6 பேர் விடுதலையில் ஒன்றிய அரசு சீராய்வு மனு தாக்கல்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக இருந்த பேரறிவாளன், 142வது சட்டப்பிரிவின் கீழ் தனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது.

இதைத் தொடர்ந்து, முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோரும் இதே சட்டப்பிரிவை பயன்படுத்தி தங்களையும் சிறையில் இருந்து விடுதலை செய்யும்படி கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதை கடந்த 11-ம் தேதி நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நாகரத்னா அமர்வு விசாரித்து, 6 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, இவர்கள் 6 பேரும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இவர்களை விடுதலை செய்து பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு நேற்று திடீரென சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

ஒன்றிய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்  நடராஜ், இதை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ”ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை சிறையில் இருந்து விடுதலை செய்யும்படி கடந்த 11-ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபோது, எங்கள் வாதங்களை கேட்கவில்லை.

எனவே, 6 பேர் விடுதலை செய்யப்பட்ட உத்தரவை உச்சநீதிமன்றம் சீராய்வு செய்ய வேண்டும்” எனக் கோரப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment