முப்பது ஆண்டுகளுக்கு முன் மும்மூர்த்திகள்!

விஜய், அஜித், வடிவேலுவின் ஆரம்ப நாட்கள்!

இளைய தளபதி விஜய், அல்டிமேட் ஸ்டார் அஜித், வைகைப்புயல் வடிவேலு ஆகிய மூவரும் இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நட்சத்திரங்கள்.

ஆண்டு வருவாய் என கணக்கிட்டால், மூவரும் கிட்டத்தட்ட ஒரே ஊதியம் பெறும் வருமான ‘கிளப்’பில் அங்கம் வகிப்போர்.

மூவருமே ஒரே கால கட்டத்தில் திரை உலகுக்கு வந்தவர்கள்.

மூன்று பேரின் ஆரம்ப நாட்கள், அத்தனை பிரகாசமாக இல்லை என்பதே உண்மை.
முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய அவர்களின் சூழல் மற்றும் இன்றைய இமாலய வளர்ச்சியை அலசலாம்.

விஜய்

’நாளைய தீர்ப்பு’ மூலம் அறிமுகமான விஜய், அந்தப்படத்தில் பெரிய எதிர்பார்ப்பு எதனையும் ரசிகர்களிடத்தில் ஏற்படுத்தவில்லை.

சில பத்திரிகைகள், ‘’இத்தனூண்டு இருந்து கிட்டு, பயில்வான்களை எல்லாம் தூக்கி வீசுறார்.. சரியான காமெடி‘’ என கிண்டல் செய்தபோது, அந்த விமர்சனங்களை அவர் படித்திருப்பாரா? என தெரியவில்லை.

ஏனென்றால், அப்போது அவர், தந்தையின் சொல் கேட்பவராக, அவர் ஆட்டுவித்தபடி ஆடும் குழந்தையாகவே இருந்தார்.

விஜய் சார்பில், அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரே பத்திரிகைகளிடம் பேசுவார்.

வேறு தயாரிப்பாளர்கள், மகனைத்தேடி வராததால் கடன் வாங்கி எஸ்.ஏ.சி.யே, விஜய்யை ஹீரோவாக வைத்து தொடர்ச்சியாக படம் டைரக்டு செய்தார்.

மாஸ்டர் படத் தயாரிப்பாளர், அவரது உறவினர் என்பதால், விஜய் படங்களுக்கு ஆரம்ப காலத்தில் அவர் பெரிதும் உதவினார். 

‘செந்தூரப்பாண்டி’யின் வசூல் மற்றும் ‘பூவே உனக்காக’ படத்தின் வெற்றி, விஜய்க்கு ஒரு சந்தையை உருவாக்கிக் கொடுத்தது.

அப்போதெல்லாம், மகனுக்காக சந்திரசேகரே கதை கேட்பார். கால்ஷீட் கவனித்துக் கொண்டார்.

ரஜினிக்கு நிகரான மார்க்கெட், சம்பளம் என உயர்ந்த பின், விஜய் – தானே கதை கேட்கிறார். தனது கால்ஷீட்களை தானே தீர்மானிக்கிறார்.

ரஜினியை விட கூடுதல் சம்பளம் வாங்குவதாக கூறப்படுவது உண்மையா என தெரியவில்லை. ஆனால் ரஜினியிடம், முன்பு உதவியாளராக இருந்த (டச்சப்) ஜெயராமனும், மக்கள் தொடர்பாளர் ரியாஸ் அகமதுவும் இன்று விஜய்யுடன் இருக்கிறார்கள்.

அஜித்

விஜய்க்கு தந்தையின் பின்புலம் இருந்தது. அஜித்துக்கு கிடையாது. கீழே விழுந்தாலும் தானேதான் எழ வேண்டும்.

ஆரம்ப காலங்களில் (அமராவதி, வான்மதி) அஜித்தின் படங்கள் பெரிய வெற்றி அடையவில்லை. மோசமில்லை ரகம் தான். அப்போது ஊடகங்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். ஆசை, காதல் கோட்டை படங்கள் வந்தபின் அஜித்துக்கு நிறைய ரசிகர் மன்றங்கள் முளைத்தன. ஊக்குவித்தார்.

அல்டிமேட் ஸ்டார் என பட்டம் சூட்டினார்கள். ஏற்றுக்கொண்டார்.

’உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாத’ இவரது குணம் – அஜித்துக்கு பல சிக்கல்களை ஏற்படுத்தியது.

நாளாவட்டத்தில் அஜித்தின் சந்தை நிலவரம், பிரமாண்டமாய் விரிந்த நிலையில், தனது மன்றங்களை கலைத்தார்.

அல்டிமேட் ஸ்டார், தல பட்டங்களையும் துறந்தார்.

ஊடகங்களில் பேசுவதை அறவே நிறுத்திக் கொண்டார்.

ஒரு காலகட்டத்தில் இளையராஜா, தனக்கென ஒரு இரும்புக்கோட்டை கட்டி வாழ்ந்தது போல், இன்று அஜித், தனது ஜாகையை அமைத்துக்கொண்டார்.

வடிவேலு

மதுரையில், போட்டோ பிரேம்களுக்கு தேவைப்படும் கண்ணாடி அறுத்து, நாட்களை ஓட்டிய மிகச்சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவர் வடிவேலு.
ராஜ்கிரணின் ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் சின்ன வேடத்தில் அறிமுகமானார்.

பின்னர் சென்னை பனகல் பார்க் அருகே இருந்த ராஜ்கிரண் அலுவலகத்திலேயே தங்கி வாய்ப்பு தேட ஆரம்பித்தார். உடன் நம்பிராஜன் எனும் நடிகரும் தங்கி இருந்தார்.

தனது ஒவ்வொரு வளர்ச்சியின் போதும், அதனை பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

‘கிழக்கு சீமையிலே’ படத்தில் நடித்த போது “நீ கறுப்பு நாகேஷ்” என பாரதிராஜா சிலாகித்ததை, வடிவேலு சின்னக்குழந்தை போல் எல்லோரிடமும் சொல்லி மகிழ்ந்தார்.

படங்கள் குவிய ஆரம்பித்தபின் டிரஸ்ட்புரம் ராகவேந்திரா கல்யாண மண்டபம் எதிரே வாடகைக்கு வீடு பிடித்து தங்கினார்.

மதுரையை சேர்ந்த தனது பால்ய நண்பன் முருகேசனை உதவியாளராக வைத்துக் கொண்டார்.

லட்சங்களில் சம்பளம் வாங்க ஆரம்பித்த பின், சாலிகிராமத்தில் சொந்தமாக அலுவலகம் கட்டினார்.

அருகேயே பிரமாண்ட பங்களா என உச்சத்துக்கு சென்று, ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து, ஹீரோ என்ற அந்தஸ்துக்கு உயர்ந்துள்ளார்.

– பி.எம்.எம்.

Comments (0)
Add Comment