– எம்.என். நம்பியார்
மீள் பதிவு
தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக, வில்லனாக, நகைச்சுவை நடிகராக, குணச்சித்திர நடிகராகப் புகழ் பெற்றவர்கள் அதிகம்.
இதில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் பிரபலமானவர்கள் வரிசையில் மிக முக்கியமானவர் மாஞ்சேரி நாராயணன் நம்பியார் என்கிற எம்.என்.நம்பியார்.
கேரளாவில் உள்ள கண்ணூர் மாவட்டத்தில் பெருவமூர் கிராமத்தில் பிறந்த நம்பியார் உதகமண்டலத்தில் உள்ள உறவினர் வீட்டில் வளர்ந்தவர்.
மூன்றாம் வகுப்பு வரை படித்த அவர் பதிமூன்று வயதில் நவாப் ராஜமாணிக்கம் நாடகக்குழுவில் சமையலறை உதவியாளராகச் சேர்ந்து பின்னர் நடிகரானார்.
கிடைத்த வேடங்களில் பரிமளித்தார். நடிப்பும், முகபாவமும், ஏற்ற இறக்கம் நிரம்பிய குரலும் அவரைக் கவனிக்க வைத்தன.
1935 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘பக்த ராமதாஸ்’ நாடகத்தில் நடித்தபோது அவருக்குக் கிடைத்த சம்பளம் நாற்பது ரூபாய்.
திரும்பவும் நாடக உலகத்திற்குள் நுழைந்து திரைத்துறைக்குத் திரும்பியபோது ‘வித்யாபதி’ போன்ற படங்களில் நகைச்சுவை வேடங்கள் கிடைத்தன.
கஞ்சன், கல்யாணி உள்ளிட்ட படங்களில் கதாநாயக வேடங்கள் கிடைத்தன.
1950 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘திகம்பர சாமியார்’ படத்தில் 11 வேடங்களில் நடித்தபோது திரையுலகம் அவரைத் தனித்துக் கவனித்தது.
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த ‘மந்திரி குமாரி’யும், ‘சர்வாதிகாரி’யும் மக்கள் திலகத்துடன் வரிசையாக நம்பியார் நடித்த படங்கள், நடிப்பில் வில்லனாக அவரைத் திசை மாற்றி விட்டன.
ஏ.பி.நாகராஜனின் ‘தில்லானா மோகனாம்பாள்’ பாத்திரமும், ‘மக்களைப் பெற்ற மகராசி’ படத்தில் கிடைத்த குணச்சித்திர வேடமும் அவருக்குச் சிறப்புச் சேர்த்தன. மென்மையாகப் பாடலைப் பாடி நடித்திருப்பார்.
பாசமலர், பாகப்பிரிவினை, நினைத்ததை முடிப்பவன் போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் மிகையில்லாமல் நடித்திருந்தார்.
வில்லன் நடிப்பில் அவர் உச்சம் தொட்ட படங்களாக ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டுப் பிள்ளை, புதிய பூமி, படகோட்டி துவங்கி உலகம் சுற்றும் வாலிபன் வரை அடுத்தடுத்த வெற்றிகள் வில்லன் வேடத்திற்கு நம்பியார் என்றாக்கிவிட்டன.
குரல் உச்சரிப்பில் துல்லியம், சட்டென மாறும் முகபாவங்கள், சண்டையிடும் லாவகம் இவை நம்பியாருக்கான அடையாளங்களாக மாறியிருந்தன.
தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஜங்கிள் என்ற ஆங்கிலப்படம் உட்பட ஆயிரம் படங்களுக்கு மேல் அவர் நடித்திருப்பது ஆச்சர்யம்.
‘தூறல் நின்னு போச்சு’ படத்தின் மூலம் அடுத்தகட்ட நடிப்புக்கு அவரை நகர்த்தியவர் பாக்கியராஜ்.
‘பூவே உனக்காக’ படம் மூலம் விக்கிரமன் அவரை நகைச்சுவை ததும்பும் நடிப்புக்கு மடை மாற வைத்தார்.
பல தலைமுறை நடிகர்களுடனும் அவர் நெருக்கமாகப் பழக முடிந்ததற்குக் காரணம் அவருடைய நறுமணம் போன்ற அபூர்வமான இயல்பு.
சபரிமலைக்கு நாற்பது ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து சென்று திரைத் துறையினரை மட்டுமல்ல, தமிழர்களையும் அய்யப்பன் பக்கம் திருப்பியதில் நம்பியாரின் பங்கு அதிகம்.
திரையில் வெளிப்பட்ட முகத்திற்கு நேர் எதிரானது நம்பியாரின் தனிப்பட்ட வாழ்க்கை. நடிகர் என்பதற்கான பெருமிதங்கள் அவரிடம் இல்லை. பிரபலத்தன்மை எந்த மயக்கங்களை அவரிடம் உருவாக்கவில்லை.
மிக அபூர்வமாக அளித்த பேட்டிகளிலும் தன்னைப் பற்றிப் பெருமையாகப் பேசுவதற்குக் கூச்சப்பட்டிருக்கிறார். தனக்குப் பிடித்த நடிகையாக அவர் குறிப்பிட்டிருப்பது சாவித்ரியை.
குடும்பத்தின் மீது அசலான அன்பு காட்டியவரான நம்பியார் தனது மனைவி ருக்மணி மீது கொண்டிருந்த நேசம் பிரசித்தம். மனைவியின் சமையலை இறுதி வரைக் கொண்டாடியவர்.
நிஜ வாழ்வில் கோபத்திலிருந்து விலகி வாழ்ந்தவர். திரை வாழ்க்கை, தனிமனித வாழ்க்கை இரண்டிலும் மாறாத ஒழுங்குடன் வாழ்ந்தவர்.
சுகுமார், மோகன் என்று இரண்டு மகன்கள். சிநேகா என்கிற மகள் என்று எளிய குடும்பம்.
தன்னுடைய உடம்பை நெருங்கிய பந்தத்துடன் பார்த்துக் கொண்ட நம்பியார், 2008 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதியன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமாகும்போது அவருக்கு வயது 89.
இந்த நூற்றாண்டுத் தருணம் அவரை நெகிழ்வுடன் நினைவுகூர வைத்திருக்கிறது. அவரது திரை நிழல்களை அசை போட வைத்திருக்கிறது.
ஆயிரக்கணக்கான திரைப்படங்கள், விதவிதமான கதாபாத்திரங்கள் எல்லாவற்றையும் மீறி அவர் மறைந்து விட்டாலும், நெருக்கமாகவும் திரை மூலமாகவும் அறிந்தவர்கள் மத்தியில் இப்போதும் அவருடைய நினைவுகளை ஈரமாக வைத்திருக்கிறது அவர் வாழ்ந்த வாழ்க்கை.
நடிகராக இருந்ததை விட, இயல்பான மனிதராகத் தன்னைத் தானே முந்தியிருக்கிறார் எம்.என். நம்பியார்.
– மணா