‘கோவா, உத்தரகாண்ட்டில் செய்தது போல, குஜராத்திலும் காங்கிரசின் வெற்றியை ஆம் ஆத்மி சீர்குலைத்து விட்டது’ என ப. சிதம்பரம் குற்றம் சாட்டி உள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரான ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசிய போது, “குஜராத்தில் காங்கிரசுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இல்லை என்றும், ஆனாலும் பொதுவாக ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு கட்சியும் தனது சிறப்பை முன்வைத்து, கிடைக்கக்கூடிய அனைத்து வளங்களையும் பயன்படுத்தி முன்னேறிச் செல்ல வேண்டும்” என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “அந்த வகையில், குஜராத் மாநில காங்கிரஸ், நாடு முழுவதும் காங்கிரசில் இருக்கும் சிறந்த தலைவர்களை திரட்டி, அவர்களை பிரசாரத்தில் ஈடுபடுத்தியிருக்க வேண்டும்.
கடிமான தேர்தலில் அமைதியான பிரசாரம் என்று எதுவும் இல்லை என்றே நான் நம்புகிறேன்.
எனவே குஜராத் தேர்தலில் இருந்து காங்கிரஸ் கற்க வேண்டிய பாடங்கள் உள்ளன. கோவா, உத்தரகாண்ட்டில் செய்தது போல குஜராத்திலும் ஆம் ஆத்மி காங்கிரசின் வெற்றியை சீர்குலைத்து விட்டது.
33 தொகுதியில் காங்கிரசின் வெற்றி வாய்ப்பை ஆம் ஆத்மி தகர்த்து விட்டது. ஆனாலும், பஞ்சாப், அரியானாவை தவிர்த்து டெல்லியை தாண்டி ஆம் ஆத்மிக்கு பெரிய அளவில் ஈர்ப்பு எதுவும் இல்லை.
குஜராத்தில் பாஜக வென்றாலும், இமாச்சல், டெல்லி மாநகராட்சி தேர்தலில் அதன் தோல்வி மிகப்பெரிய பின்னடைவாகும்.
2024 மக்களவைத் தேர்தலில் பாஜக அல்லாத கூட்டணியை வழிநடத்த சிறந்த கட்சியாக இன்னமும் காங்கிரஸ் உள்ளது” என அவர் கூறினார்.