– கவிஞர் கண்ணதாசன்
“நான் அதிகம் படித்தவன் அல்ல. எட்டாவது வரை தான் படித்தேன். என்னுடைய வாழ்க்கையில் எனக்கு உண்டான அனுபவங்கள் தான், நான் படித்த பெரிய படிப்பு.
உலகத்தில் குழப்பம் என்றால் நான் தான். உணர்ச்சி வசப்பட்டு முடிவுகளை அவசரத்துடன் எடுத்துவிட்டு, விளைவுகளுக்காக அமைதியாக உட்கார்ந்து வருத்தப்படுவேன்.
நான் எடுத்த அவசர முடிவுகள் பல நேரங்களில் தோல்வியையும், சில நேரங்களில் வெற்றியையும் கொடுத்திருக்கின்றன.
வெற்றியையும், தோல்வியையும், ஆண்டவன் இழைத்த நீதியோ, அநீதியோ என்று எடுத்துக் கொண்டு விடுவேன். இனிமேல் நான் எந்த விஷயத்திலும் அவசர முடிவு எடுக்க மாட்டேன்.
காதலிக்கும் பெண் நல்ல பெண்ணாக இருந்து, அந்தக் காதல் கை கூடி விட்டால், அது சொர்க்கம். காதலிக்கும் பெண் கிடைத்து அவள் நல்ல பெண்ணாக இல்லாவிட்டால் அது நரகம்.
காதலிக்கும் பெண் கிடைக்கவில்லை என்றால் நீங்கள் ஒரு கவி. நீங்கள் காதலிக்கும் பெண்ணை விட, உங்களைக் காதலிக்கும் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளுங்கள். வாழ்க்கை சொர்க்கமாக இருக்கும்.
நான் நிறையச் சம்பாதிக்கிறவன். ஆனால் அதைப் பாதுகாத்துக் கொள்ளத் தெரியாதவன். ஏன்? அது ஆண்டவன் எனக்கு விட்ட வழி. அவ்வளவு தான்.
– கவிஞர் கண்ணதாசன் அளித்தப் பேட்டியிலிருந்து ஒரு பகுதி.