பார்வையற்றோரை கதைக்களமாகக் கொண்ட படங்கள்!
சிற்பமோ, ஓவியமோ – தலை முதல் கால் வரையிலான மற்ற அவயங்களை உருவாக்கி விட்டு கடைசியாகத்தான் அவற்றுக்கு ’கண்’ வைப்பார்களாம், கலைஞர்கள். ‘விழி’யின் மகத்துவம் அப்படி.
தமிழ் சினிமாக்களில் கூட கண்ணுக்கு மவுசு உண்டு. படத்தின் நாயகன் அல்லது நாயகிக்கு மற்ற அங்கங்களில் குறை இருந்தால், அதனை ஏற்றுக் கொள்வார்கள்.
ஆனால் கண் இல்லாவிட்டால், ரசிகர்களால் ஜீரணிக்க முடிவதில்லை.
16 வயதினிலே சப்பாணி – கெந்தி கெந்தி நடப்பார். பிதாமகன் விக்ரமுக்கு பேசும் திறன் கிடையாது. முள்ளும் மலரும் காளிக்கு, இடைவேளைக்கு பிறகு ஒற்றைக் கை இருக்காது.
மேற்சொன்ன படங்களை மக்கள் கொண்டாடினார்கள். வசூல் குவிய வைத்தார்கள்.
விழி இழந்த நாயகன் மற்றும் நாயகியை களமாக வைத்து பின்னப்படங்களுக்கு வரவேற்பு அளித்தது இல்லை.
சில ஜாம்பவான்களின் படங்களை மட்டும் இங்கே பார்க்கலாம்.
ராஜபார்வை
கமலஹாசன், தனது சகோதரர்கள் சந்திரஹாசன், சாருஹாசன் ஆகியோருடன் இணைந்து தயாரித்த முதல் படம் – ராஜபார்வை.
1981-ம் ஆண்டு வெளிவந்த இந்தப்படத்தை சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கினார்.
தோட்டாதரணி இதன்மூலம் தான் கலை இயக்குநராக அறிமுகம் ஆனார்.
எல்லாவற்றுக்கும் மேலாக இது – கமலஹாசனின் நூறாவது படம்.
பார்வையற்ற வயலினிஸ்ட்டாக கமல் நடித்திருந்த இந்தப்படம் – நல்ல விமர்சனத்தை பெற்றது. ஆனால் வசூல் ரீதியாக தோல்வி.
காதல் ஓவியம்
80-களில் தமிழ்த்திரை உலகை தனது ஒற்றைக்கையில் வைத்திருந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் படம்.
ராஜபார்வை வெளியாகி ஓராண்டு கழித்து (1982) வெளிவந்த சினிமா.
இளையராஜாவின் இசையில் எட்டுப் பாடல்கள். அத்தனையும் தேன் சொட்டுக்கள்.
ஹீரோவுக்கு கண் தெரியாது. படம் – வந்த சுவடு தெரியாமல் மறைந்துபோனது.
பாரதிராஜாவின் அறிமுகங்களுக்கு, கோடம்பாக்கத்தில் எப்போதுமே, பெரிய வாய்ப்புகள் காத்திருக்கும். தானாகவே இயக்குநர்கள் தேடிவருவார்கள்..
ஆனால் காதல் ஓவியம் ஓடாததால் இதன் ஹீரோ கண்ணனுக்கு எந்த வாய்ப்பும் கிட்டவில்லை.
மீண்டும் ஒரு காதல் கதையில் சின்ன வேடம் செய்தார். பாரதிராஜாவுக்கு ஏமாற்றத்தை கொடுத்த ஒரே படம் – காதல் ஓவியம்.
கை கொடுக்கும் கை
ரஜினிகாந்த் நாயகனாகவும், ரேவதி நாயகியாகவும் நடித்த படம் கை கொடுக்கும் கை. மகேந்திரன் டைரக்டு செய்திருந்தார்.
ரஜினியின் நெருங்கிய நண்பரான நடிகர் விஜயகுமார் தயாரித்த இந்தப்படம் 1984 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. ரேவதிக்கு கண் தெரியாது.
ரஜினியின் மனைவியாக நடித்திருந்த ரேவதி, கிளைமாக்சில் வேறு ஒருவனால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவார். ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
அவதாரம்
நடிகர் நாசர் இயக்குநராக அவதாரம் எடுத்த படம் – அவதாரம். நாயகியாக கண் தெரியாத பொன்னி என்ற வேடத்தில் ரேவதி.
ரஜினி படத்தில் பார்வையற்றவராக அவதாரம் எடுத்த ரேவதியை ஏற்றுக்கொள்ளாத ரசிகர்கள், இந்தப் படத்தையும் ஏற்கவில்லை.
மேற்சொன்ன நான்கு படங்கள் குறித்து கூடுதலாக ஒரு முக்கிய தகவலும் உண்டு.
நான்கு படங்களுக்கும் ராகதேவன் இளையராஜா இசை அமைத்து ஒவ்வொரு படத்துக்கும் அற்புதமான பாடல்களை கொடுத்திருந்தார்.
ஒரு சினிமாவின் வெற்றிக்கு ஹீரோ மற்றும் பாடல்கள் மட்டும் போதாது என்பதற்கு இந்தப் படங்கள் உதாரணம்.
– பி.எம்.எம்.