மிரள் – கிராமப்புற ‘பீட்சா’!

நடிகர் நடிகைகள், இயக்குனர், இசையமைப்பாளர் யார் என்று தேடிப் பிடித்து படம் பார்க்கும் வரிசையில் தயாரிப்பாளரையோ அல்லது தயாரிப்பு நிறுவனத்தையோ சேர்க்கலாமா?

ஆக்சஸ் பிலிம் பேக்டரி படங்களுக்குச் செல்லும்போது, இந்த எண்ணம் வலுப்பட்டிருக்கிறது. அப்படித்தான் ‘மிரள்’ படம் பார்க்கத் தயாரானேன். அந்த அனுபவம் எப்படிப்பட்டது?

மிரளவைக்கும் கதையா?

ஒரு தம்பதி. அவர்களுக்கு ஒரு மகன். காணக்கூடாததைக் கண்ட அதிர்ச்சியில் மனைவி இருக்க, அவருக்காக என்ன செய்யலாம் என்று துடிக்கிறார் கணவர். வீட்டை மாற்றியும் அப்பிரச்சனைக்குத் தீர்வு காண முடியவில்லையே என்று தவிக்கிறார்.

அந்த நேரத்தில், வேலை செய்யுமிடத்தில் கணவரின் உயிர் போகும் ஆபத்து ஒன்று நிகழ்கிறது. அதிலிருந்து தப்பிப்பவர், தனது நண்பருடன் நேராக வீடு திரும்புகிறார். அதிர்ச்சியில் மிதப்பவரை ஒரு போன் கால் முற்றிலுமாக மாற்றுகிறது.

அந்த தம்பதியர் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள். மனைவி வீட்டாருடன் பேச்சுவார்த்தை இல்லாதிருந்த நிலையில், குழந்தையோடு சேர்ந்து வருமாறு மாமனார் வீட்டில் இருந்து அழைப்பு வருகிறது. அந்த பயணம் தங்களது வாழ்வை மாற்றும் என்று நம்புகிறார் கணவர்.

மனைவி வீட்டாரின் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று படையல் போட்டு வழிபாடு செய்கிறார் கணவர்.

அந்த நிகழ்வுக்காக, அவரது நண்பரும் கூட தனது மனைவி மகளுடன் வந்திருக்கிறார்.

அன்றிரவு, புது புராஜெக்ட் ஒன்றில் கையெழுத்திடுவதற்காக சென்னை செல்ல முடிவெடுக்கிறார் அந்த நபர். மனைவி மகளுடன் கிளம்புகிறார்.

வழியில் முகமூடி அணிந்த ஒருவர் அம்மூவரையும் திகிலில் ஆழ்த்துகிறார். கொலைவெறியோடு துரத்துகிறார். அதிலிருந்து மூவரும் தப்பித்தார்களா இல்லையா என்பதே கதை.

இதில் பரத்தும் வாணி போஜனும் தம்பதியராக வருகின்றனர். பரத்தின் நண்பராக ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ ராஜ்குமார் நடித்திருக்கிறார்.

இவர்களது கதாபாத்திரப் பெயர்களைக் குறிப்பிடாமல் கதையைச் சொன்னதற்கும் இத்திரைக்கதைக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அதனைச் சொன்னால் ‘ஸ்பாய்லர்’ ஆகிவிடும். யூகிக்கும் திறன் கொண்டவர்கள் தங்கள் திறமையைப் பயன்படுத்தலாம்.

நள்ளிரவில் மனைவி மகனுடன் நாயகன் காரில் பயணிக்கும்போதே ‘த்ரில்’ தொடங்கி விடுகிறது. அதன்பிறகு, ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் அந்த த்ரில் எகிறி மேலேறி நம்மையும் இருக்கை நுனிக்குக் கொண்டுவர வேண்டும்.

அது நடைபெறாததால் ‘ஓ நாம இப்போ மிரளணுமா’ என்று ஒவ்வொரு காட்சிக்கும் கேட்கத் தோன்றுகிறது.

பேஸ்மெண்ட் ஓகே!

பரத், வாணி போஜன், கே.எஸ்.ரவிக்குமார், ராஜ்குமார், போலீஸ் அதிகாரியாக வரும் அர்ஜெய் என்று அனைவருமே நன்றாக நடித்திருக்கின்றனர்.

படத்தொகுப்பாளர் கலைவாணன், ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலா, கலை இயக்குனர் மணிகண்டன் சீனிவாசன், இசையமைப்பாளர் பிரசாத் எஸ்.என். உட்படத் தொழில்நுட்பக் கலைஞர்களும் நன்றாகத்தான் உழைத்திருக்கின்றனர்.

எல்லாமே இருந்தும் படம் நிறைவுறும்போது கொஞ்சம் கூட திருப்தியே ஏற்படவில்லை. காரணம், மிக எளிமையானது.

அடிப்படைக் கதைக்கும் ஒட்டுமொத்த திரைக்கதைக்கும் இடையே பெரிய இடைவெளி.

அதனால், முழுப்படமும் ‘பேஸ்மெண்ட் ஓகே பில்டிங் வீக்’ என்று சொல்ல வைத்திருக்கிறது.

அது மட்டுமல்லாமல், கிளைமேக்ஸ் காட்சி முடியும்போது நமக்குள் பல கேள்விகள் முளைக்கின்றன. அவற்றுக்கு திரைக்கதையில் எந்தப் பதிலும் இல்லை.

பீட்சா வைத்த சூடு!

கார்த்திக் சுப்புராஜ் அறிமுகமான ‘பீட்சா’ பாணியில் ஒரு திரைக்கதை அனுபவத்தைத் தர முயற்சித்திருக்கிறார் புதுமுக இயக்குனர் எம்.சக்திவேல். அதில் தவறேதும் இல்லை.

ஆனால், திரைக்கதையில் அவர் முன்வைக்கும் திருப்பங்கள் நமக்கு அயர்வையே தருகின்றன.

பீட்சாவில் நாயகன் தவிர்த்துப் பல பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இருக்கும். சிலவற்றுக்குப் பின்னணி கூடச் சொல்லப்பட்டிருக்கும். அப்படியொரு விஷயம் இதில் நிகழவே இல்லை.

மிக முக்கியமாக, பரத் – வாணி போஜன் ஜோடிக்கு தந்த முக்கியத்துவத்தில் சிறு பகுதி கூட ராஜ்குமாருக்கோ, அவரது மனைவியாக நடித்தவருக்கோ தரப்படவில்லை.

கிளைமேக்ஸில் முன்வைக்கும் திருப்பத்தை மட்டுமே நம்பியிருந்தால், அதற்கேற்ப முன்கதையில் சில மாற்றங்களை கைக்கொண்டிருக்க வேண்டும்.

அதற்காக, இப்போதிருக்கும் ‘ஹாரர் த்ரில்லர்’ பாணியில் இருந்து விலகும் அவசியம் கூட இல்லை. பார்வையாளர்கள் முதன்முறை கவனித்தும் தவறவிட்ட சிறு விஷயங்களாக கூட அவற்றை வடிவமைத்திருக்கலாம்.

ஒரு கதை யாருடைய பார்வையில் சொல்லப்படுகிறது? யாரிடம் சொல்லப்படுகிறது என்பது மிக முக்கியம். பீட்சா படத்தில் செகண்ட் கிளைமேக்ஸ் வரை, அந்த விதி தெளிவாகப் பின்பற்றப்பட்டிருக்கும்.

அதில் தெளிவில்லாத காரணத்தால், ‘மிரள்’ படத்தின் மொத்த உழைப்பும் விழலுக்கு இறைத்த நீராகிறது. புலி மீதிருக்கும் வரிகளைப் பார்த்து பூனை சூடு வைத்துக்கொண்ட பழமொழி நினைவுக்கு வருகிறது.

மரகத நாணயம், இரவுக்கு ஆயிரம் கண்கள், ராட்சசன், ஓ மை கடவுளே, பேச்சுலர், குற்றம் குற்றமே, உறுமீன் என்று ஒவ்வொரு திரைப்படமும் வித்தியாசமாக அமைய வேண்டுமென்பதில் மெனக்கெடல் காட்டியது ஆக்சஸ் பிலிம் பேக்டரி.

இவற்றில் சில படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட, சிறு கவனிப்பைக் கூட பெறாமல் சில கைவிடப்பட்டிருக்கின்றன.

அதையும் மீறி, ஆக்சஸ் பிலிம் பேக்டரி எனும் தயாரிப்பு நிறுவனத்தின் மீது சினிமா ரசிகர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

அந்த பெயருக்காக மட்டும் திரையரங்கு வந்த ரசிகர்கள் ஓன்றிரண்டு பேராவது இருப்பார்கள். அவர்களை ஏமாற்றியிருக்கிறது ‘மிரள்’.

பரத், வாணி போஜன் உட்பட இப்படைப்போடு சம்பந்தப்பட்ட அனைவருக்கும் ‘பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்’ என்றுதான் சொல்லியாக வேண்டியிருக்கிறது.

– உதய் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment