– சோ
அசோகன் குணச்சித்திர வேடம், வில்லன் கதாபாத்திரம், நகைச்சுவை என்று பல தரப்பட்ட வேடங்களில் நடித்த இவர் சொந்தக் குரலில் பாடியும் நடித்திருக்கிறார். ‘அன்பே வா’ போன்ற படங்களில் மென்மையான பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.
திரைப்படங்களில் அசோகனுடன் பல படங்களில் இணைந்து நடித்திருக்கிறவரான சோ அவரைப் பற்றிப் பகிர்ந்து கொண்ட சில விஷயங்கள்.
அசோகன் சினிமாவில்தான் பெரிய வில்லன்.
கொடுமை செய்வதற்கே அவதாரம் எடுத்தவரைப் போல வருவார். நேராகப் பார்த்தால் அதற்கு நேர் எதிரானவர்.
அவரை மாதிரி பிறருக்கு உதவி பண்ணுகிற மனிதனைப் பார்க்க முடியாது. தன்னால் மற்றவர்களுக்கு எவ்வளவு நல்லது பண்ண முடியுமோ அதைப் பண்ணிவிடுவார்.
அவ்வளவு நல்ல மனசு.
ஒருமுறை எங்களுடைய, “ஒய் நாட்” என்கிற நாடகத்தைப் பார்க்க வந்திருந்தார். நாடகம் துவங்குவதற்கு முன்பு ஒரு ‘தமாஷ் ‘பண்ணிப் பார்க்க எனக்கு ஆசை.
அவரை மேடைக்குப் பின்னால் கூப்பிட்டேன்.
“சாா்… முதல் சீனில் நீலு வருவான். நீங்க கலாட்டா பண்ணி அவனை நடிக்க விடக்கூடாது. அதுக்காக நீங்க என்ன பண்ணுவீங்களோ எனக்குத் தெரியாது. உங்களை முன் சீட்டில் உட்கார வைச்சிடுறேன்”
நான் இப்படிச் சொன்னதும் அசோகன், “சோ, சார்… அப்புறம் நீலு என்னைத் தப்பா நினைச்சுப்பாரே”- என்று என்னிடம் கெஞ்சவே ஆரம்பித்து விட்டார்.
“அவன் தப்பா நினைப்பான்ங்கிறதைப் பத்தியெல்லாம் நீங்க நினைக்கக் கூடாது. நீங்க எப்படியாவது இதைப் பண்ணி ஆகணும். இல்லன்னா நீங்க என்னோட பிரண்டே இல்லை” என்று ஒரு போடு போட்டேன்.
“ஐயோ… அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. பண்ணிடுறேன். ஆனா எசகு பிசகாப் போயிடுமே…”
அவரால் மீற முடியவில்லை. நாங்கள் பேசிக் கொண்ட விஷயம் நீலுவுக்குத் தெரியாது.
முன் சீட்டில் போய் உட்கார்ந்து விட்டார் அசோகன். நாடகம் துவங்கிவிட்டது. நீலுவுக்கு அந்த நாடகத்தில் கல்லூரி பிாின்ஸ்பால் வேஷம். நீலு வந்ததும் அவனிடம் கல்லூரி மாணவர்கள் வந்து பேசுகிற மாதிரியான காட்சி நடந்து கொண்டிருந்தது.
முன்னால் இருந்த அசோகன் எழுந்தார். உட்கார்ந்திருந்த சீட்டின் மேல் ஏறி நின்று கொண்டு உச்சஸ்தாயியில் உரக்க “நீலு அண்ணா… நீலு அண்ணா…” என்று அவர் கத்த, மேடையில் நடித்துக் கொண்டிருந்த நீலு, இந்த சீனைப் பார்த்து மிரண்டு போய்விட்டான்.
ஆடியன்ஸ் எல்லோரும் அசோகன் கத்திய விதத்தைப் பார்த்துச் சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள். நீலு முழித்துக் கொண்டிருந்தான்.
அசோகனின் கூச்சல் இன்னும் அதிகமானது.
“நீலு அண்ணா.. ஏமாந்து போயிடாதீங்க. பையன்கள் பிஸ்கோத்து கேட்பானுங்க… பையன்கள் பிஸ்கோத்து கேட்பானுங்க” என்று தன்னுடைய வழக்கமான பாணியில் பிரமாதமான முகபாவத்துடன் கத்தினார்.
“நீலுவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.
பார்த்தான்.
“என்னால் ஆக்ட் பண்ண முடியாது” என்று சொல்லிவிட்டு மேடைக்குப் பின்புறம் உள்ளே வந்துவிட்டான்.
ஆடியன்ஸ் எல்லோரும் சிரிக்கிறார்கள்.
ஒரே சலசலப்பு.
பின்னால் மேக்கப் ரூமுக்கு வந்தாா் அசோகன்.
“என்ன சார்… இப்படி பண்ணிட்டீங்க..” அவரிடம் தாழ்ந்த குரலில் கேட்டான் நீலு.
“சோ சாா்… சொல்லித்தாம்ப்பா இப்படிப் பண்ணினேன்” என்று ஒருவழியாகச் சமாளித்தாா் அசோகன். அதன்பிறகு மறுபடியும் நாடகம் தொடர்ந்து நடந்து முடிந்தது வேறு விஷயம்.
தன்னுடன் நெருங்கிப் பழகியவர்கள் சொன்னதற்காக பொது இடத்தில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இந்த அளவுக்கு கலாட்டா பண்ணுவதற்குக் கூட தயாராக இருப்பார் அசோகன்.
அப்படி எல்லோரிடமும் படுசகஜமாகப் பழகும் அசோகன் கோபப்பட்டதை ஒருமுறைதான் பார்த்திருக்கிறேன். எம்.ஜி.ஆரை வைத்து அவர் ‘நேற்று இன்று நாளை’ என்ற ஒரு படத்தை தயாரித்தார்.
அந்தப் படம் உருவாகும்போது பலதரப்பட்ட பிரச்சினைகள். பல தடங்கல்கள். அப்போது அவர் திட்டாத ஆட்களே இல்லை. எம்.ஜி.ஆர் உள்ளிட்ட நடிகர்கள், மதத்தலைவர்கள் எல்லோரையும் திட்டித் தீர்த்துவிட்டார்.
அப்படியொரு கோபம் அவருக்கு வந்துவிட்டது. பலரும் சேர்ந்து தன்னை ஏமாற்றிய உணர்வு அவருக்கு வந்துவிட்டது.
ஆனால் அசோகனை அந்த அளவுக்கு நேராக வைத்து ‘நேற்று இன்று நாளை’ படம் வெளிவந்து முதல் ரவுண்டில் சரியாக போகாவிட்டாலும், இரண்டாவது ரவுண்டில் பெரிய வெற்றி பெற்றுவிட்டது. போட்ட பணமும் கிடைத்து “எம்.ஜி.ஆரால் தான் பிழைத்தேன்” என்றும் சொல்லியிருக்கிறார்.
நான் டைரக்ட் செய்த ‘உண்மையே உன்விலை என்ன?”படத்தில் நடித்திருப்பார் அசோகன்.
அதற்கான ஷூட்டிங் நடந்தபோது கோட் பாக்கெட்டில் வைத்து வைக்க வேண்டிய துப்பாக்கியை மறந்து பேண்ட் பாக்கெட்டில் வைத்து விட்டார் அவர்.
ஷூட்டிங்கில் முத்துராமனைப் பார்த்து அவர் துப்பாக்கியால் சுட வேண்டியக் காட்சி.
அதில் நடித்துக் கொண்டிருந்தபோது துப்பாக்கியை எடுப்பதற்கு பேண்ட்டில் அவா் கையை விட்டாா்.
அவ்வளவுதான்.
எடுப்பதற்குள் பேண்ட்டிற்குள்ளேயே வெடித்துவிட்டது துப்பாக்கி.
ஒரே சத்தம். எல்லோரும் “என்ன ஆச்சோ” என்று பயந்து விட்டோம். துப்பாக்கியில் இருந்தது போலித் தோட்டாதான்.
இருந்தும் வெடித்ததில் அவருக்குத் தொடையில் சிறுகாயம்.
புலம்பிவிட்டார் அசோகன்.
“என்ன சார்? நல்லவேளை… துப்பாக்கி தள்ளி வெடிச்சிருச்சு. இல்லைன்னா சாகும்போது கூட அசோகன் அசிங்கமாச் செத்தான்னு செய்தி வந்திருக்குமே சாா்”… என்று அந்த வலியிலும் தமாஷாகப் புலம்பினார்.
அந்தப் படத்திற்கான ‘ஷூட்டிங்’ பெங்களூரில் நடந்து கொண்டிருந்தபோது தான் காமராஜர் மறைவுச் செய்தி வந்தது. செய்தி கிடைத்ததும் எனக்கு ஒன்றும் ஓடவில்லை. ஆளுக்கு ஆள் ஒவ்வொருவிதமாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
அசோகன் என்னைத் தனியாகக் கூப்பிட்டாா்.
“இந்தா பாருங்க, கொஞ்சம் தனியா உட்கார்ந்து யோசிங்க. இன்னைக்கு நீங்க போகலைன்னா வாழ்நாள் முழுக்க நாம் போகாம இருந்தது தப்புன்னு வருத்தப்படுவீங்களா? மாட்டீங்களா?
வருத்தப்படுவீங்கன்னா, ஷூட்டிங்கை இரண்டு நாள் நிறுத்திட்டு நீங்க சென்னைக்குப் போயிட்டு வாங்க. நாங்க இங்கேயே வெயிட் பண்றோம்.
வருத்தப்படலைன்னா போகாம இங்கேயே ஷூட்டிங்கைத் தொடா்ந்து நடத்துங்க.”
“இல்லை சார்… என்னால போகாம இருக்க முடியாது”- சொல்லிவிட்டு சென்னைக்குப் பல சிரமங்களுக்கு இடையில் காரில் போய்விட்டுத் திரும்பினேன்.
இதை எதற்கு இங்கே சொல்கிறேன் என்றால், எந்தப் பதட்டமான நேரத்திலும் மனதிற்குப் பட்டதை வெளிப்படையாகவும், நிதானமாகவும் பேசக்கூடியவர் அவர் என்று குறிப்பிடத்தான்.
அசோகன் நன்றாகப் பாடுவார். அவர் பாடி இரண்டு பாடல்களை நான் ரிக்கார்ட் செய்து வைத்திருக்கிறேன்.
அவரை நான் பாடச் சொன்னதும், “வாங்க… ரிக்காா்ட் பண்ணுங்க” என்று சந்தோஷமாக ஒப்புக் கொண்டு எனக்காக ரசித்துப் பாடினார்.
“என்னை ஒரு தாய் இனிமேல் சுமக்கக் கூடாது” என்கிறப் பாடலை அழகாகப் பாடியிருப்பார்.
மாயவநாதன் எழுதிய பாட்டு அது.
“இறந்தவனைச் சுமந்தவனும் இறந்துட்டான்” என்கிற பாடல் பிறகு சினிமாவில் வெளிவந்து விட்டது.
அந்த அளவுக்கு இசை ஞானமும் அவருக்கு உண்டு.
அவர் மீது யாருக்கும் கோபம் வருவதற்கு வாய்ப்பே இல்லாதபடி ஒரு குணம் அவரிடம் இருந்தது. யாரைப் பற்றியும் அவர்கள் இல்லாத சமயத்தில் குறை கூறிப் பேசமாட்டார்.
இந்தக் குணம் அசோகனுக்கு இருந்ததால்தான் எம்.ஜி.ஆர்., சிவாஜி என்று இருவருடனும் அடுத்தடுத்து நிறையப் படங்களில் நடிக்க முடிந்தது.
வில்லனாக, காமெடியனாக, குணச்சித்திர நடிகராக பல படங்களில் நடித்திருக்கிற அவருடைய இன்னொரு பக்கத்தில் எத்தனை நெகிழ்வான குணங்கள்!
*
‘மணா ‘எழுதித் தொகுத்த ‘சோ-வின் “ஒசாமஅசா” நூலிலிருந்து ஒரு பகுதி.