-வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
ஆங்கில இந்து ஏட்டில் நேற்று (நவம்பர் – 25) முத்துப்பழனியின் ‘ராதிகா சாந்தவனம்’ நூல் குறித்த செய்தி தமிழ்நாடு இன் ஃபோகஸ் பகுதியில் வந்துள்ளது.
‘ராதிகா சாந்தவனம்’ என்ற இந்த நூல், பலரும் அறியாத நூலாகும்.
பின் நவீனத்துவத்தை அந்த காலத்திலேயே திறம்பட சொல்லிய இந்த நூலின் பாக்களின் கதைக்களம், தஞ்சாவூர், காவேரி டெல்டா பகுதியாகும்.
முத்துப்பழனி தெலுங்கில் எழுதி சுவடிகளாக இருந்த நூலை, இசைவாணி நாகரத்தினம்மா அச்சில் கொண்டு வந்தார்.
1912 – இல் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவிலேயே முதன்முதலாகத் தடைசெய்யப்பட்ட நூல் இது.
பின் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு, இந்த நூலுக்கான தடையை நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
18 – ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்த நூல், 584 பாடல்களைக் கொண்டது. சந்தியா முல்சந்தானியால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பென்குயின் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட இருக்கிறோம். டெல்லி பல்கலைக்கழக தமிழ்ப் பேராசிரியை தி. உமாதேவி மொழிபெயர்த்த நூலை ஏற்கெனவே காவ்யா வெளியிட்டிருக்கிறது.
இதே காலகட்டத்தில் தான் ஆவுடையக்காளின் பாக்களும் எழுதப்பட்டன. பாரதி கவிதை எழுத ஆதர்சனமாகத் திகழ்ந்தவர் ஆவுடையக்காள்.
இளம் வயதில் விதவையான ஆவுடையக்காள், அன்றைக்கே பின் நவீனத்துவ கருத்துகளை முன்னெடுத்து தன்னுடைய உரிமைகளையும் சமூக சூழல்களையும் குறித்து எழுதிய கவிதைகள் அவசியம் கவனிக்கப்பட வேண்டியவையாகும்.
குற்றாலம் பகுதியில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை வனத்தில் ஐக்கியமாகி தனிமையில் இந்த பாக்களை அவர் வடித்துள்ளார்.
ஆவுடையக்காள் பாடல்கள், ராதிகா சாந்தவனம் ஆகிய இரண்டு நூல்களையும் கொண்டு வர ஆதிரா முல்லை, நண்பர் ஆர்.ஆர்.சீனிவாசன் மற்றும் கவிஞர் குட்டி ரேவதி ஆகியோர் முன்னெடுப்புப் பணிகளைச் செய்து வருகிறார்கள்.
கதை சொல்லி, பொதிகை – பொருநை – கரிசல் கட்டளை அமைப்பின் மூலமாக இந்த இரண்டு நூல்களையும் அச்சில் கொண்டு வர முயற்சி செய்து வருகிறேன். தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு இந்தப் படைப்புகள் பெருமையைச் சேர்க்கும்.