– போப் பிரான்சிஸ் வேண்டுகோள்
உக்ரைன் போர் தொடங்கி 10 மாதங்களை கடந்தும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த போரால் இரு தரப்பிலும் ஏராளமான ராணுவ வீரர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
இந்த போரை உடனே நிறுத்த வேண்டும் என போப் பிரான்சிஸ் தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில் போர் குறித்து பேசிய போப் பிரான்சிஸ், “போரால் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்கள் கடும் குளிரிலும், பசியாலும் வாடி வருகிறார்கள்.
அவர்கள் இதயங்களில் அமைதியும், மகிழ்ச்சியும் ஏற்படும் வகையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் அமைய வேண்டும்.
அனைவரும் கிறிஸ்துமஸ் பண்டிகை செலவுகளை குறைத்துக்கொண்டு உக்ரைன் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும்” எனக் கூறினார்.
இதனிடையே, “உக்ரைனில் தற்போது குளிர்காலம் என்பதால் ரஷிய ராணுவ வீரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
உக்ரைனில் மிகவும் குளிராக இருப்பதால் அந்த குளிரில் இருந்து பாதுகாப்பதற்கான வெப்ப உடைகள் ரஷிய வீரர்களிடம் இல்லை. இதனால் அவர்கள் கடும் குளிரில் உறைந்து போய் உள்ளனர்” என ரஷிய ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.