ஜானகி எம்ஜிஆர்: வரலாற்றுத் தருணங்களின் பூந்தோட்டம்!

முனைவர் குமார் ராஜேந்திரன் தொகுத்து மெரினா புக்ஸ் வெளியிட்டுள்ள அன்னை ஜானகி எம்ஜிஆர் நூற்றாண்டுச் சிறப்பு மலர் மிகச் சிறப்பான தமிழக அரசியல் வரலாற்று ஆவணமாக வெளிவந்திருக்கிறது.

முன்னுரையில் தொகுப்பாசிரியர், “பாட்டியாக இருந்து அவர் என்னை அரவணைக்கும் போதெல்லாம் என் அன்னை அரவணைப்பதைப் போன்றே உணர்ந்திருக்கிறேன்” என்று குறிப்பிடுகிறார்.

முதல் பக்கத்திலேயே ஓவியர் ராஜசேகரின் ஜானகி அம்மாவின் உயிரோவியம்.

மிக அழகிய வடிவமைப்பில் நேர்த்தியான அச்சமைப்பில் உருவாகியுள்ள அன்னை ஜானகி எம்ஜிஆர் நூற்றாண்டு மலரில் ஜானகி அவர்களின் மிக அரிதான வாழ்க்கை வரலாற்றுப் புகைப்படங்கள் அங்காங்கே விரவிக்கிடக்கின்றன.

ஜானகி அம்மா 100 என்ற தலைப்பில் அவரது வாழ்க்கையின் அற்புதத் தருணங்களை விளக்கும் முக்கியமான நூறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

முதல் தகவலே அவரது பெயருக்கான விளக்கத்தைத் தருகிறது. வைக்கம் நாராயணி ஜானகி என்கிற பெயரைத்தான் சுருக்கி வி.என்.ஜானகி என்று பலரும் அழைத்தார்கள்.

கும்பகோணத்தில் பள்ளிப்படிப்பை முடித்த அவருக்கு தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராட்டியம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் புலமை உண்டு என்கிற செய்தி ஆச்சரியமளிக்கிறது.

பெண்களே பெண்களுக்கு மேக்கப் போடவேண்டும் என்று சொன்னவர் ஜானகி. அப்போதே திரையுலகில் அவரது உரிமைக்குரல் ஒலித்திருக்கிறது.

நாம் மேம்போக்காக கடந்துபோகிற பெயர்களின் பின்னால் ஆழமான வரலாறுகள் புதைந்திருக்கின்றன என்பதை ஜானகி அம்மா மலரின் மூலம் நாம் அறியமுடிகிறது.

நாட்டிய நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய பின்னர் பல்கலை வித்தகம் தெரிந்த ஒரு நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, பின்னர் மாபெரும் தலைவரின் மனைவியாகி, தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமையுடன் மறைந்தவர் பெருமைக்குரிய வி.என். ஜானகி அம்மா.

ராமாபுரம் தோட்டத்தில், வீட்டில் வேலை செய்த பணியாளர்களை அன்பாகவும் அக்கறையாகவும் அவர் கவனித்துக்கொண்டிருக்கிறார்.

ஒரு மாபெரும் நடிகர் மற்றும் முதல்வரின் மனைவி என்ற பெருமைகளைப் பெற்ற பிறகும் ஜானகி, மிக எளிமையாகவும் கருணை கொண்டவராகவும் இருந்திருப்பது நெகிழ்ச்சி அளிக்கிறது.

ராஜமுக்தி படத்தில் நடிக்கும்போதுதான் முதன்முறையாக பொன்மனச் செம்மல் எம்ஜிஆரை சந்தித்திருக்கிறார்.

எம்ஜிஆர் கனவை நிறைவேற்றிய ஜானு அக்கா பேரன்புடன் தன் அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறார் பரதநாட்டியக் கலைஞர் டாக்டர் பத்மா சுப்ரமணியம்.

“ஜானு அக்கா மறைந்தபோது ஏற்பட்ட இழப்பு எங்க குடும்பத்தில் ஒருவரை இழந்த வலியைத் தந்தது” என்கிறார் பத்மா சுப்ரமணியம்.

ஜானகி அம்மா நடித்த திரைப்படங்களின் பட்டியலை மலரில் வெளியிட்டிருப்பது சிறப்புக்குரியது.

நடிகை விஜயகுமாரி, சச்சு, குட்டி பத்மினி ஆகியோர் எழுதிய கட்டுரைகள் அந்த பெருமாட்டியின் நினைவுகளை மீட்டெடுக்கின்றன.

“அடக்கமாக கொடுத்ததை தன் திறமைக்கு ஏற்றபடி ஏற்று நடிக்கும் நல்லதொரு நடிகை வி.என்.ஜானகி” என்று பாராட்டி எழுதியுள்ளது 1948 – ல் வெளிவந்த நாரதர் இதழ்.

மருதநாட்டு இளவரசி, நாம் போன்று எம்ஜிஆர், ஜானகி இருவரும் இணைந்து நடித்த திரைப்படங்களுக்கு வசனம் எழுதிய கலைஞர், ஜானகி அம்மாவை அக்கா என்றே அழைத்திருக்கிறார்.

புரட்சித் தலைவருக்காகவே தன்னை அர்ப்பணித்த ஜானகி அம்மா என்று எழுதியுள்ளார் சைதை துரைசாமி. “ஜானகி அம்மா அவர்களின் மேற்பார்வையில்தான் உணவு பரிமாறப்படும் என்பதை நினைக்கின்றபோது, இன்னும் அவர்களைப் பற்றிய அந்த மதிப்பும் மரியாதையும் பசுமையாக நீடித்துக்கொண்டே இருக்கிறது” என்று நெகிழ்ந்து பேசுகிறார்.

புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், “ஜானகி எம்ஜிஆர் அவர்கள் தன் சொந்த பணத்தில் வாங்கிய அந்த இடத்தை அதிமுகவுக்கு பெருந்தன்மையோடு அளித்தார்” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால், அதிமுக தலைவர்களின் இன்றைய நிலையை நினைத்துப் பார்க்கும்போது வேடிக்கையாக இருக்கிறது. சிறு துரும்பைக்கூட கிள்ளிக் கொடுக்காதவர்கள் சொந்தம் கொண்டாடிவருகிறார்கள். இதுதான் அரசியல் எதார்த்தமா…

பத்திரிகையாளராக ஜானகி அம்மா பங்கேற்ற அரசியல் நிகழ்வுகளில் செய்தியாளராகப் பணியாற்றிய அனுபவங்களைப் பற்றி பசுமையாக நினைவு கூர்ந்துள்ளார் மணா.

சேலத்தில் ஜானகி அணியின் முதல் மாநாடு. அதற்குச் சென்றிருந்தபோது, பலருடைய பேச்சில் தெரிந்த அதிகாரத் தொனி ஜானகியம்மாளின் பேச்சில் இல்லை என்கிறார்.

மலரின் கடைசிப் பக்கத்தில் ஜானகி அம்மாவே வந்து நேரில் பேசுவது போன்ற உணர்வைத் தருகிறது அவரது சொல்.

“சாப்பிட்டீங்களா, இந்த சங்கீதம்தான் இந்தத் தோட்டத்துக்கு யார் வந்தாலும் முதலில் எழும் அடிநாதம்.

என் அத்தானுக்கு நிறைய பேர் கூடிச் சாப்பிடவேண்டும் என்ற விருப்பம் அதிகமாக உண்டு” என்று மனந்திறந்து பேசியிருக்கிறார் ஜானகி. எத்தனை நிஜம். அதுதான் பொன்மனம்.

ஜானகி அம்மாவின் நூற்றாண்டு தொடங்கும் வேளையில் வெளிவந்துள்ள இந்த மலர், ஆழமான அரசியல் நினைவுகளின் தொகுப்பு. இதுவொரு மலர்தான், ஆனால் தமிழக அரசியல் வரலாற்றுத் தருணங்களின் பூந்தோட்டமாக மலர்ந்திருக்கிறது.

அன்னை ஜானகி எம்ஜிஆர் -100

நூற்றாண்டுச் சிறப்பு மலர்

தொகுப்பு : முனைவர் குமார் ராஜேந்திரன்

வெளியீடு: மெரினா புக்ஸ்

தரணி காம்ப்ளக்ஸ்,

1 ஏ, திருநாத முதலி நகர், திருப்பத்தூர், தமிழ்நாடு – 635 601

பா. மகிழ்மதி

************

அன்னை ஜானகி எம்.ஜி.ஆர் நூற்றாண்டுச் சிறப்பு மலரைப் பெற கீழே உள்ள இணைப்பைத் தொடுக…

https://marinabooks.com/detailed?id=1499-0326-2509-9479

Comments (0)
Add Comment