உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்
ஜல்லிக்கட்டு மற்றும் கம்பாலா உள்ளிட்ட போட்டிகளை அனுமதிக்கும் வகையில் தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநில அரசுகள் கொண்டு வந்த சட்டங்களை எதிர்த்து பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த மனு, உச்சநீதிமன்றத்தில் ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசனம் அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
வழக்கின் விசாரணையின்போது, ஜல்லிக்கட்டு நடைபெறும் முறை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் கோரியதை அடுத்து தமிழக அரசு அதனை தாக்கல் செய்துள்ளது.
அதில், “ஜல்லிக்கட்டு அரங்கில் எவ்வாறு ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது, ஜல்லிக்கட்டுக்கு எவ்வாறு அனுமதி வழங்கப்படுகிறது,
வாடி வாசலில் இருந்து காளை வரும்போது 15 மீட்டர் நீள அரங்கில் எவ்வாறு காளையை மாடு பிடி வீரர்கள் அடக்குகிறார்கள் என்பது உள்ளிட்டவை தொடர்பான விவரத்தை வரைபடமாக தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.
மேலும் அதில், ஜல்லிக்கட்டு என்பது மாவட்ட ஆட்சியர் அனுமதியளித்த பின்னரே நடத்தப்படுகிறது என்றும், ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியை காவல்துறை, தீயணைப்புத்துறை, பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகள் சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள் என்றும்,
மாடுபிடி வீரர்களை உரிய மருத்துவ பரிசோதனைக்கு பின்னர், உரிய தகுதி சான்றிதழ் சமர்பித்த பின்னரே ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
வாடிவாசல் பகுதி, காளைகள் வெளியேறும் இடம் என அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும் எனவும்,
ஒட்டுமொத்த நிகழ்ச்சியும் முழுமையாக மாவட்ட நிர்வாகத்தால் வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் எழுத்துபூர்வ அறிக்கையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.