தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற தயாரிப்பாளர்களாக விளங்கியவர்களில் ஏ.எல்.சீனிவாசன் மிக முக்கியமானவர்.
கவிஞர் கண்ணதாசனின் மூத்த சகோதரரான சீனிவாசனின் பிறந்த தினம் (23.11.1923) இன்று. அவரைப் பற்றிய நினைவுகள் சில…
சிவகங்கை மாவட்டம் (அன்றைய ராமநாதபுரம் மாவட்டம்) சிறுகூடல்பட்டியில் 1923 ஆம் ஆண்டு நவம்பர் 23-ம் தேதி சீனிவாசன் பிறந்தார்.
சாத்தப்பன் – விசாலாட்சி தம்பதிகளுக்கு மொத்தம் 9 பிள்ளைகள். அவர்களில் ஆறாவதாகப் பிறந்தவர் சீனிவாசன்.
சிறுகூடல்பட்டியில் எட்டாம் வகுப்பு வரை படித்த ஏ.எல்.எஸ்.க்கு சிறுவயதிலேயே சினிமா மீது ஆர்வம்.
காரைக்குடியில் உள்ள சினிமா தியேட்டருக்கு (8 மைல் தூரம்) சைக்கிளில் சென்று, தொடர்ந்து மூன்று காட்சிகளையும் பார்த்து விட்டுத் திரும்புவாராம்.
குடும்ப சூழல் காரணமாக படிப்பைத் தொடர முடியாத சீனிவாசன், 1941-ஆம் ஆண்டு சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் நாற்பது ரூபாய் மாத சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.
அந்த வேலையிலும் நீடிக்க முடியாமல் கோயம்புத்தூருக்கு இடம் பெயர்ந்தவர், அங்கு திரைப்படங்களில் விநியோகம் செய்யும் ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.
அந்த சமயத்தில் தான் புதிய திரைப்படக் கம்பெனி ஒன்றை நிறுவினார்.
‘கோயம்புத்தூர் பிக்சர்ஸ்’ என்ற பெயரில் இயங்கி வந்த இந்த நிறுவனத்தில், திருமலைசாமி கவுண்டர், முத்து மாணிக்கம், துரைசாமி கவுண்டர் ஆகியோர் பங்குதாரர்களாக இருந்தனர்.
அறிஞர் அண்ணா கதை, வசனம் எழுதி கே.ஆர்.ராமசாமி கதாநாயகனாக நடித்த ‘வேலைக்காரி’ படத்தை வெளியிட்டபோது அப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதோடு நல்ல வருவாயையும் ஈட்டி கொடுத்தது.
1951-இல் சென்னையில் ‘மெட்ராஸ் பிக்சர்ஸ்’ என்ற கம்பெனியை உருவாக்கினார்.
கலைஞர் கருணாநிதி கதை, வசனத்தில், எம்.எஸ்.விஸ்வநாதன்–டி.கே.ராமமூர்த்தி ஆகியோர் இணைந்து முதன் முதலாக இசையமைத்த ‘பணம்’ என்ற திரைப்படம் இந்தக் கம்பெனி சார்பில் தயாரிக்கப்பட்டது தான்.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் இயக்கத்தில் சிவாஜிகணேசன் – பத்மினி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், கே.ஏ.தங்கவேலு, டி.ஏ.மதுரம், வி.கே.ராமசாமி ஆகியோர் நடிப்பில் உருவான இந்தப் படத்தை ஏ.எல்.சீனிவாசன் தயாரித்தார்.
சிவாஜிக்கு இது இரண்டாவது படம். அடுத்ததாக 1957-ஆம் ஆண்டு சிவாஜிகணேசன், பி.பானுமதி நடிக்க ‘அம்பிகாபதி’ என்னும் படத்தைத் தயாரித்தார்.
இப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது தான் என்.எஸ்.கிருஷ்ணன் காலமானார்.
இதையடுத்து கம்பெனியின் பெயரை ‘ஏ.எல்.எஸ்.புரொடக்சன்ஸ்’ என்று மாற்றம் செய்து, 1958-இல் எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடிக்க ‘திருடாதே’ என்ற படத்தைத் தயாரித்தார். இப்படம் எம்.ஜி.ஆருக்கு முதல் சமூகப்படமாக அமைந்தது.
அடுத்து கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் ‘சாரதா’ என்ற மாபெரும் வெற்றிப் படத்தையும், பி.மாதவனின் இயக்கத்தில் ‘மணி ஓசை’ என்ற படத்தையும் தயாரித்து இவ்விருவரையும் இயக்குநர்களாக அறிமுகம் செய்ததோடு, ஏ.பீம்சிங்கையும், கன்னட இயக்குநரான புட்டண்ணா கனகலையும் அறிமுகப்படுத்தினார்.
‘பெண் என்றால் பெண்’ (1967) என்ற படத்தில் வசன கர்த்தா ஆரூர்தாஸ் என்பவரை இயக்குநராக்கினார்.
‘கன்னியின் சபதம்’, ‘நியாயம் கேட்கிறேன்’, ‘செந்தாமரை’, ‘சாந்தி’, ‘கந்தன் கருணை’, ‘சினிமா பைத்தியம்’, ‘லட்சுமி கல்யாணம்’ உள்ளிட்ட படங்கள் ஏ.எல்.சீனிவாசன் தயாரிப்பில் வெளிவந்தவை தான்.
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவராகவும் இருந்த இவர், தனது அக்கா மகள் அழகம்மை ஆச்சியை திருமணம் செய்து கொண்டார்.
பல்வேறு பெருமைகளுக்குச் சொந்தக்காரரான ஏ.எல்.எஸ் அவர்கள் 1977 ஆம் ஆண்டு, ஜூலை 30 ஆம் தேதி தனது 54 வது வயதில் இயற்கை எய்தினார்.