பாரு டி.எஸ்.பி. எகிறும் பி.பி.!

கமர்ஷியல் திரைப்படம் ஆக்குவதைப் போன்ற கடினமான பணி வேறில்லை. கரணம் தப்பினால் மரணம் என்பதை உணர்த்த கலாய்த்தே விரட்டிவிடுவார்கள்.

அது தெரிந்தும் அந்த வட்டத்திற்குள் சுழல்வதென்பது மரணக் கிணறுக்குள் பைக் ஓட்டும் சாகசத்தைப் போன்றது; பார்க்கும் ரசிகர்களையும் அப்படியொரு அனுபவத்திற்கு உட்படுத்துவது.

அப்படியொரு அனுபவத்தைத் தருகிறதா பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிஎஸ்பி’!

ஒரு கதை சொல்லட்டுமா..!

ஒருநாள் ஆம்னி பேருந்தொன்றில் ஒரு போலீஸ் அதிகாரி பயணிக்கிறார். அவர்தான் நாயகன் என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.

அவர் அருகில் ஒரு பயணி. பார்த்தவுடனேயே, அந்நபர் பிரியாணி கடை வைத்திருப்பதைக் கண்டறிகிறார்.

போலீஸில் சேர்வதற்கு முன்னால் தன் வாழ்க்கையில் நடந்தவற்றைக் கதையைச் சொல்கிறார்.

தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருந்த ஒரு நாயகன், அடாவடி செய்யும் வில்லனோடு முட்டல் மோதல் ஏற்பட்டபிறகு டிஎஸ்பி ஆகிறார் என்பதே பிளாஷ்பேக்கில் நிரம்பியிருக்கிறது.

அந்த வில்லனை ஒரு போலீஸ் அதிகாரியாக சந்திக்கப்போகும் இடைவெளியில்தான், இந்த ஆம்னி பஸ் கதை.

அடடா என்று அத்தனை நிமிட அயர்ச்சியையும் தாங்கிக்கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தால் வயிற்றில் கத்தி இறங்கி விடுகிறது. நமக்கல்ல நாயகனுக்கு.

கதை கேட்ட பயணி நாயகனைக் கத்தியால் குத்துகிறார். ’வெறி பிடிக்கற அளவுக்கு கதை மோசமில்லையே’ என்று யோசித்தால், அவர் வில்லனின் ஆள் என்று ’ட்விஸ்ட்’ தருகிறார் இயக்குனர்.

இடைவேளைக்குப் பிறகு, நாயகன் மீண்டும் ரயிலில் ஏறுகிறார். அங்கே ஒரு பயணி, ‘உங்க கதையை சொல்லுங்க சார்’ என்று ஆரம்பிக்கிறார். ’திரும்பவும் முதல்ல இருந்தா’ என்ற பீதி நமக்குள் பரவ, அது போலவே நாயகனுக்கும் கத்திக்குத்து நினைவுக்கு வருகிறது; அதனால், மீதி பிளாஷ்பேக்கை அவர் மனதிலேயே ஓட்டிப் பார்க்கிறார்.

பிளாஷ்பேக் சுருள் அணைந்ததும் கிளைமேக்ஸ் காட்சி வந்துவிடும் என்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்றாகத் தெரிந்த விஷயம்.

எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் என்று தமிழ் திரையில் தடம் பதித்த எல்லா நட்சத்திரங்களும் போலீஸ் ஆக பல படங்களில் நடித்தவர்கள்தாம்.

விஜய் சேதுபதியே கூட ‘சேதுபதி’யில் அப்படியொரு பாத்திரத்தில் நடித்தவர்தான். அந்த வரலாறு முற்று பெற்றுவிடுமோ என்று தோன்ற வைக்கிறது ‘டிஎஸ்பி’. அந்தளவுக்கு போலீஸ் படங்களை கிண்டலடிக்கும் ‘ஸ்பூஃப்’ போல திரைக்கதை அமைத்திருக்கிறார் பொன்ராம்.

விஜய் சேதுபதி கவனத்திற்கு..

ஏதோ ஒருவகையில் மேடைகளிலும் பேட்டிகளிலும் விஜய் சேதுபதி இயல்பாகப் பேசுவது ரசிகர்களை அவரோடு நெருக்கமாக்குகிறது என்பது உண்மை. ஆனால், அதையே திரையிலும் பிரதிபலிக்க முயல்வது எப்படி சரியாகும்?

டிஎஸ்பியில் விஜய் சேதுபதியின் நடிப்பும் சரி, வசன உச்சரிப்பும் சரி, அப்படியொரு எண்ணத்தையே விதைக்கின்றன.

அது மட்டுமல்லாமல், கொரோனா காலத்திற்கு முன்பே இப்படம் எடுக்கப்பட்டது என்பதையும் விஜய் சேதுபதியின் உடல்வாகு காட்டிக் கொடுக்கிறது.

நாயகியாக வரும் அனுகீர்த்தி வாஸ், பெமினா மிஸ் இந்தியா 2018 பட்டம் வென்றவர். ஆனால், நம் கண்களுக்குத்தான் வசீகரமாகத் தெரிய மாட்டேன் என்கிறார்.

ஒளிப்பதிவாளர்கள் எஸ்.வெங்கடேஷ் மற்றும் தினேஷ் கிருஷ்ணன் தான் இதற்கான பதிலைச் சொல்ல வேண்டும்.

விஜய் சேதுபதியின் பெற்றோராக வரும் இளவரசு – ஆதிரா, நண்பர்களாக வரும் லிங்கா, புகழ், அனுகீர்த்தியின் தந்தையாக வரும் கு.ஞானசம்பந்தம் – போலீசாராக வரும் சிங்கம்புலி, கஜராஜ், தீபா, ஷிவானி, எம்.எல்.ஏ.வாக மறைந்த ஆர்.என்.ஆர்.மனோகர் எனப் பலர் திரையில் வந்து போகின்றனர்.

ஷிவானியை பெண் போலீசாக காட்டியதற்கு, பேசாமல் அனுகீர்த்தியின் பாத்திரத்தையே தந்திருக்கலாம். பாவம், ’பிக்பாஸி’ல் இடம்பெற்ற பாவம் அவரை அதற்கு அனுமதிக்க மாட்டேன் என்கிறது போல.

இவர்களனைவரையும் தாண்டி வில்லனாக வரும் பிரபாகரும் அவரது தம்பி, கையாட்களாக வருபவர்கள் மட்டுமே திரையில் மிரட்டியிருக்கின்றனர். ஆனால், அரதப்பழசான காட்சிகளால் அதுவும்கூட நமக்கு பழசாகவே தெரிகிறது.

இவர்களுக்கு நடுவே கவுரமாகத் தலைகாட்டும் விமலும் ஜார்ஜ் மரியானும் கூட கிச்சுகிச்சு மூட்ட முயன்று தோற்றிருக்கின்றனர்.

வெகுசில காட்சிகளில் நகைச்சுவை நன்றாக வர வாய்ப்பிருந்தும், அவ்வாறு அமையப் பெறவில்லை. அதற்கு, அதில் நடித்தவர்களின் நம்பிக்கையின்மையே காரணமாகத் தெரிகிறது.

’கமிட்’ ஆன காரணத்தால் மட்டுமே விஜய் சேதுபதி தலைகாட்டியவற்றில் சில நல்ல படங்களும் உண்டு. இப்போது அப்படங்களைப் பார்க்கையில் அவர் அவற்றில் நிச்சயமாக முழு ஈடுபாடு காட்டியிருக்கிறார் என்றே தோன்றும்.

‘டிஎஸ்பி’யில் ஒரு காட்சி கூட அப்படி அமையவில்லை. அது மட்டுமல்லாமல், ’டிஎஸ்பியை பார்த்தால் எகிறும் பிபி’ என்று தொண்டை கிழியக் கத்தும் வகையில் முழுப்படமும் உள்ளது.

இனிமேலாவது இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு படங்களைத் தேர்வு செய்வதில் அவர் கவனம் செலுத்த வேண்டும்.

’நல்லா இரும்மா’ பாடல் மட்டும் டி.இமான் நினைவுக்கு வர உதவியிருக்கிறது. படத்தொகுப்பாளர் விவேக் ஹர்ஷனின் சிரமத்தை நினைத்தால் நமக்கே கண்களில் நீர் பொங்குகிறது.

நழுவிப் போனதே..?!

ஹரியின் முதல் படமான ‘தமிழ்’, வெற்றிமாறனின் முதல் படமான ‘பொல்லாதவன்’ போன்ற படங்களெல்லாம் ’தானுண்டு தன் வேலையுண்டு’ என்று போய்க் கொண்டிருக்கும் நாயகனுக்கும் எங்கோ அநீதிகளை அள்ளியிறைக்கும் வில்லனுக்குமான மோதலைத்தான் காட்டின.

அவையிரண்டிலுமே காட்சிகள் அனைத்தும் பெரும்பாலும் யதார்த்தத்திற்கு நெருக்கமானது போன்றே அமைக்கப்பட்டிருக்கும்.

நாயகன் நாயகி இடையேயான காதல் மனதைத் தொடுவதாக இருப்பதோடு மையக்கதையோடும் தொடர்புடையதாக இருக்கும்.

டிஎஸ்பி திரைக்கதையில் இவ்விரண்டுமே இல்லை. அது மட்டுமல்லாமல், பிளாஷ்பேக்கில் காமெடி காட்சிகள் இடம்பெறுவதை ‘க்ளிஷே’ என்று தவிர்ப்பதே வழக்கமாகிவிட்ட சூழலில், அதே உத்தியை மீண்டும் கையிலெடுத்திருக்கிறார் பொன்ராம்.

படப்பிடிப்புக்கு முன்னதாக இதே திரைக்கதைதான் இருந்ததா அல்லது படப்பிடிப்பின் இடையிடையே மாற்றங்கள் ஏதும் செய்யப்பட்டதா என்று தெரியவில்லை. ஆனால், படத்தொகுப்பின்போது குறைகளைச் சரி செய்திருக்கலாம் அல்லது தவிர்த்திருக்கலாம்.

பொன்ராமின் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ இரண்டுமே கொஞ்சம் தவறியிருந்தாலும் ‘பப்படம் ஆகியிருக்க சாத்தியமுள்ள படங்கள்தான். ஆனால் நடிப்புக் கலைஞர்களின் பங்களிப்பு காட்சிகளை ‘ப்ரெஷ்’ ஆக உணர வைத்தது.

முழுப்படத்தையும் நகைச்சுவையானதாக மாற்றியது. ஆனால் ’சீமராஜா’வில் அது நிகழவில்லை. ’எம்ஜிஆர் மகன்’ எதில் சேர்த்தி என்றே தெரியாமல் நம் நினைவுகளில் இருந்து நீங்கிவிட்டது. டிஎஸ்பியிலோ இன்னும் நிலைமை மோசம்.

பொன்ராம் நண்பரான இயக்குனர் ராஜேஷ்.எம், இதுவரை தனது வழக்கமான பாணியில் இருந்து மாறியதில்லை; அதனாலேயே, அவர் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகியிருக்கிறார்.

மாறாக, தன் முதல் இரண்டு படங்களில் இருந்து பாதை மாறிய காரணத்தால் மட்டுமே விமர்சிக்கப்படுகின்றன பொன்ராமின் படைப்புகள். இனிமேலாவது, தன் பலம் எதுவென்று அவர் உணர வேண்டும்.

மிக முக்கியமாக, தன் முதல் இரண்டு படங்களிலும் முக்கியமான பிரச்சனைகளை நகைச்சுவை முலாம் பூசித் தந்திருந்தார்.

அதிலிருந்து விலகி வெறுமனே நகைச்சுவை, ஆக்‌ஷன், சென்டிமெண்ட் என்று ’பொத்தம்பொதுவான’ கமர்ஷியல் பட அம்சங்கள் சிலவற்றைக் கொண்டு திரைக்கதை ஆக்குவது நிச்சயம் ரசிகர்களுக்கு இழைக்கப்படும் அநீதிதான்.

-உதய் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment