வைக்கம் நினைவகத்திற்கு நிலமளித்த ஜானகி எம்ஜிஆர்!

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவையொட்டி தி.க தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கை.

****

கேரள மாநிலம் வைக்கத்தில் தீண்டாமை ஓழிப்பு போராட்டம் நடத்தி தந்தை பெரியார் வெற்றி பெற்றதன் நூற்றாண்டு விழா அடுத்தாண்டு நடைபெறவுள்ளது.

அதில் தமிழக கேரள முதலமைச்சர்கள் பங்கேற்பார்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். தனது 90-வது பிறந்தநாளையொட்டி வைக்கம் சென்று தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் கி.வீரமணி.

பின்னர் அவர் விடுத்துள்ள அறிக்கையில், வைக்கத்தில் தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றவர் வைக்கம் வீரர் தந்தை பெரியார். வைக்கம் நிகழ்வின் நூற்றாண்டு விழா 2024 இல் வருகிறது. தமிழ்நாடு அரசின் முதலமைச்சரும், கேரள முதலமைச்சரும் இணைந்து அவ்விழாவை சிறப்புடன் நடத்துவர் என்பது உறுதி.

22 ஆண்டுகளுக்குமுன் (1994) அந்த வைக்கத்தில் நினைவகமும், தந்தை பெரியார் சிலையும் (காட்சியகம் உள்பட) தமிழ்நாடு அரசு சார்பில் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களது சீரிய முயற்சி – ஒத்துழைப்போடு, உருவாக்கப்பட்டது.

அதன் பிறகு மேனாள் முதலமைச்சர் என்ற பெருமை படைத்த, வைக்கம் நகரைச் சார்ந்த எம்.ஜி.ஆர் துணைவியார் வி.என்.ஜானகி அம்மையார் தனது நிலத்தில் ஒரு பகுதியை இதற்கு வழங்கி, நினைவகம் உருவாக்கப்பட்டது. எனது தலைமையில், அமைச்சர் டாக்டர் நாவலர் திறந்து வைத்தார்.

2024 இல் நூற்றாண்டு விழா!

வருகிற 2024 இல் வைக்கம் சத்தியாகிரகம் என்ற அந்தப் போராட்ட வெற்றியின் நூற்றாண்டு வருகிற நிலையில், நிச்சயம் அதனை நமது இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களும் கலந்து, ஒரு பெரும் சமூகநீதி – மனித வெற்றித் திருவிழாவாக புதுப்பொலிவோடு, சாதி – தீண்டாமை ஒழிப்புக் கொள்கையின் வலிமையோடு நடப்பது உறுதி.

சாதி தீண்டாமை ஒழிப்பு மாபெரும் மாநாடு

வருகிற 2023 நவம்பர் மாதம் – 99 ஆம் ஆண்டின் நிறைவாக வைக்கம் வெற்றி விழா – ஜாதி தீண்டாமை ஒழிப்பு மாபெரும் மாநாடாக வைக்கம் வீதிகளில் கொள்கைப் பேரணியோடு நடத்திடுவோம்.

நமது முற்போக்கு அமைப்புகள், இடதுசாரி தோழர்களின் முழு ஒத்துழைப்பு நிச்சயம் கிட்டும் என்ற நம்பிக்கையும் நமக்கு உண்டு என்று அவர் கூறியுள்ளார்.

நன்றி: தீக்கதிர்

Comments (0)
Add Comment