தயாரிப்பாளர்களுக்கு மூட்டை, மூட்டையாய் சம்பாதித்து கொடுத்த இயக்குநர்கள், ஒரு கால கட்டத்தில் தாங்களும் தயாரிப்பாளர்களாகி விடுவர்.
அடுத்த கட்டத்துக்கு தங்களை உயர்த்திக்கொள்ளும் ஆசை ஒரு புறம் இருப்பினும், தங்கள் உழைப்பை தாங்களே முழுமையாக அறுவடை செய்யும் நோக்கமும் இதில் உண்டு.
ஒரே நேரத்தில் இரட்டை குதிரைகளில் சவாரி செய்த தமிழ் சினிமா ஜாம்பவான்களில் தோற்றவர்களே அதிகம். வெற்றி அடைந்தவர்கள் சொற்பமே!.
ஸ்ரீதர், ஏ.பி.நாகராஜன் காலத்துக்கு பிந்தைய இயக்குநர்களை மட்டும் இங்கே பார்க்கலாம்.
தொடக்க காலத்தில் வெற்றிக்கொடி நாட்டினாலும், பின்னாட்களில் பாரதிராஜா, டி.ராஜேந்தர், கே.பாக்யராஜ் உள்ளிட்டோர் இழப்பையே சந்தித்தனர்.
கே.பாலசந்தர், தனது இரட்டை சவாரி பயணத்தில், கடைசி காலத்தில் கொடுத்த படங்கள் அனைத்துமே பொருளாதார ரீதியில் அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியவை. அதற்கு டூயட் போன்ற படங்கள் உதாரணம்.
அந்த சரிவில் இருந்து அவர் தயாரித்து பிறர் இயக்கிய படங்கள் (அண்ணாமலை, முத்து, சாமி போன்றவை) கே.பி.யை நெருக்கடியில் இருந்து மீட்டன.
கோடம்பாக்க கனவுத் தொழிற்சாலையில் தயாரிப்பாளராகவும் வென்ற சில இயக்குநர்களை பார்க்கலாம்.
மணிரத்னம்
இயக்குநர் மணிரத்னம், தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீசை ஆரம்பித்த பின், பெரும்பாலும் தனது பேனர் படங்களை மட்டுமே இயக்கினார். ஒரு படம் தோற்றால் அடுத்த படத்தில் எழுந்து கொள்வார்.
கடந்த 10 ஆண்டுகளில் அவர் பல தோல்வி படங்களை தந்தாலும், வட்டியும், முதலுமாக ‘பொன்னியின் செல்வன்’ மூலம் ஈடுகட்டிக் கொண்டார்.
இந்தப்படத்தை மணிரத்னம், லைகா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து இருந்தார்.
முதல்பாகமே ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாக சொல்லப்படும் நிலையில், இந்த வெற்றியின் மூலமாக மட்டுமே, அவர், இன்னும் 10 ஆண்டுகள் தாக்குப்பிடித்து நிற்க முடியும்.
ஷங்கர்
பாரதிராஜாவுக்கு அடுத்தபடியாக, தொடர்ச்சியாக வெள்ளிவிழாப் படங்களை கொடுத்த டைரக்டர்- ஷங்கர்.
முதல்வன் படம் மூலம் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்து பிரமாண்ட வெற்றி கொடுத்தார்.
பிறரை வைத்து இவர் தயாரித்த படங்களில் காதல், இம்சை அரசன்
படங்கள் தவிர மற்றவை பெரிதாக போகவில்லை.
இம்சை அரசன் இரண்டாம் பாகத்துக்கு வடிவேலு தந்த இம்சை, ஷங்கரை வேதனைக்கு ஆளாக்கியது.
பாய்ஸ், ஐ தவிர இவரது இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களும் வெற்றி கண்டதால், இன்றைக்கு கணிசமான சம்பளம் வாங்கும் டைரக்டராக ஷ்ங்கர் இருக்கிறார். பொருளாதார சிக்கல் இல்லை.
பி.வாசு (வால்டர் வெற்றிவேல்) கே.எஸ்.ரவிகுமார் (தெனாலி) எஸ்.பி.முத்துராமன் (பாண்டியன்), ஜி.என்.ரங்கராஜன் (மகாராஜன்) ஆகியோர் ஒரு படத்தோடு தயாரிப்பு ஆசையை சுருக்கிக்கொண்டதால், சிக்கலில் மாட்டவில்லை.
பாலா, சசிகுமார், பா.ரஞ்சித், மிஷ்கின் உள்ளிட்டோர் தயாரிப்பில் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை என்பதே நிஜம்.
– பி.எம்.எம்.