டுமே பேசியவர் வந்திருந்தவர்களுக்கு நெகிழ்வான முகபாவத்துடன் நன்றி சொல்லிக் கொண்டிருந்தார்.
அப்போதைய தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் இப்படி அவர் சொல்லியிருந்தார்.
“அமெரிக்காவில் பல வருஷங்கள் இருந்துட்டேன். இருந்தாலும் இங்கு வர்றப்போ மனசுக்குச் சந்தோஷமா இருக்கு. கூடிய சீக்கிரம் இங்கேயே வந்துருவேன். வந்து எனக்குப் பிடிச்ச வேஷங்கள் வந்தா நடிப்பேன்’’.
தமிழகத்திற்கு வந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை.
பலருடைய மனங்களில் பதிந்திருந்த அந்த அருமையான முகம் நினைவுகளில் மட்டுமே தங்குகிற முகமாகிவிட்டது.
அணைந்துவிட்டது அந்த அற்புதம் காட்டிய நாட்டியப் பேரொளி.
– (2006 அக்டோபர் மாதம் வெளியான ‘புதிய பார்வை’ இதழில் மணா எழுதிய ஊர்சுற்றிக் குறிப்புகளில் இருந்து.)