நவீன இந்தியாவை உருவாக்கியவர் அப்துல் கலாம்!

– தமிழக ஆளுநர் புகழாரம்

சென்னை எம்.ஐ.டி.யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் சிலையை திறந்து வைத்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சிலைக்குக் கீழே வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் அவர் கலந்துரையாடினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், “மாணவர்களை வடிவமைப்பதில் எம்.ஐ.டி. சிறப்பான சேவையை வழங்கி வருகிறது. வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் கலாமை எம்.ஐ.டி.நிறுவனம் உருவாக்கியது பாராட்டுக்குரியது.

நாட்டிற்காக தன் வாழ்வை வாழ்ந்த ஏவுகணை நாயகன் அப்துல்கலாம். சாதிக்க வானமே எல்லை என்ற அவரது எண்ணங்களே இளைஞர்களுக்கு உந்து சக்தியாக உள்ளது. அப்துல்கலாம் வகித்த உயர் பதவி இளைஞர்களுக்கு உண்மையான உத்வேகம் அளிக்கிறது.

சிறந்த தலைவரான கலாம், எளிமையானவராகவும், பணிவானவராகவும் இருந்தார். நமது நாட்டை நன்கு புரிந்து கொண்டு அதன் பாரம்பரியத்தையும் பெருமையையும் நிலை நிறுத்தினார், நவீன இந்தியாவை கலாம் உருவாக்கினார்” என புகழாரம் சூட்டினார். 

Comments (0)
Add Comment