தமிழ் படித்தவர்களுக்குத் தகுதி இல்லையா?

– புறக்கணிக்கப்படும் தமிழ்ப் பட்டதாரிகள்:

பிற துறைப் பேராசிரியர்கள் தமிழ்ப் பாடத்தை நடத்தலாம் என்பது தமிழை மட்டுமல்ல, தமிழ் படித்தவர்களையும் அவமானப்படுத்துவதாக இருக்கிறது.

பள்ளி அளவில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்றவற்றை ஒரு பாடமாக எடுத்துப் படித்தவர்களைக் கல்லூரியில் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் அறிவியல் தொடர்பான பாடத்தை நடத்தச் சொல்ல முடியுமா? அது இயலாதபோது தமிழ் மட்டும் எப்படி எடுப்பார் கைப்பிள்ளையாகும்?

பள்ளி ஆசிரியர்கள் தகுதித் தேர்வு அடிப்படையில்தான் தேர்வு செய்யப்படுகிறார்கள். அப்படியிருந்தும்கூட, ‘கல்வி நிறுவனங்களுக்கு நேரில் சென்று படித்தவர்கள் மட்டுமே ஆசிரியர் பணிக்கு நியமனம் செய்யப்படும் வகையில் ஆசிரியர் நியமன நடைமுறையை மூன்று மாதங்களுக்குள் மறுசீராய்வு செய்ய வேண்டும்’ எனப் பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வித் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொலைதூரக் கல்விமுறையில் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்குத் தகுதியானவர்கள் அல்ல எனவும் அது தெரிவித்துள்ளது.

பள்ளி ஆசிரியர் நியமனத்தில் இத்தனைக் கெடுபிடிகள் பின்பற்றப்படும்போது, பொறியியல் கல்லூரிகளில் தமிழ்ப் பாடத்தை நடத்த தமிழை ஒரு பாடமாக மட்டுமே படித்திருந்தால் போதும் என்பது எவ்வகையில் நியாயம்?

இத்தனைக்கும், ஆளும் தி.மு.கவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக உள்ளார்.

திமுக அரசு தமிழை வளர்க்கவும் மேம்படுத்தவும் முனைப்புக்காட்டி வரும் நிலையில், தமிழ்நாட்டின் பொறியியல் கல்லூரிகளில் தமிழ் படித்தவர்கள் புறக்கணிக்கப்படுவது நகைமுரணாக இருக்கிறது.

ஒருபுறம், ‘தமிழ் வாழ்க’ முழக்கம்; மறுபுறம், தமிழ் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுவதைப் பார்த்து மௌனம். இது அரசின் இரட்டை நிலைப்பாட்டைத்தான் காட்டுகிறது!

-பிருந்தா சீனிவாசன்

நன்றி: இந்து தமிழ் திசை

Comments (0)
Add Comment