– மு.க.ஸ்டாலின் பேச்சு:
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற ‘தத்துவ மேதை’ டி.கே. சீனிவாசன் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா – நூல்கள் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு விழாத் தலைமையுரை ஆற்றினார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
அவர் ஆற்றிய உரை வருமாறு, “தத்துவ மேதை டி.கே.சீனிவாசன் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவரது எழுத்துகளை, எண்ணங்களை மூன்று நூல்களாகத் தொகுத்து வெளியிடும் விழாவாக நடத்திக் கொண்டிருக்கும் நம்முடைய கழகச் செய்தித் தொடர்புச் செயலாளர் சகோதரர் டி.கே.எஸ். இளங்கோவன் அவர்களுக்கு முதலில் எனது பாராட்டை, வாழ்த்துகளை, நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
கழகக் கொள்கைகள் மீது ஆழமான பிடிப்புக் கொண்டு, கழகத்துக்கு கிடைத்திருக்கும் கொள்கைத் தூண்களில் ஒருவராக நம்முடைய இளங்கோவன் விளங்கிக் கொண்டிருக்கிறார்.
அவரைப் பற்றி பேசுகிறபோது, நம்முடைய பொதுச் செயலாளர் நகைச்சுவையோடு சிலவற்றைக் குறிப்பிட்டுச் சொன்னார்.
அறிவாலயத்தில் இருக்கும்போதுகூட, ”டி.கே.எஸ். இளங்கோவன் அவர்களிடத்தில் எத்தனை மணிக்கு நிகழ்ச்சி தொடங்கக் போகிறது? எத்தனை மணிக்கு முடிப்பீர்கள்?” என்று கேட்டுக் கொண்டிருந்தபோது, நான் கேட்டேன், ”உங்களைப் பற்றி என்ன பேசுவது?” என்று, அப்போது அவர் என்னைப் பற்றி நீங்கள் எதை அறிந்திருக்கிறீர்களோ அதைப் பேசுங்கள்” என்று சொன்னார்.
உங்களைப் பற்றி நான் பல செய்திகளை அறிந்ததுண்டு. இன்னும் வெளிப்படையாகச் சொல்லவேண்டும் என்றால், தலைவரிடத்தில் அதிக திட்டு வாங்கியவர் யார் என்று கேட்டால், நம்முடைய டி.கே.எஸ். அவர்களாகத்தான் இருப்பார். உரிமையோடு திட்டுவார். எங்களைக்கூட அவ்வாறு திட்டியது கிடையாது.
எனவே பிள்ளைகளைக்கூட அவ்வளவு திட்டியது கிடையாது. பிள்ளையைவிட அதிகம் பாசம் கொண்டிருக்கும் டி.கே.எஸ். இளங்கோவனைத்தான் அதிகம் திட்டியிருக்கிறார்.
எனவே இன்றைக்கு அவர் இந்த விழாவை நம்முடைய திராவிட உணர்வோடு, இந்த இயக்கம் வாழவேண்டும், வளர வேண்டும், எழுச்சிபெற வேண்டும் என்ற அந்த உணர்வோடு இந்த நிகழ்ச்சியை நல்ல வகையில் பயன்படுத்தி அதை நடத்திக் கொண்டிருக்கிறார். அதற்காக மீண்டும் ஒருமுறை என் பாராட்டுகள்.
தத்துவமேதை டி.கே.சீனிவாசன் அவர்கள், மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர். அவருடைய மைந்தன் இளங்கோவனும் மாநிலங்களவை உறுப்பினராக ஒருமுறை அல்ல, இரண்டு முறை இருந்தவர்.
மாநிலங்களவையில் இருந்து அவர் ஆற்றிய உரை, கழகத்தின் கொள்கைகளை, திராவிட இயக்கத்தின் லட்சியங்களை, தமிழ்நாட்டிற்கு என்ன தேவை என்பதை அழுத்தமாக, ஆணித்தரமாக அவர் எடுத்த வைத்த அந்த உரைகள் எல்லாம் மறக்க முடியாதவையாக விளங்கிக் கொண்டிருக்கிறது.
தலைவர் கலைஞர் அவர்களுக்கும் – எனது ஆயிருர்த் தாயார் தயாளு அம்மையார் அவர்களுக்கும் திருமணம் நடந்தபோது நம்முடைய டி.கே.எஸ். அவர்கள்தான் திருமணத்தில் கலந்துகொண்டு வாழ்த்தியிருக்கிறார்.
அவர் மட்டுமல்ல, கவிஞர் கா.மு.ஷெரீஃப் அவர்களும் கலந்து கொண்டு மணக்கோலம் பூண்டிருந்த கலைஞரை வாழ்த்தியிருக்கிறார்.
திருமணத்தை நடத்தி வைக்க அண்ணா அவர்கள் வருவதாக இருந்தது. ஆனால் அண்ணா அவர்களால் வர முடியவில்லை.
அன்று இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்து கொண்டிருந்த நாள். திருமணத்தன்று காலையில் அண்ணா அவர்கள் வரவில்லை. அவருக்காகக் காத்திருந்த நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் – டி.கே.எஸ். அவர்களும் இந்தி எதிர்ப்பு மறியலில் கலந்து கொள்கிறார்கள்.
மணமகன் கோலத்தில்தான் அந்தப் போராட்டத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
நாம் திரும்பி மணவிழா நிகழ்ச்சிக்கு அந்த மண்டபத்திற்குச் செல்லும்போது அண்ணா வந்துவிடுவார் என்று நினைக்கிறார்கள். போராட்டம் முடிந்து மண்டபத்துக்கு வந்தபிறகும் அண்ணா அவர்கள் வரவில்லை.
உடனேயே கலைஞர் அவர்கள், தானே மாலையை எடுத்து தயாளு அம்மாள் அவர்களுக்கு அணிவிக்கிறார். அம்மாவும் – தலைவருக்கு மாலை அணிவிக்கிறார்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த சீனிவாசன் அவர்கள், மணமக்களை வாழ்த்திப் பேச தொடங்கிவிட்டார். அத்தோடு திருமணம் முடிகிறது.
அந்த வகையில் எங்கள் குடும்பத்தில் ஒருவர்தான் டி.கே. சீனிவாசன் அவர்கள். அதனால்தான் சொன்னேன், குடும்பப் பாசத்தோடு நான் இதில் பங்கெடுத்திருக்கிறேன் என்று பெருமையோடு குறிப்பிட்டுச் சொன்னார்.
டி.கே. சீனிவாசன் போன்றவர்களது நூற்றாண்டு விழாவை நாம் கொண்டாடுகிறோம் என்றால், அவரைப் பெருமைப்படுத்துவதற்காக மட்டுமல்ல; அவருக்கு நாம் நம்முடைய நன்றிக் கடனை செலுத்தும் அடையாளமாகவும்தான் இந்த விழா நடந்து கொண்டு இருக்கிறது.
சில நேரங்களில் தலைவர் கலைஞரையே கூட டி.கே.சீனிவாசன் அவர்கள் விமர்சித்து இருக்கிறார். அதைத்தான் நம்முடைய ஆசிரியர் அவர்கள் சூசகமாக குறிப்பிட்டுச் சொன்னார்.
இருந்தாலும் தலைவர் கலைஞர் அவர்கள், டி.கே.எஸ், அவர்களுக்கு ஏதாவது உடல்நலப் பாதிப்பு என்றால் உடனே போய் உதவி செய்பவராக இருந்திருக்கிறார்கள். இது பற்றி ஒரு மேடையில் பேசும்போது டி.கே.சீனிவாசன் அவர்களே கலைஞர் அவர்களிடம், “இது ஏன் என்று எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது” என்று கேட்கிறார்.
அப்போது கலைஞர் அளித்த பதில்தான் இன்று நாம் ஏன் டி.கே.சீனிவாசன் அவர்களை 100 ஆண்டுகள் கழித்தும் நினைக்கவேண்டும் என்பதற்கான காரணமாக அமைந்திருக்கிறது.
தலைவர் கலைஞர் அவர்கள் சொல்கிறார், ”என்னை விமர்சித்தாலும், அவருக்கு நான் ஏன் உதவிகள் செய்தேன் என்றால், டி.கே.சீனிவாசன் அவர்கள் களங்கம் இல்லாதவர்; எதையும் நேராகப் பேசக்கூடியவர்;
நான் இல்லாத இடத்தில் புறங்கூறித் திரிபவர் அல்ல!” என்று தலைவர் கலைஞர் அவர்கள் சொல்லி இருக்கிறார்.
ஒரு மனிதர் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு எடுத்துகாட்டு டி.கே.சீ. அவர்கள்.
அதனால்தான் இன்று டி.கே.சீனிவாசன் அவர்களின் நூற்றாண்டு விழாவை நாம் இங்கே கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.
திராவிட இயக்கம் என்றாலே, பேச்சாளர்கள் இயக்கம்! எழுத்தாளர்கள் இயக்கம்! கலைஞர்கள் இயக்கம்! கதை, வசனகர்த்தாக்களின் இயக்கம்! கவிஞர்களின் இயக்கம்!
பத்திரிகையாளர்கள் இயக்கம்! படைப்பாளிகள் இயக்கம்! முற்போக்காளர்களின் இயக்கம்!
மொத்தத்தில் இது ஓர் அறிவியக்கம்! இந்த அறிவியக்கத்தின் ஆற்றல்மிக்க ஆளுமைகளில் ஒருவர் தான் டி.கே. சீனிவாசன்” என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.