முல்லைப் பெரியாறு அணையில் மத்திய நீா்வளக் குழு அமல்படுத்தியிருக்கும் ரூல் கா்வ் விதிமுறைப்படி, வரும் 29-ம் தேதி வரை 138 அடி உயரத்துக்குத் தான் தண்ணீரைத் தேக்க முடியும்.
கடந்த 8-ம் தேதி அணையின் நீா்மட்டம் 136 அடியை எட்டியது. அன்றைய தினம் கேரளத்துக்கு உபரி நீா் வெளியேறும் பகுதிகளுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
நீா்ப்பிடிப்புப் பகுதிகளான பெரியாறு அணை, தேக்கடி ஏரியில் மழை பெய்ததால் நீா் மட்டம் மேலும் அதிகரித்து வந்தது. நேற்றைய நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 137.95 அடியாக உயா்ந்தது.
அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 1,543 கன அடியாக இருந்தது. அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 511 கன அடி வீதம் தண்ணீா் வெளியேற்றப்பட்டது.
இந்த நிலையில், அணையின் நீா் மட்டம் 138 அடியை எட்டியது. இதையடுத்து, அணையிலிருந்து உபரி நீா் வெளியேறும் பகுதிகளான வல்லக்கடவு, வண்டிப் பெரியாறு உள்ளிட்ட பகுதிகளில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.