சென்னையில் சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 15 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவில், தமிழ்ப் படங்கள் உள்பட 48 நாடுகளைச் சேர்ந்த 107 படங்கள் திரையிடப்படவுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும், 12 தமிழ் படங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அதில் மூன்று சிறந்த படங்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.
கார்கி, நட்சத்திரம் நகர்கிறது, இரவின் நிழல், விஜய் சேதுபதி-சீனு ராமசாமியின் மாமனிதன், ராம்நாத் பழனிகுமாரின் ஆதார், கசடதபற, பஃபூன், இறுதி பக்கம், நயன்தாரா ஓ2 ஆகிய தமிழ்ப் படங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில், சென்னையில் நடைபெறும் உலக திரைப்பட விழாவுக்காக ஒதுக்கப்பட்ட தியேட்டர்கள் அனைத்தும் சிறியவை என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
இதுபற்றி கருத்து வெளியிட்டுள்ள ஸ்ருதி டிவியின் கபிலன், “சென்னை உலக திரைப்பட விழா தியேட்டர்கள் அனைத்தும் சிறியது. பல ஊர்களில் இருந்தும் கல்லூரி மாணவர்கள் வருவார்கள். அதற்கு உட்லேண்ட்ஸ் மாதிரி பெரிய திரை வேண்டும். தேவி அரங்கத்தை கேட்டிருக்க வேண்டும். அவதாரை தவிர பெரிய படம் ஏதும் வெளியாக இல்லை” என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதேபோல் கருத்து தெரிவித்துள்ள அருண், “திருவனந்தபுரம், பெங்களூர் போன்ற ஊர்களில் நடக்கும் திரைப்பட விழாக்களை எல்லாம் பார்க்கும்போது பொறாமையாக இருக்கும். சென்னையில் நடக்கும் திரைப்பட விழா அதுபோன்று பிரம்மாண்டமாக நடக்க ஏற்பாடுகள் செய்யப்படவில்லை” என விமர்சித்துள்ளார்.