சூப்பர் ஸ்டாரைத் தந்த சூப்பர் ஸ்டார்!

தெலுங்கு திரைப்பட உலகில் 50 ஆண்டு காலம் கோலோச்சிய நடிகர் கிருஷ்ணா மறைந்திருக்கிறார்.

70-களில் தெலுங்கு சினிமாவின் ‘சூப்பர் ஸ்டார்’ ஆக விளங்கியவர் கிருஷ்ணா.

சூப்பர் ஸ்டார் குடும்பத்தில் இருந்து ஒரு நட்சத்திரம் தோன்றுவது இயல்பு. ஆனால், சூப்பர் ஸ்டார் வீட்டில் இருந்தே இன்னொரு ‘சூப்பர் ஸ்டார்’ தோன்றியது இந்தியாவிலேயே கிருஷ்ணாவின் குடும்பத்தில் தான்.

அந்த மற்றொரு சூப்பர் ஸ்டார் வேறு யாருமல்ல – மகேஷ்பாபுதான்.
கிருஷ்ணாவின் இளையமகன்.

இரண்டு சூப்பர் ஸ்டார்களை தந்த குடும்பத்தில் தொடர்ச்சியாக நிகழ்ந்த துயரங்கள், தெலுங்கு தேச ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருப்பது நிஜம்.

கிருஷ்ணாவுக்கு இரண்டு மனைவிகள்.
முதல் மனைவி இந்திராதேவி. கிருஷ்ணாவின் தாய் மாமன் மகள். இடண்டாவது மனைவி நடிகை விஜய நிர்மலா.

தமிழில் பட்டி, தொட்டி, பட்டணம் என சகல ஏரியாக்களிலும் கலக்கிய ‘எலந்த பழம்’ பாடலால் புகழின் உச்சிக்கு ஏறியவர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு விஜயநிர்மலா மரணம் அடைந்தார். இந்த ஆண்டு தொடக்கத்தில் கிருஷ்ணாவின் மூத்த மகன் ரமேஷ்பாபு இறந்து போனார்.

இதன் தொடர்ச்சியாக முதல் மனைவி இந்திராதேவி கடந்த செப்டம்பர் மாதம் காலமானார்.

அடுத்தடுத்து நிகழ்ந்த மூன்று அகால மரணங்களால் துவண்டிருந்த கிருஷ்ணாவுக்கு திங்களன்று மாரடைப்பு ஏற்பட்டது. சுயநினைவை இழந்தார்.

ஐதராபாத்தில் உள்ள தனியார மருத்துவமனையில் சேர்த்தனர். நினைவு திரும்பாமலேயே தனது 80-வது வயதில் இயற்கை எய்தினார்.

தெலுங்கு ஜேம்ஸ்பாண்ட்

1942 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள புர்ரிபாளையம் கிராமத்தில் பிறந்தார்.

என்.டி.ராமராவும், நாகேஸ்வரராவும் தெலுங்கு சினிமாவை ஆட்சி செய்து கொண்டிருந்த காலகட்டத்தில் கிருஷ்ணா சினிமா உலகில் நுழைந்தார்.

அவர் கதாநாயகனாக நடித்த ‘தேன மனசுலு’ படம் 1965 ஆம் ஆண்டு வெளியானது. அதன் பிறகு சுமார் 50 ஆண்டுகளில் 350 படங்களில் நடித்து சாதனை படைத்தார்.

தெலுங்கு சினிமா உலகின்  ‘ஜேம்ஸ்மாண்ட்’ என அழைக்கப்பட்டார் கிருஷ்ணா.
அவர் நடித்த முதல் ஜேம்ஸ்பாண்ட் படம் – கூடாச்சாரி-116.

தெலுங்கு சினிமாவின் முதல் சினிமாஸ்கோப், முதல் ஈஸ்ட்மென்கலர், முதல் 70 எம்.எம். படங்களை இவர் தான் அறிமுகம் செய்தார். ‘கவ்பாய்’ படங்களை தெலுங்கில் அறிமுகம் செய்தவரும் இவரே.

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர், ஸ்டூடியோ உரிமையாளர் மற்றும் அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர் – கிருஷ்ணா.

ராஜீவ்காந்தி மீது அலாதி பாசம் கொண்டவர். அவரது வேண்டுகோளுக்கு இணங்க காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

ஆந்திர மாநிலம் ஏலூரு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் 1989 ஆம் ஆண்டு போட்டியிட்டு எம்.பி ஆனார்.

நாளாவட்டத்தில் அரசியல் கசந்தது. அரசியலில் இருந்து விலகி சினிமாவிலேயே கவனம் செலுத்தினார்.

தமிழில் விக்ரம் நடித்த ‘கந்தசாமி’ படத்தில் சி.பி.ஐ. அதிகாரியாக நடித்துள்ளார்.

தெலுங்கில் இவருடன் ரஜினிகாந்த் மூன்று படங்களில் நடித்திருக்கிறார்.

இப்படிப் பல்வேறு பெருமைகளுக்குச் கிருஷ்ணாவின் மறைவு தெலுங்கு திரை உலகுக்குப் பேரிழப்பு என்பதில் சந்தேகமில்லை.

-பி.எம்.எம்.

Comments (0)
Add Comment