மகாத்மாவின் நடைப் பயணங்கள்!

‘நடைப்பயிற்சி சிறந்த உடற்பயிற்சி’ என்ற வாசகத்தைப் பல பூங்காக்களில் பார்த்திருப்போம்.

உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு தினமும் நீண்டதூரம் நடைப்பயிற்சி செய்வது அவசியம் என்பதை விளக்குவதற்காக இந்த வாசகத்தை பல பூங்காக்களிலும் எழுதி வைத்துள்ளனர்.

நடைப்பயிற்சியை விட ஒரு சிறந்த உடற்பயிற்சி இல்லை என்பதை அந்தக் காலத்திலேயே இந்தியர்களுக்கு தன் நடைப்பயணங்கள் மூலம் விளக்கிச் சென்றவர் மகாத்மா காந்தி.

வெள்ளையருக்கு எதிரான போராட்டங்கள், எழுத்துப் பணிகள், உண்ணாவிரதங்கள், நீண்ட பயணங்கள் என்று நாளெல்லாம் பல வேலைகள் இருந்தாலும் மகாத்மா காந்தியின் உடல், பூரண ஆரோக்கியத்துடன், அவரது செய்கைகளுக்கு தோள் கொடுத்தது.

இதற்கு அடிப்படைக் காரணமாய் இருந்த விஷயம் அவரது நடைப்பழக்கம்.
1914-ம் ஆண்டு முதல் 1948-ம் ஆண்டு வரையான காலகட்டத்தில் மட்டும் மகாத்மா காந்தி சுமார் 79,000 கிலோமீட்டர் நடந்திருக்கிறார் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.

இந்த கணக்குப்படி பார்த்தால் இந்த உலகத்தையே அவர் 2 முறை வலம் வந்திருக்கலாம்.

இங்கிலாந்தில் படிக்கச் சென்ற காலகட்டத்தில்தான் மகாத்மா காந்திக்கு நடைப்பயணத்தின் மீது ஈர்ப்பு வந்துள்ளது. அதற்கு அவரது பொருளாதார நிலையும் ஒரு காரணமாக அமைந்துள்ளது.

1888 முதல் 1891 வரை இங்கிலாந்தில் சட்டப் படிப்பு படித்த காலத்தில் ஒரு பிரிட்டிஷ் குடும்பத்துடன் காந்தி தங்கியுள்ளார்.

இந்த காலகட்டத்தில் செலவைக் குறைப்பதற்காக, தான் தங்கியிருக்கும் இடத்தில் இருந்து கல்லூரிக்கு தினமும் 10 மைல் தூரம் நடந்தே சென்றிருக்கிறார் காந்தி.

லண்டனில் இருந்து மும்பை திரும்பிய பிறகும், அவரது நடைப் பயணத்தில் மாற்றம் வரவில்லை. தான் தங்கியிருந்த இடத்தில் இருந்து மும்பை உயர் நீதிமன்றத்துக்கு தினமும் 45 நிமிட நேரம் நடந்தே சென்றுள்ளார் காந்தி.

“இதுபற்றி தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ள மகாத்மா காந்தி, “மும்பையிலும் லண்டனிலும் நடப்பதற்கு ஒரு வித்தியாசம்தான் இருந்தது.

லண்டனில் சீதோஷண நிலை மிகவும் குளுமையாக இருக்கும். அதனால் எளிதாக நடக்கலாம். ஆனால் மும்பை வெயிலில் நடப்பது கடினமாக இருந்தது” என்கிறார்.

பின்னர் மும்பையில் இருந்து தென் ஆப்பிரிக்காவுக்கு சென்ற பிறகும் நடைப்பயிற்சியை அவர் விடவில்லை.

பிற்காலத்தில் இந்தியாவில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட காலத்திலும் நடைப் பயிற்சியை அவர் விடாமல் பற்றிக்கொண்டிருந்தார்.

சபர்மதி மற்றும் சேவாகிராம் ஆசிரமத்தில் தனது தினசரி நடவடிக்கைகளில் ஒன்றாக நடைப்பயிற்சியையும் அவர் சேர்த்திருந்தார்.

மும்பையில் 1924-ம் ஆண்டு குடல் அழற்சிக்காக அறுவை சிகிச்சை செய்த காலத்திலும் அவர் நடைப்பயிற்சியை விடவில்லை.

இந்த காலகட்டத்திலும் தன் உதவியாளர்களுடன் ஜுஹூ கடற்கரையில் தினமும் 40 நிமிடங்கள் அவர் நடந்துள்ளார்.

1931-ம் ஆண்டு வட்டமேஜை மாநாட்டுக்காக லண்டன் சென்றிருந்த சமயத்தில், தினமும் காலை 4 மணிக்கே எழுந்து, ஆளில்லாத தெருக்களில் அவர் நடைப்பயிற்சி மேற்கொண்டதாக வரலாறு தெரிவிக்கிறது.

1931-ம் ஆண்டு உப்பு சத்தியா கிரகத்துக்காக காந்தியடிகள் தண்டி யாத்திரை மேற்கொண்டபோது அவருக்கு 60 வயதுக்கு மேல் ஆகியிருந்தது.

இந்த காலகட்டத்திலும் சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தண்டி வரை 386 கிலோமீட்டர் தூரம் நடைப்பயணம் மேற்கொண்டிருக்கிறார் காந்தியடிகள். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அடிப்படையையே ஆட்டம் காண வைத்த நடைப்பயண்ம் அது.

இப்படி பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான ஆயுதமாகவும், தன் உடல் நலனைக் காப்பதற்காக உடற்பயிற்சியாகவும் நடைப்பயிற்சியை பயன்படுத்தியுள்ளார் காந்தியடிகள்.

-பிரணதி

Comments (0)
Add Comment