பள்ளி, கல்லூரிகளில் சைகை மொழி பாடமாக்கப்படும்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சரும் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் மனைவியுமான அன்னை ஜானகி அம்மாவின் நூற்றாண்டுத் துவக்க விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

அன்னை ஜானகி எம்.ஜி.ஆர். நூற்றாண்டுத் துவக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

அப்போது எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த அய்யன் திருவள்ளுவர் சிலையை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து ‘பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்’ எனும் நூலையும், ‘அன்னை ஜானகி எம்.ஜி.ஆர். -100’ என்ற நூற்றாண்டுச் சிறப்பு மலரையும், ஜானகி அம்மாவின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் அன்னை ஜானகி எம்.ஜி.ஆர் – நூற்றாண்டு நினைவலைகள் எனும் ஆவணப்படக் குறுந்தகடையும் முதலமைச்சர் வெளியிட்டார்.

அதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய அவர், எம்.ஜி.ஆருக்கும், திமுகவுக்குமான உறவையும், எம்.ஜி.ஆருக்கும் கலைஞருக்குமான நட்பையும், ஜானகி அம்மா மீது கலைஞர் வைத்திருந்த அன்பு கலந்த மரியாதையையும் எடுத்துக் கூறினார்.

முதல்வர் பேசிய உரையிலிருந்து…

“தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமைக்குரியவர் ஜானகி ராமச்சந்திரன்.

ஜானகி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடுவது சிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். 20 ஆண்டு காலம் திமுகவில் பயணித்தவர் எம்.ஜி.ஆர். அதிமுகவை விட திமுகவில் தான் எம்.ஜி.ஆர். அதிக காலம் இருந்தார்.

1952 முதல் 1972 வரை திமுகவில் எம்ஜிஆர் இருந்தார். 1972க்கு பிறகு தான் அதிமுகவை தொடங்கினார்.

தனிக்கட்சி கண்டாலும் எம்.ஜி.ஆர். அண்ணாவின் கொள்கையாளராகவே இருந்தார். எம்ஜிஆருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. எம்ஜிஆர் படம் வெளியாகும் போது முதல் நபராக பார்ப்பேன்.

என் மீது அளவு கடந்து பாசத்தையும், அன்பையும் கொண்டவர் எம்.ஜி.ஆர். என் மீது மட்டுமல்ல, என் குடும்பத்தினர் மீதும் மிகுந்த பாசம் கொண்டவர் எம்.ஜி.ஆர்.

நல்லா படி என்று அறிவுரை சொல்லி, கலைஞருக்கு கிடைக்காத கல்வி, உனக்கு கிடைக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கி, உன் பெரியப்பா என்ற முறையில் இதை சொல்கிறேன் என்று எம்.ஜி.ஆர் எனக்கு அறிவுரை சொன்னார்.

எம்.ஜி.ஆர் மற்றும் ஜானகி ஆகியோர் நடித்த ‘மருதநாட்டு இளவரசி’ படத்துக்கு கதை, வசனம் எழுதியவர் முத்தமிழறிஞர் கலைஞர்.

தமிழ்நாட்டின் மூன்று முதலமைச்சர்கள் பங்கெடுத்த பெருமைக்குரிய படம் ‘மருதநாட்டு இளவரசி.

தேசிய இயக்கத்தில் இருந்த எம்.ஜி.ஆரை, திமுகவிற்கு அழைத்து வந்தவர் கருணாநிதி.

அண்ணாயிசத்தில் பற்று கொண்டவர், அனைவருக்கும் திராவிடக் கொள்கைகளை காக்கும் கடமை இருக்கிறது.

இன்றைக்கு இந்த இடத்தில் இவ்வளவு பெரிய கல்லூரி உருவாகியிருக்கிறது என்றால், பல்லாயிரக்கணக்கான மாணவிகள் இங்கே கல்வி பெறவும் அரசின் அனுமதியை வழங்கியவர் தலைவர் கலைஞர். 1996ம் ஆண்டு தலைவர் கலைஞர் நான்காவது முறையாக ஆட்சிக்கு வந்தார்.

அப்போது ஜானகி அம்மையார், முதலமைச்சர் கலைஞருக்கு போன் செய்து வாழ்த்து சொன்னார். வாழ்த்து சொல்லிவிட்டு ஒரு கோரிக்கை வைத்தார்.

‘சத்யா ஸ்டுடியோ இருக்கும் இடத்தில் ஒரு காலேஜ் தொடங்கலாம் என்று இருக்கிறேன். அதற்கு நீங்கள் அனுமதி தர வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார்.

உடனே தலைவர் கலைஞர் “நிச்சயம் அனுமதி தருகிறேன் என்று சொல்லிவிட்டு உங்கள் உடல் நலம் எப்படியிருக்கிறது, உங்களை விரைவில் வந்து பார்க்கிறேன்’’ என்று சொல்லியிருக்கிறார், சொல்லி இரண்டு நாட்களில் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு  மறைந்து விட்டார்.

மறைந்த செய்தி கேட்டு உடனடியாக ராமாவர தோட்டத்துக்க கலைஞர் சென்றார். அஞ்சலி செலுத்திவிட்டு, பக்கத்தில் இருந்தவர்களிடத்தில் சொல்லியிருக்கிறார், “ஜானகி ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார், அந்தக் கோரிக்கையை நிறைவேற்றி கொடுத்திருக்கிறேன். யார் அந்தக் கல்வி நிறுவனத்தை நடத்தப் போகிறீர்கள்?” என்று ஒரு கேள்வியையும் கலைஞர் அப்போது கேட்டிருக்கிறார்.

அப்படி அக்கறையோடு கேட்டு உருவான கல்லூரி தான் இந்தக் கல்லூரி என்பதை நினைக்கும் போது பெருமைப்படுகிறேன்.

சென்னை, சேத்துப்பட்டு கிறித்துவ உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது அங்கு அடிக்கடி ஸ்கூல் டே நடத்துவோம்.

அப்போது பல இடங்களுக்குச் சென்று நன்கொடை வாங்குவோம். முதலில் நன்கொடை சீட்டை எடுத்துக் கொண்டு இந்த சத்யா ஸ்டுடியோவுக்குத் தான் வருவேன்.

ஷுட்டிங்கில் இருப்பார் எம்.ஜி.ஆர், ரூ.250 டிக்கெட் வாங்கிவிடுவார். அதுதான் அப்போது இருப்பவைகளிலெல்லாம் காஸ்ட்லி.

அதுமட்டுமல்ல, அவருடைய படம் ரிலீஸ் ஆகிறது என்றால், தியேட்டரில் வரிசையில் நின்று, முதல் ஆள், முதல் டிக்கெட் நான் தான் சென்று வாங்குவேன்.

அதனால் அவர் படம் ரிலீஸ் ஆனவுடன் முதலில் கோபாலபுரம் இல்லத்திற்கு தொலைபேசி செய்து என்னை அழைத்து, படம் எப்படி இருந்தது என்று என்னிடம் கேட்பார்.

கோபாலபுரத்தில் சிறுவனாக இருந்த போது இளைஞர் தி.மு.க. என்ற ஒரு அமைப்பு உருவாக்கியபோது, பல கூட்ட நிகழ்ச்சி நடத்தியிருக்கிறேன்.

அந்த கூட்ட நிகழ்ச்சிகளுக்கு அழைக்கிறபோது எல்லாம் ஷுட்டிங்கிலிருந்து மேக்-அப்புடன் எம்.ஜி.ஆர் வந்திருக்கிறார்.

அதற்குப் பிறகு 1971ம் ஆண்டு ‘முரசே முழங்கு’ என்று ஒரு நாடகம். அதன் முதல் அரங்கேற்றம் சைதாப்பேட்டை தேரடி திடலில் நடைபெற்றது. தலைமை தாங்க வந்த எம்.ஜி.ஆர் தரையில் உட்கார்ந்து நாடகம் பார்த்தார்.

முன்வரிசையில் எம்.ஜி.ஆர் அவர்களை உட்கார வைப்பதற்காக சோபா செட் போட்டு வைத்திருந்தோம். அவர் வந்தார், முதலில் அதை எடு என்றார். எடுத்துவிட்டோம்.

அப்புறம் தரையில் உட்கார்ந்து நாடகத்தை முழுவதுமாக பார்த்து என்னைப் பாராட்டி சென்றார்.

ஆகவே, இந்த விழாவில் கலந்து கொள்வதை என்னுடைய கடமையாக மட்டுமல்ல, உரிமையாகவே நினைத்து இந்த விழாவில் கலந்து கொண்டிருக்கிறேன். எம்.ஜி.ஆர், ஜானகி இணைந்து நடித்த முதல் படத்தை சொன்னேன். கடைசிப் படம் என்ன தெரியுமா? ‘நாம்’.

இதற்கு கதை-வசனம் யார் என்று கேட்டால், அதுவும் கலைஞர்தான். அதனால் தான், ‘நாம்’ பிரிக்க முடியாதவர்களாக இன்றைக்கு இங்கே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறோம்.

1991 முதல் 1995 வரை, இதற்கான அனுமதியை அவரால் பெற முடியாமல் இருந்தது, அது என்ன சூழ்நிலை, எப்படி என்பதையெல்லாம் விளக்க விரும்பவில்லை.

ஆனால் கல்விக்காக, கருணை வடிவான ஜானகி அம்மையார் கேட்டார் என்பதற்காக தலைவர் கலைஞர் உடனடியாக அனுமதி வழங்கினார்.

எனக்கு ஒரு கடிதம் லதா ராஜேந்திரனால் தரப்பட்டிருக்கிறது. அரசின் எண்ணம் எதுவோ, அதே நோக்கம் கொண்டதாக இந்தக் கோரிக்கைகள் அமைந்திருப்பது எனக்கு உள்ளபடியே மகிழ்ச்சியாக இருக்கிறது.

சைகை மொழியை – பள்ளி மற்றும் கல்லூரிகளில் மொழிப்பாடமாக அறிமுகப்படுத்த வேண்டும், மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

மாற்றுத்திறனாளிகள் துறையை முதலமைச்சர் என்கிற முறையில் நான் கையில் வைத்திருக்கிறேன்.

அந்த வகையில் லதா ராஜேந்திரன் கோரிக்கைகளை செயல் திட்டம் ஆக்குவோம் என்பதை இந்த நேரத்தில் உறுதியோடு தெரிவித்துக் கொண்டு, டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டியவர் தலைவர் கலைஞர் தான்.

கலைவாணர், ராஜா சாண்டோ என்கிற பெயரில் விருதுகளை வழங்கியவரும், அதேபோல், எம்.ஜி.ஆர்., பெயரில் விருதுகளை வழங்கி அறிவித்தவரும் தலைவர் கலைஞர் தான்.

பராமரிப்பு இல்லாமல் இருந்த எம்.ஜி.ஆர். நினைவிடத்தை நவீனமாக கட்டியவரும் தலைவர் கலைஞர் தான்.

அந்த நட்பின் தொடர்ச்சியாகத் தான் இந்த விழா நடைபெற்று வருகிறது.

ஜானகி அம்மையாரின் ஆட்சி கலைக்கப்பட்ட போது ‘கிரீடத்தை தலையில் சூட்டிவிட்டு, தலையை வெட்டியது போல இருக்கிறது என்று எம்.ஜி.ஆருக்கு பாரத ரத்னா பட்டம் கொடுத்து விட்டு, ஜானகி அம்மையாரின் ஆட்சியைக் கலைத்தார்கள்’ என்று அன்றைக்கு கண்டித்தவர் தலைவர் கலைஞர்.

அதையும் மறந்துவிடக்கூடாது. எம்.ஜி.ஆர் மறைந்தபோது, அண்ணா சாலையில் இருந்த தலைவர் கலைஞர் சிலை உடைக்கப்பட்டது. உடனடியாக ஜானகி கலைஞருக்கு போன் செய்து வருத்தம் தெரிவித்தார்.

வருத்தம் தெரிவித்தது மட்டுமல்ல, ‘அதை நானே பொறுப்பேற்று கட்டித் தருகிறேன்’ என்று சொன்னார். அந்த நல்ல உள்ளத்தை இன்றைக்கு நினைத்துப் பார்க்கிறேன்.

திராவிட மாடல் ஆட்சியைத்தான் கல்வியில், வேலைவாய்ப்பில் அனைவருக்கும் பங்கு வேண்டும் என்பதற்காக உழைத்த இயக்கம் திராவிட இயக்கம். இதனுடைய அடிப்படை லட்சியங்களின் மீது எம்.ஜி.ஆர், ஜானகி பற்று கொண்டு செயல்பட்டு வந்தார்கள்.

எம்.ஜி.ஆர் தனி இயக்கம் கண்டாலும், தனது கொள்கையில், அண்ணாயிசத்தை கட்டிக்காத்தார்கள்.

அண்ணாயிசம் என்று சொன்னால், ‘சாதியற்ற, சமதர்ம, பகுத்தறிவு சமுதாயத்தை ஜனநாயக வழியில் நிறைவேற்ற உழைப்பது தான் அண்ணாயிசம்’ என்று அவரே வரையறுத்து சொல்லியிருக்கிறார்.

இத்தகைய அண்ணாயிசத்தில் உண்மையான பற்று கொண்டவர்கள் அனைவருக்கும் திராவிடக் கொள்கைகளைக் காக்கும் கடமை இருக்கிறது.

அதனை நினைவூட்டக்கூடிய வகையில் தான் இந்த விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

திராவிட இயக்கக் கொள்கைகளைக் காப்பதும், அதன் மூலமாகத் தமிழ்நாட்டை மேன்மையடையச் செய்வதும் தான் எம்.ஜி.ஆர்., ஜானகிக்கு நாம் செய்யக்கூடிய மரியாதையாக இருக்கும், அதுதான் நம்முடைய நன்றிக்கடனாக இருக்கும்” என்று கூறினார்.

டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரித் தலைவர் வரவேற்புரை ஆற்ற, கல்லூரித் தாளாளரும் டாக்டர் எம்.ஜி.ஆர் பேச்சு மற்றும் செவித்திறன் குறையுடையோருக்கான சிறப்புப் பள்ளியின் தலைவருமான முனைவர் லதா ராஜேந்திரன் நன்றியுரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில், உயர்க் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் வேலு, எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியின் முதல்வர் டாக்டர் மணிமேகலை, வி.ஜி.பி உலகத் தமிழ்ச்சங்கத் தலைவர் வி.ஜி.சந்தோசம், வேல்ஸ் பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் ஐசரி கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

Comments (0)
Add Comment