ஜீத்து ஜோசப் படங்களைப் பார்ப்பதென்பது அலாதியான சுகம். நாம் கொஞ்சமும் எதிர்பார்க்காத திருப்பங்களை, எதிர்பாரா தருணத்தில் பரிசளிப்பது அவரது சிறப்பு.
கிருஷ்ணகுமாரின் எழுத்தாக்கத்தில் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ள மலையாளத் திரைப்படமான ‘கூமன்’ அந்த வரிசையில் இடம்பெறுகிறதா?
படம் பார்த்து முடித்தபிறகு ஜீத்துவின் படைப்பை ரசித்த எண்ணம் மனதில் படர்கிறதா? இந்த கேள்விக்கான பதில்களை முடிவில் பார்க்கலாம்.
களவாடும் போலீஸ்!
கேரளா – தமிழ்நாடு எல்லையிலுள்ள நெடும்பாறை காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றுபவர் கிரிசங்கர் (ஆசிஃப் அலி). தனது நுண்ணறிவால் குற்றங்களுக்கானத் தீர்வுகளைக் காண்பதில் வல்லவர்.
முப்பதுகளில் இருக்கும் கிரிக்குத் திருமணமாகவில்லை. இதை நினைத்து அவரது தாயார் (பாலி வல்சன்) தினமும் வருந்துகிறார்.
பள்ளியில் தன்னுடன் படித்த லெட்சுமியைக் (ஹன்னா ரெஜி கோஷி) கண்டால் கிரி மனதில் எப்போதும் அலையடிக்கும். கிரியின் தாயாரும் கூட இருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாமா என்று யோசிக்கிறார்.
இளம் வயதிலேயே பக்தி மணம் கொண்டவராக காட்சியளிக்கும் லெட்சுமி, அடிக்கடி வெளியூர் கோயில்களுக்குச் சென்று வருகிறார்.
முதல் அறிமுகத்திலேயே கிரிக்கும் ஹரிக்கும் முட்டிக் கொள்கிறது.
தன்னைக் காயப்படுத்தியவர்களை ஏதோ ஒரு வகையில் தண்டிக்க வேண்டுமென்ற வேட்கை கொண்டவர் கிரி. இதனாலேயே, பலமுறை சோமசேகரன் அவரை எச்சரித்திருக்கிறார்.
இந்த நிலையில், திருவிழாவையொட்டி நடக்கும் கபடி போட்டியில் உள்ளூர் அரசியல்வாதியான சுரேஷ் (தீபக்) தகராறு செய்ய, பழைய மோதலை மனதில் வைத்து அவரைத் தாக்குகிறார் கிரி.
இருவரையும் விலக்க முற்படும் ஹரி, கிரியை சேற்றில் தள்ளுகிறார். இக்காட்சி சமூக வலைதளத்தில் பரவ, அவமானத்தில் கூனிக் குறுகுகிறார் கிரி.
இன்ஸ்பெக்டர் ஹரிலாலை பழி வாங்க, திருட்டுக் குற்றவாளியான மணியன் (ஜாபர் இடுக்கி) உதவியை நாடுகிறார். ஆட்கள் இருக்கும் வீட்டில் புகுந்து திருடும் உத்திகளைக் கேட்டறிகிறார்.
போலீசாரே குழம்பும் வகையில் நள்ளிரவில் பல வீடுகளில் புகுந்து களவாடும் கிரி, ஒருநாள் ராமசாமி எனும் முதியவரிடம் மாட்டிக் கொள்கிறார். உண்மை தெரிந்துவிடுமோ என்ற பயத்தில் தமிழ்நாட்டு எல்லையைத் தாண்டிச் செல்கிறார்.
அதற்கடுத்த நாள், தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொள்ளும் மனநிலையோடு ஊர் திரும்புகிறார் கிரி. அங்கு, ராமசாமி தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்து அதிர்கிறார்.
ராமசாமி மரண பின்னணியை அறிய முற்படுகையில், அவரது மொபைலுக்கு ஒரு காணொளி வருகிறது. அதில், நள்ளிரவில் கிரி திருடச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருக்கிறது.
தன்னை யாரோ கண்காணிக்கின்றனர் என்பதை அறியும் கிரி, நடந்த கொலைகளுக்கு என்ன காரணம் என அறிவதோடு ‘கூமன்’ முடிவடைகிறது.
அகந்தை எனும் பலவீனம்!
கூகை என்றால் ஆந்தை என்று பொருள். ஆந்தையைப் போல இரவுப்பொழுதில் அலைந்து திரிபவனே கூமன்.
அப்படிப் பார்க்கையில், அகந்தையால் ஆந்தையாராக மாறிய நாயகனின் திருட்டு விளையாட்டும் அதனால் விடுபடும் கொலைப் புதிர்களும் என்ற வகையிலேயே ‘கூமன்’ திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
வழக்கமான திரைப்பட வடிவத்தோடு ஒப்பிடுகையில் ‘கூமன்’ முதல் பாதியில் பெரிய திருப்பங்களே இல்லாதது போன்று தோன்றும்.
ஆனால், தனது ஈகோவை திருப்திப்படுத்த கிரி எந்த எல்லைக்கும் செல்வார் என்பதே ‘கூமன்’ திரைக்கதையின் முதல் திருப்பம். அதற்கான எதிர்வினைகளே கூமனுக்கும் ஹரிலாலுக்கும் பகையை ஏற்படுத்துகிறது.
நிகழ்ந்த கொலைகளுக்கு யார், என்ன காரணம் என்று கிரி அறிவது இரண்டாம் திருப்பம்.
அதனைத் தொடர்ந்துவரும் காட்சிகள் கிளைமேக்ஸ் காட்சிக்கு இட்டுச் செல்கின்றன.
கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் நடுத்தர வயதுக்காரர்கள், இரவில் விழித்த காரணத்தால் பகலில் தூங்க முற்படும் பாத்திரங்கள், பெயர் தெரியாத சிறப்பு பூஜைகளின் பின்னே செல்லும் பாமரர்கள் என்று பல அம்சங்கள் முன்பாதியில் உள்ளன.
அவையே இரண்டாம் பாதியில் புதிய உண்மைகள் தெரிய வரக் காரணங்களாகவும் இருக்கின்றன.
அந்த வகையில், இக்கதையை எழுதி திரைக்கதை வசனம் அமைத்திருக்கும் கே.ஆர்.கிருஷ்ணகுமார் நம் கவனத்தை ஈர்க்கிறார்.
இதற்கு மேல் சொல்லும் விஷயங்கள் எல்லாம் ‘ஸ்பாய்லர்’ ரகம் என்பதால், இன்னும் படம் பார்க்காதவர்கள் இதனைப் படிக்க வேண்டாம்.
தந்த்ரா கலை முதல் பல விஷயங்கள் கேரளக் கரையோரம் தோன்றியது என்றபோதும், பக்தியை வைத்து மக்களை வேட்டையாடும் கதாபாத்திரமாக ஒரு தமிழரைக் காட்டியது ஏன் என்றுதான் தெரியவில்லை.
தவிர, இருண்மை வழிபாடு பழங்குடிகள் மத்தியில் இருந்ததாகச் சொல்லுமிடம் அபத்தத்தின் உச்சம். ஏனென்றால், இப்போதும் நரபலிகள் குறித்த செய்திகள் நகரங்களையே பெரும்பாலும் மையம் கொண்டிருக்கின்றன.
கிருஷ்ணகுமார் – ஜீத்து ஜோசப் கூட்டணி இதில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
ரீமேக் செய்யலாம்!
‘குட்டவும் சிக்ஷயும்’ படத்தில் இன்ஸ்பெக்டராக நடித்த கையோடு இதில் கான்ஸ்டபிளாக தோன்றியிருக்கிறார் ஆசிஃப் அலி. இரண்டுக்குமான வித்தியாசமே அவரது நடிப்புத்திறனுக்காக சான்று.
நாயகி லெட்சுமியாக ஹன்னா ரெஜிக்கு பெரிதாக திரைக்கதையில் இடமில்லை. ஆனால், அவரை முன்வைத்து எழுதப்பட்டிருக்கும் திருப்பம் நிச்சயம் ஆச்சர்யம் தரும்.
வில்லனாக வரும் கராத்தே கார்த்தி, ஆஜானுபாகுவான உடலமைப்புடன் நம்மை மிரட்டுகிறார்.
‘டாக்டர்’ படத்தில் யோகிபாபுவிடம் அடி வாங்கி நைட்டி போட்டு ‘போஸ்’ கொடுப்பாரே, அந்த காட்சியில் நடித்தது இவர்தான். கார்த்தி போலவே ரமேஷ் திலக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த கான்ஸ்டபிளாக இரண்டு காட்சிகளில் வந்து போயிருக்கிறார்.
ரெஞ்சி பணிக்கர், பாபுராஜ், பாலி வல்சன், அபிராம் பொதுவால், பைஜு என்று பலர் இதில் இடம்பெற்றிருக்கின்றனர். ஆனால், சில காட்சிகளே வரும் ஜாபர் இடுக்கி நம் மனதோடு ஒட்டிக்கொள்கிறார்.
அவருக்கென்றே இப்படிப்பட்ட காட்சிகள் அமைகிறதோ எனும் அளவுக்கு திருடன் மணியன் பாத்திரத்தில் அசத்தியிருக்கிறார்.
நள்ளிரவு நேர சேஸிங் காட்சியில் சதீஷ் குரூப்பின் ஒளிப்பதிவு அருமை. போலவே, கொஞ்சமும் திரைக்கதையின் ஆன்மா சிதையாதவாறு ஐசக் பால் காட்சிகளைத் தொகுத்திருக்கிறார்.
‘இருள் கண்ணுமே’ பாடல் மட்டுமல்லாமல் பின்னணி இசையிலும் மிரட்டியிருக்கிறார் விஷ்ணு ஷ்யாம்.
முதல் பாதியில் தேமெவென்று ஆசிஃப் அலியின் திருட்டு விளையாட்டுகளை பார்த்தாலும், அடுத்து ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருப்பதாகச் சொல்கிறது மனம்.
அப்படியொரு உணர்வு தோன்றக் காரணம் ஜீத்து ஜோசப் இயக்கிய முந்தைய படங்கள். அதற்கு நியாயம் செய்திருக்கிறது ‘கூமன்’.
சாதாரண மனிதர்களை அசாதாரணமானவர்களாக மாற்றவல்ல எந்தவொரு உத்தரவாதமும் போலியான பக்தி நெறிமுறை சார்ந்தே இருக்குமென்பதைச் சொன்ன வகையில், நம் மனதை நெருடும் குறைகள் தாண்டி இப்படத்தை நிச்சயம் ரசிக்கலாம்.
தன் திருட்டைக் கண்டுபிடித்த நபர் கொலையுண்டதைக் கண்டு ஆசிஃப் அலியின் பாத்திரம் அதிர்ச்சி அடையுமிடத்தில் இடைவேளை அமைக்கப்பட்டிருந்தால், ரசிகர்களை அலற வைக்கும் திருப்பங்களோடு இரண்டாம் பாதி சமநிலையோடு இருந்திருக்கும்.
தமிழ், தெலுங்கில் இப்படம் ‘ரீமேக்’ செய்யப்பட்டால், அம்முயற்சியைத் தாராளமாக மேற்கொள்ளலாம்.
-உதய்.பா