மத்திய கலாச்சார அமைச்சகம் மற்றும் கலா பிரதர்ஷினி சார்பாக இசை மேதை பத்மஸ்ரீ கண்டசாலா வெங்கடேஸ்வர ராவின் நூற்றாண்டு விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கலைமாமணி பார்வதி ரவி கண்டாசாலா செய்துவருகிறார்.
இளம் கலைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக தேசிய மற்றும் மாநில அளவில் விருதுகள் வென்ற முன்னணி கலைஞர்களோடு பணியாற்றும் வாய்ப்பு அவர்களுக்கு இந்த நிகழ்ச்சி மூலம் கிடைக்கும். தமது கடைசி படைப்பை தலைசிறந்ததாக கண்டசாலா வழங்கினார்.
அதற்காக அவர் பகவத் கீதையில் இருந்து கவனமாக 100 வசனங்களைத் தேர்ந்தெடுத்தார். கண்டசாலாவின் பகவத் கீதை இசைப் படைப்பு யூடியூபில் 22 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
அவரது நினைவாக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் உலகமெங்கிலும் உள்ள பாரம்பரிய நடனக் கலைஞர்கள் காணொளி மூலம் அஞ்சலி செலுத்துவார்கள்.
அதில் இந்தியாவை சேர்ந்த அனைத்து வகையான பாரம்பரிய நடனங்களும் இடம்பெறும். நிகழ்ச்சியில் 40 தேசிய விருது பெற்ற கலைஞர்களும், 60 மாநில விருது பெற்ற கலைஞர்களும் பங்குபெறுவார்கள்.
100-க்கும் அதிகமான குழந்தைகள் கண்டசாலாவின் பாடல்களை பாடுவார்கள். நிகழ்ச்சியின் நிறைவு விழாவாக கலா பிரதர்ஷினியை சேர்ந்த கலைமாமணி பார்வதி ரவி கண்டாசாலா தலைமையில் நூற்றுக்கும் அதிகமான மேற்பட்ட கலைஞர்கள் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடத்துவார்கள்.
நிகழ்ச்சியில் புத்தக வெளியீடும் இருக்கும். மேலும் கண்டசாலா நினைவு வாழ்நாள் சாதனை விருதுகள் மற்றும் கண்டசாலா கலா பிரதர்ஷினி புரஸ்கார் வழங்கப்படும்.
முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் மத்திய சுற்றுலா, கலாச்சார அமைச்சர் கிஷன் ரெட்டி ஆகியோர் டிசம்பர் 4-ம் தேதியன்று சென்னையில் தொடங்கி வைக்கின்றனர்.