– நெகிழ்ந்த எம்.ஜி.ஆா்
மறைந்த பழம்பெரும் நடிகா் கலைவாணா் என்.எஸ்.கிருஷ்ணனின் நினைவு நாள் இன்று அனுசாிக்கப்படுகிறது.
அவரது நினைவையொட்டி பேராசிாியை அன்புக்கொடி நல்லதம்பி எழுதிய ‘சமூக விஞ்ஞானி கலைவாணா்’ என்ற நூலிருந்து ஒரு பகுதி.
1957, ஆகஸ்ட் 30 அன்று கலைவாணா் மறைந்தபோது அஞ்சலி செலுத்திய எம்.ஜி.ஆா், “கலைஞர் சமுதாயத்தின் தலைவன், தமிழகத்தின் கலைச் செல்வம் கலைவாணர் என்.எஸ்.கே. அவர்களை இறப்பினிடத்திலே பறிகொடுத்து, ஓங்கித் தவிக்கும் நிலையில் நான் என்ன பேசுவது என்றே புரியவில்லை.
கோடிக்கணக்கான மக்கள் பிறவிகள், தோன்றுவதும் மறைவதும் இயற்கை எனினும், கோடி கொடுப்பவராய்த் திகழ்ந்த கலைச்செல்வம் என எண்ணி அவர்களை இழந்து, எப்படி அந்த இழப்பை ஈடு செய்வது, என்பதை எண்ணும்போதே இதயத்துடிப்பு ஒரு கணம் அடங்கித்தான் துடிக்கிறது.
ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் அவர்கள் இத்துறையில் ஆற்றிய அரும்பணியை, எந்தத் தமிழ் மகனும் சுலபத்தில் மறந்து விட இயலாது.
இதுவரை ஒரே ஒரு என்.எஸ்.கிருஷ்ணனைத்தான் தமிழ்க் கலையுலகம் தந்துள்ளது.
அவரது ஒப்புயர்வற்ற கலைப்பணியை, சிந்தனைச் செல்வத்தை இதுவரை தோன்றிய எந்த நடிகனிடத்திலும் தமிழகம் பெற்றதில்லை.
உலகப் பெரும் கலைஞர்களுள் ஒருவராகப் போற்றப்பட வேண்டிய அந்தக் கலையுலகப் பெருமகன், தவறித் தமிழகத்திலே பிறந்து விட்ட காரணத்தினாலோ என்னவோ உற்ற நிலையை அடைவதற்கு முன்பே நம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார்.
கலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள் ஒரு பிறவி நடிகர். சிறந்த எழுத்தாளர். மிகச்சிறந்த டைரக்டர், நல்ல பாடலாசிரியர், கவர்ச்சிமிக்க சொற்பொழிவாளர், பேராற்றல் மிக்க கலைச்செல்வம்.
எனினும் அவர் ஒரு கொடை வள்ளல் என்று கூறுவதிலே என் போன்றோர் பெருமிதம் கொள்கிறோம்.
லட்சக்கணக்கிலே உழைத்துச் சம்பாதித்த செல்வத்தை வாரி வாரி வழங்கிவிட்டு நம்மை விட்டுப் பிரியும் போது சாதாரண ஏழை என்.எஸ்.கே. யாகவே பிரிந்திருக்கிறார்.
பல நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தோன்றுகிற உயிா்ப் படிப்பில் ஒருவராகத் தோன்றிய கலைவாணர் மக்களுக்காகவே வாழ்ந்தாா்.
மக்களுக்காக பாடுபட்டாா். மனிதகுல மாணிக்கத்தை இழந்து விட்ட துயரத்தை எப்படி தாங்கும் இதயம்? நம்மையெல்லாம் தவிக்க விட்டுவிட்டு என்ன காரணத்தினாலோ மரணத்தின் மடியிலே அமர்ந்து நீங்காத் துயில் கொள்கிறார்.
இன்னும் சில மணி நேரங்களிலே அவருடைய உடலையும் நாம் காண முடியாதே என்பதை எண்ணும்போதே கண்ணீர் கரைபுரளுகிறது.
என்ன செய்வது? கிடைத்தற்கரிய செல்வத்தை இடையிலே பறிகொடுத்து விட்டோம். இனிமேல் நமது வாழ்நாளில் ஒரு கலைவாணரைக் காணவியலாது.
அவரை நினைப்போம். அவர் வகுத்துக் காட்டிய வழியிலே நடப்போம்.”