– உச்சநீதிமன்றம் காட்டம்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியம் அமைப்பு பரிந்துரைக்கும் நீதிபதிகள் நியமனம் ஒன்றிய அரசால் தாமதப்படுத்துவது குறித்து பெங்களூரு வக்கீல்கள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் பாய் அமித் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு மீண்டும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், ஏ.எஸ். ஓகா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஒன்றிய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் ஆர் வெங்கடரமணி ஆஜரானார்.
வழக்கு விசாரணையின் போது, “உயர்நீதித்துறையில் நீதிபதிகளாக நியமனம் செய்ய கொலீஜியம் பரிந்துரைத்த பெயர்களை பரிசீலிப்பதில் ஒன்றிய அரசின் தாமதம் விரக்தியடையச் செய்கிறது. உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு நியமன செயல்முறையை முடிக்க வேண்டிய காலக்கெடுவை வகுத்துள்ளது.
அந்த காலக்கெடுவை ஒன்றிய அரசு கடைபிடிக்க வேண்டும். கொலீஜியம் பரிந்துரை செய்த சிலரின் பெயர்கள் ஒன்றரை ஆண்டுகளாக அரசிடம் நிலுவையில் உள்ளன. கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்டவர்களில் இருந்து சில சமயங்களில் ஒரு பெயரை மட்டுமே அரசு தேர்ந்தெடுக்கிறது. இது சீனியாரிட்டியை முற்றிலும் சீர்குலைக்கிறது.
கொலீஜியம் முறை சட்டத்தின் நடைமுறையாகும். கொலீஜியம் எடுக்கும் முடிவுகளை ஒன்றிய அரசு அதனை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்” என நீதிபதிகள் கூறினர்.
இதையடுத்து நீதிபதிகள் விவகாரம் குறித்து நிச்சயமாக கவனிக்கிறோம் என ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞரும், சொலிசிட்டர் ஜெனரலும் உறுதியளித்தனர். இதையடுத்து வழக்கு விசாரணையை டிசம்பர் 8 தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.