‘ஆர்டர்லி’ முறையைப் பின்பற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை!

– சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில், கான்ஸ்டபிளாக பணியாற்றியவர் முத்து. ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக, முத்துவுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

விசாரணைக்கு பின், 2014-ல் பணி நீக்கம் செய்யப்பட்டார். பணி நீக்கத்தை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில் முத்து வழக்கு தொடர்ந்தார்.

மனுவில், ‘பழிவாங்கும் விதத்தில், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மது குடிக்கும் பழக்கம் இல்லை. குற்றச்சாட்டை நிரூபிக்க, ரத்தம், சிறுநீரக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை. ஆதாரமில்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என கூறப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்த, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவில், “ஆர்டர்லி பணிகளை மேற்கொள்ளும்படி தன்னை வற்புறுத்தியதாக, மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார்.

துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக கூறுவதற்கு, போதிய ஆதாரம் இல்லை. மனுதாரருக்கு எதிராக, குற்ற வழக்குப் பதிவு செய்யப்படவில்லை; விரிவான விசாரணை நடத்தப்படவில்லை. எனவே, பணி நீக்கம் என்பது அதிகபட்சமானது.

பணி நீக்க உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது. மனுதாரரை, மீண்டும் பணியில் நியமிக்க வேண்டும். ஓராண்டுக்கு, சம்பள குறைப்பு செய்ய வேண்டும்.

ஆர்டர்லி முறையைப் பின்பற்றுவது குறித்து புகார் வந்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் சம்பளத்தை திரும்பப் பெற வேண்டும்.

துறை நடவடிக்கையும் எடுக்க வேண்டும். ஆர்டர்லி முறை பின்பற்றப்படாமல் இருப்பதை, மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்” என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Comments (0)
Add Comment