உதயநிதி பதவி ஏற்பும், வைரமுத்து கவிதையும்!

“மாண்புமிகு” ஆகியிருக்கிறார் தி.மு.க இளைஞரணிச் செயலரும், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான 44 வயதான உதயநிதி ஸ்டாலின்.

அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

• காலையிலேயே தந்தையும், முதல்வருமான மு.க. ஸ்டாலினிடம் வாழ்த்துப் பெற்றார்.

• ஆளுநர் மாளிகை காலையிலேயே சுறுசுறுப்படைந்தது. காலை 9.30 மணிக்குத் தேசிய கீதத்துடனும், தமிழ்த்தாய் வாழ்த்துடனும் துவங்கியது விழா.

வழக்கமான வட இந்திய பாணி உடையில் வந்திருந்த ஆளுநரிடம் உதயநிதியை அறிமுகம் செய்து வைத்தார் ஸ்டாலின்.

• அடுத்து “உயநிதி ஸ்டாலின் என்னும் நான்” என்று துவங்கி ”உளமாற உறுதி கூறி” ரகசியக் காப்புப் பிரமாணம் எடுத்துக் கொண்டார் உதயநிதி.

• ஆளுநர் ரவி கையொப்பம் இட்டதும் அவருக்கு மலர்க்கொத்தை வழங்கினார் உதயநிதி. பதிலுக்கு உதயநிதிக்கு மலர்க்கொத்து வழங்கினார் ஆளுநர்.

• ஐந்து நிமிடங்களுக்குள் பதவி ஏற்பு நிறைவடைந்து 9.35 மணியளவில் மறுபடியும் தேசிய கீதத்துடன் முடிவுக்கு வந்தது விழா. விழா நிறைவாக உதயநிதி உள்ளிட்ட அமைச்சரவையுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளப்பட்டது.

பின்னர் வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, தன் மீதான விமர்சனங்களுக்கு செயல்பாட்டின் மூலம் பதிலளிப்பதாகக் கூறினார்.

ஒவ்வொரு முறையும் தனக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டபோதும் பல்வேறு விமர்சனங்கள் வந்ததாகவும், அதற்கெல்லாம் செயல்கள் மூலம் பதிலளித்துள்ளதாகவும் கூறிய உதயநிதி, தனது பணிகளில் எதாவது குறைகள் இருந்தால் அதை என்னிடம் சுட்டிக் காட்டுங்கள் என்று ஊடகத்தினரிடம் கேட்டுக்கொண்டார்.

• பலதரப்பட்ட வாழ்த்துகள் உதயநிதியைப் பாராட்டி குவிந்து கொண்டிருந்த நேரத்தில் கவிப்பேரரசு வைரமுத்து இப்படி வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.

*****

உள்ளங்கவர் உதயநிதி!

கலைஞர் குடும்பம்
உங்களுக்குத் தந்தது
அறிமுகம் மட்டும் தான்.

இன்னொரு முகம் இருக்கிறது.
அறிவு முகம்.
செயலால் மட்டுமே அடைவது.
உங்கள் செயலால்
வாரிசு என்ற
வசை கழியுங்கள்.
தளபதி மகனே வருக!
தமிழர்க்கு மேன்மை தருக!
அமைச்சர் உதயநிதிக்கு
வாழ்த்துகள்!
*

Comments (0)
Add Comment