இடைவேளை – மதில் மேல் பூனை கணம்!

இந்தியத் திரையுலகில் தவிர்க்க முடியாத ஒரு சொல் ‘இடைவேளை’. ஒரு திரைப்படத்தைப் பொறுத்தவரை, இடைவேளை விடப்படும் இடம் கதையின் போக்கையும் வெற்றியையும் தீர்மானிக்கும் ‘தராசு முள்’ போன்றது.

திரைத்துறையினரைப் பொறுத்தவரை, அவர்களது வாழ்வின் திசையைத் தீர்மானிக்கக் கூடியது.

‘என்னப்பா, புரியாத மாதிரியே விளக்கினா என்னதான் பண்றது’ என்று முனுமுனுப்பது கேட்கிறது.

ரிலாக்ஸ் ப்ளீஸ்..!

குழந்தைப் பருவத்தில் திரையரங்கு என்றாலே என் நினைவுக்கு வருவது, அங்குள்ள கேண்டீனில் விற்கப்படும் தேங்காய் பர்பியும் பாப்கார்னும் பப்ஸும் தான்.

டூரிங் டாக்கீஸில் படம் பார்த்த அனுபவமிருப்பவர்களுக்கு, புரொஜக்டரில் ரீல் மாற்றும்போதெல்லாம் இடைவேளை விடப்பட்ட நினைவிருக்கும். அந்த நேரத்தில் முறுக்கு கூடையைத் தூக்கிச் சென்றால், பெண்கள் அமர்ந்திருக்கும் பகுதியில் சில்லறையை அள்ளிவிடலாம். அது ஒரு கணக்கு.

நகரங்களில் உள்ள திரையரங்குகளில் பெரும்பாலும் இரண்டு புரொஜக்டர்கள் இருக்குமென்பதால், அங்கெல்லாம் ஒரே ஒரு இடைவேளைதான். அதிகபட்சம் 10 அல்லது 12 நிமிடம் வரை அந்த இடைவெளி இருக்கும். கூட்டம் அதிகமிருந்தால், நேரம் கொஞ்சம் கூடும். அவ்வளவுதான்.

ஒரு படத்தின் முன்பாதி நம்மில் என்ன பாதிப்பை ஏற்படுத்தியது என்பதை அதன் ‘இடைவேளை’ காலத்தில் ஏற்படும் உணர்வெழுச்சியிலிருந்து அறியலாம்.

பால்ய காலத்தில், திருநெல்வேலி அருணகிரி தியேட்டரில் ‘இணைந்த கைகள்’ பார்த்தபோது இடைவேளை’ கணம் எரிச்சல் தருவதாக இருந்தது; ‘சீக்கிரம் படத்தை போடுங்களேண்டா’ என்பது போல கனகச்சிதமாக இடைவேளை காட்சி எடுக்கப்பட்டிருந்தது.

தமிழ்த் திரையுலகில் மிகச்சிறந்த இடைவேளைக் காட்சி என்று பட்டியலிட்டால், அதில் இணைந்த கைகளுக்கு நிச்சயமாக ஒரு இடம் உண்டு.

கயத்தார் டூரிங் டாக்கீஸில் ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’ பார்த்தபோது, விஜயகாந்த் போலவே அங்கிருந்த பெஞ்ச்களில் ஏறியோடி சுவரில் கால் பதித்து ‘லெக் ஷாட்’ அடிக்க வேண்டுமென்று தோன்றியிருக்கிறது.

விடலைப் பருவத்தினருக்கு ‘இடைவேளை’ கணம் என்பது ரொமான்ஸ் டைம். 70’ஸ் கிட்ஸை கேட்டால், ‘அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்’ என்று கதை கதையாகச் சொல்வார்கள்.

இடைவேளை ரொம்ப முக்கியம்!

ஹாலிவுட் படங்களுக்கான வெற்றி இலக்கணத்தைப் பொறுத்தவரை, ஒரு திரைக்கதையை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். அது என்னவென்று விளக்கி எரிச்சலூட்டப் போவதில்லை.

முதல் பகுதி முடியும்போது வரும் திருப்பமும் இரண்டாம் பகுதி முடியும்போது வரும் திருப்பமும் மிக முக்கியமானவை.

முதல் திருப்பம் கதையில் ஒரு முடிச்சை இறுக்கும். இரண்டாவது திருப்பம் அதனை விடுவித்து கிளைமேக்ஸில் காட்டப்படும் தீர்வை நோக்கி நகர வைக்கும்.

தமிழ் திரைப்படங்களைப் பொறுத்தவரை, அவை இரண்டும் இணைந்த புள்ளியாகவோ அல்லது அவற்றுக்கு இடையிலான இன்னொரு முகடாகவோ இடைவேளை பகுதி அமைக்கப்பட்டிருக்கும்.

பெரும்பாலும் இடைவேளை என்பது மதில் மேல் பூனை கணமாகவே தோன்றியிருக்கிறது. அதனைச் சரியாக கடந்த இயக்குனர்களே, இன்றும் தமிழ் திரையுலகில் வெற்றிகரமானவர்களாக கருதப்படுகின்றனர்.

சமீபத்தில் இயக்குனர் கரு.பழனியப்பன் அளித்த பேட்டியொன்றில், ‘பார்த்திபன் கனவு’ படத்தின் இடைவேளை காட்சிதான் முதலில் தன் மனதில் தோன்றியதாகக் கூறியிருந்தார்.

இந்தியத் திரையுலகில் மிகமுக்கியமான திரைக்கதையாசிரியர்களில் ஒருவரான கே.பாக்யராஜ் போன்றவர்கள், இடைவேளை காட்சியை வைத்துதான் மொத்த படமும் ரசிகர்களால் கொண்டாடப்படும் என்ற நம்பிக்கையில் உழைப்பைக் கொட்டியிருக்கின்றனர். 2000களின் பின்பாதி வரை, இடைவேளை முக்கியம் என்ற மனப்பாங்கே தொடர்ந்து வந்திருக்கிறது.

இடைவேளைக் காட்சி தந்த சஸ்பென்ஸ் தாங்க முடியாமல், ரத்தம் வரும் அளவுக்கு நகம் கடித்த ரசிகர்கள் கூட உண்டு (சும்மா சொல்லி வைப்போம்). அப்படிப்பட்ட இடைவேளைக்கான இடம், இப்போது தமிழ் திரையுலகில் வெகுவாகச் சுருங்கிவிட்டது.

ஹாலிவுட் இலக்கணப்படி அமைக்கப்படும் திரைக்கதை காரணமாக, இன்று ‘இடைவேளை’ என்பது பாப்கார்ன் விற்பனைக்கான வழியாகவே பார்க்கப்படுகிறது.

சமீபகாலமாக, எவ்வகையிலும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தராத, உற்சாகமூட்டாத, அவர்களது எதிர்பார்ப்பை எகிற வைக்காத ஒன்றாகவே இடைவேளைக் காட்சிகள் வடிவமைக்கப்படுகின்றன.

அதனாலேயே, ஒரு திரைப்படத்தை முதல் பாதி, இரண்டாம் பாதி என்று பார்க்கும் பார்வையும் மாற்றத்திற்கு உள்ளாகியிருக்கிறது. அவற்றிலிருந்து விலகி லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ தந்த பிரமிப்பை மறக்க முடியாது.

வரலாற்றில் இடைவேளை!

கோயில் திருவிழாக்களில் இசைக்கச்சேரி பார்த்தவர்களுக்கு, இடைப்பட்ட நேரத்தில் ஒரு சில கலைஞர்கள் ‘மிமிக்ரி’ செய்ததைக் கண்ட அனுபவமிருக்கும்.

அந்த நேரத்தில், பாடுபவர்களும் வாத்தியக்காரர்களும் ‘டீ’ குடித்து ரிலாக்ஸாக இருப்பார்கள்.

அப்படியே பின்னோக்கிச் சென்றால் நாடகம், தெருக்கூத்து போன்றவற்றிலும் இதே முறைதான் பின்பற்றப்பட்டது என்பதை உணர முடியும்.

ஐரோப்பிய நாடுகளில் நாடகங்கள், இசை நிகழ்ச்சிகள், மௌனப் பட திரையிடல்களுக்கு நடுவே இடைவேளை விடப்பட்டது.

அந்த இடைவெளியில் சம்பந்தப்பட்ட கலைஞர்கள் உடை, அலங்காரம் மாற்றுவதோ அல்லது மேடையில் பின்னணி மாற்றப்படுவதோ நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

அதனால், பார்வையாளர்களுக்குத்தான் அது ரிலாக்ஸ் டைம், அந்த கலைஞர்களுக்கு அல்ல.

அதேநேரத்தில், தொடர்ந்து சில மணி நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்க முடியாது என்பதற்காகத் தரப்படும் சிறு தளர்வாகவும் அது கருதப்பட்டிருக்கிறது.

அந்த மனோபாவம் விஸ்வரூபமெடுத்து, ‘என்னால ஒரே இடத்துல அரை மணி நேரம் கூட உட்கார்ந்திருக்க முடியாது’ என்பவர்களாலேயே ஓடிடி தளங்களுக்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது.

மனோவியல் ரீதியில் பார்த்தால், திரைப்பட இடைவேளை என்பது ஒரு திரைக்கதை காட்டும் உலகில் இருந்து விலகி யதார்த்த உலகிற்குத் திரும்ப அழைத்து வருவது.

ரசிகர்கள் ஒரு படத்தோடு மிக ஒன்றிப்போவது எந்தளவுக்கு திரைத்துறையினருக்கு முக்கியமோ, அதே அளவுக்கு அவர்கள் உடனடியாக அந்த உணர்ச்சியில் இருந்து விடுபட வேண்டுமென்பது ஒரு சமூகத்திற்கு மிக முக்கியம்.

அந்த உண்மையை உணர்த்துவதில் ’இடைவேளை’கள் முக்கியப் பங்காற்றியிருக்கின்றன.

ஒரு படம் நெடுநேரம் ஓடுவதாக இருக்கும் பட்சத்தில், இடைவேளை என்பது மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் ரசிகர்களை ஆரோக்கியமாக வைத்திருக்க மிகவும் அவசியம்.

ஷங்கரின் ‘இந்தியன்’ படம் வெளியாவதற்கு முன்னர், அதில் இரண்டு இடைவேளைகள் விடத் திட்டமிடப்பட்டதாகப் பத்திரிகைகளில் வாசித்திருக்கிறேன்.

இந்தியில் ராஜ்கபூர் இயக்கிய ‘மேரா நாம் ஜோக்கர்’, ‘சங்கம்’ படங்களில் இரண்டு முறை இடைவேளை விடப்பட்டிருக்கின்றன.

தமிழ்த் திரையுலகில் யாரும் அதனை முயன்று பார்க்கவில்லை. பழக்கதோஷத்தில் ‘கிளைமேக்ஸ்’ வந்துவிட்டதாக நினைத்து திரையரங்கை விட்டு ரசிகர்கள் போய்விடுவார்களோ என்ற பயம் காரணமாக இருந்திருக்கலாம்.

ஒரு திரைப்படம் அதிக நேரம் ஓடும் என்பதே அயர்வூட்டுவதாக கருதப்படும் இன்றைய காலகட்டத்தில் தான் கேஜிஎஃப் 2, விக்ரம், சீதாராமம் என்று சுமார் 3 மணி நேரம் ஓடும் படங்களும் பெருவெற்றியைப் பெறுகின்றன.

அவற்றுடன் முரண் கொள்ளும் வகையில், சராசரியாக ஒரு தமிழ் திரைப்படத்தின் நீளம் என்பது இரண்டு மணி நேரமாகக் குறைந்திருப்பதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

வேண்டுமா இடைவேளை!

தமிழில் பாடல்களே இல்லாமல் வந்த படம் என்ற பெருமையைக் கொண்டது ‘அந்த நாள்’. ஈஸ்ட்மென் வண்ணத்தில் தயாரான முதல் தமிழ் படம் ‘காதலிக்க நேரமில்லை’. தமிழின் முதல் சினிமாஸ்கோப் திரைப்படம் ‘ராஜராஜ சோழன்’.

இப்படிப்பட்ட சிறப்புகளுக்கு நடுவே, தமிழில் இடைவேளை இல்லாமல் எடுக்கப்பட்ட முதல் படம் இருக்கிறதா என்று தேடிப் பார்த்தேன்.

திரையரங்க உரிமையாளர்களின் ‘மைண்ட் வாய்ஸ்’ தெரிந்து, யாரும் அப்படிப்பட்ட முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.

அந்த வகையில், அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் ‘கனெக்ட்’ இடைவேளை இல்லா தமிழ் திரைப்படம் என்ற முத்திரையுடன் வெளியாகவிருக்கிறது.

இந்தியில் அமீர்கான் தயாரிப்பில் வெளியான ‘டெல்லி பெல்லி’, ‘தோபிகாட்’ உள்ளிட்ட சில படங்கள் இதே போன்றதொரு முயற்சியை பத்தாண்டுகளுக்கு முன்னர் செய்து பார்த்திருக்கின்றன.

இன்று மல்டிப்ளெக்ஸ்களில் பணியாளர்களே தேடி வந்து ‘ஸ்நாக்ஸ்’ வழங்கும் வழக்கம் புழக்கத்தில் உள்ளது. அதனால், தொடக்கம் முதல் படத்தின் இறுதி வரை எப்போது வேண்டுமானாலும் மொபைலிலேயே ‘ஆர்டர்’ செய்துகொள்ள முடியும்.

திரையரங்க வளாகத்திலேயே ஹோட்டல்கள் இருப்பதும்கூட அதிகரித்துவிட்டது. திரையரங்கம் என்பதே பொழுதைப் போக்குவதற்கான இடமாக கருதப்படுவதால், அங்கு தனியாக ‘ரிலாக்ஸ் டைம்’ வேண்டுமென்று நினைப்பவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

மேலை நாட்டு திரைப்படங்களில் ‘இடைவேளை’ காட்சியே கிடையாது. இருபதாண்டுகளுக்கு முன்பு வரை, இங்கு திரையிடப்படும் வெளிநாட்டு படங்களில் எப்போது இடைவேளை விட வேண்டுமென்பதை ‘புரொஜக்டர் ஆபரேட்ட’ரே தீர்மானித்தார்.

ஒலியும் ஒளியும் ஒன்றன்பின் ஒன்றாக ‘கட்’ ஆனால் இடைவேளை என்பதாகவே சில ஹாலிவுட் பட அனுபவங்கள் நமக்கு உணர்த்தியிருக்கின்றன.

அப்போதெல்லாம், ‘எதுக்கு இந்த இடைவேளை’ என்று சிலர் முனுமுனுப்பதையும் கேட்டிருக்கிறேன். ஏனென்றால், அப்படங்கள் அதிகபட்சம் 90 நிமிடங்கள் ஓடினாலே ஆச்சர்யம்தான்.

எந்த இடையூறுகளும் இல்லாமல் படம் பார்க்க வேண்டுமென்ற மனப்பாங்கு இன்று பெருகியிருப்பதை நிச்சயம் கணக்கில் எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

அந்த வகையில், இனிவரும் நாட்களில் ‘இந்த படத்தில் இடைவேளை உண்டு’ என்ற அறிவிப்பு வெளியாகும் நிலை விரைவில் உருவாகலாம்.

– உதய் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment