வாசிப்பே வாழ்வாக இருந்து மறைந்த தமிழறிஞர்!

அஞ்சலி :

மறைந்திருக்கிறார் தமிழால் நிறைந்திருந்த அறிஞரான அவ்வை நடராசன்.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் உள்ளிட்ட பல தமிழ் அடையாளம் சார்ந்த பல பொறுப்புகளில் அவர் இயங்கினாலும், அவருடைய தந்தை துரைசாமி அவர்கள் வழியில் இயல்பான தமிழுணர்வுடன் இருந்தார்.

அவருடைய வாழ்வைப் பற்றிய நூலை எழுதுவதற்காகக் கிட்டத்தட்டத், தொடர்ந்து ஓராண்டு வரைக்கும் நானும், நண்பர் உதய் பாடகலிங்கமும் அவரைச் சந்தித்துக் கொண்டிருந்தோம்.

புத்தகம் எழுதுவதற்காக அவரை ஒத்துழைக்க வைப்பதற்குள் படாதபாடு பட வேண்டியிருந்தது.

புத்தகம் சார்ந்த பணிக்காக அவரை வீட்டில் சந்திக்கும் போது வேறு விஷயங்களைப் பற்றித் தான் இயல்பாகப் பேசிக் கொண்டிருப்பார்.

சில சந்திப்புகள் பல மணி நேரம் நீளும்.

கடைசியில் நண்பர் உதய் பாடகலிங்கம் தொகுத்துக் கொடுத்து ‘அவ்வை அருளுக்குச் சொன்னது’ என்ற தலைப்பில் கலைஞன் பதிப்பக வெளியீடாக அது வெளி வந்தது.

அதற்காக நடந்த பல சந்திப்புகளுக்குப் பிறகு நெருக்கம் பாராட்டுகிறவராக அவர் மாறியிருந்தார். பேச்சு மனம் விட்டுப் பேசுகிற அளவுக்கு இருந்தது.

என்னுடைய சில புத்தக வெளியீட்டு விழாவுக்கு அவரை அழைத்தபோது, நட்புணர்வுடன் வந்து பார்வையாளராக அமர்ந்து பாராட்டிவிட்டுச் சென்றிருக்கிறார்.

ஓவியர் ஆதிமூலத்தைப் பற்றிய என்னுடைய நூல் வெளியீட்டுக்கும் அப்படி வந்திருந்தவர்- விழாவில் ஜெயகாந்தன் கலந்து கொண்டு பேசியதைப் பற்றிப் பெருமிதமாகச் சொன்னார்.

புத்தக வாசிப்பு அவரை இறுதி வரைப் பற்றித் தொடர்ந்திருந்தது.

ஓராண்டுக்கு முன்பு நான் தொகுத்து எழுதியிருந்த ‘கலைஞர் என்னும் மனிதர்’ நூலைப் பற்றி நாளிதழ் ஒன்றில் ஒரு பக்க அளவுக்கு விமர்சனம் எழுதியிருந்தார்.

அவர் மறைவதற்கு முன்பு அவருடைய படுக்கைக்கு அருகே – என்னுடைய தொகுப்பில் வெளியான – தமிழகத்தில் நடந்த மொழிப்போராட்டத்தைப்  பற்றிய நூலான ‘உயிருக்கு நேர்’ புத்தகம் இருந்ததாக அவருடைய உறவினர்கள் சொன்னபோது நெகி்ழ்வாக இருந்தது.

வாசிப்பே வாழ்வாக இருந்தவர் மறைந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

மணா

*

Comments (0)
Add Comment