வ.கெளதமன் கோரிக்கை.
நீண்ட ஆண்டுகளாக சிறையில் கழித்த முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய நான்கு பேரையும் இலங்கைக்கு அனுப்பக்கூடாது என தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளர் வ. கெளதமன் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உச்சநீதிமன்றம் பலமுறை விடுதலை செய்ய சொல்லியும் கேளாமல் அதிகாரத்தை கையில் வைத்திருந்த கவர்னர்கள் புரோகித், ஆர். என். இரவி போன்றோர் நீதியை நிலை நாட்டாமல் காலம் தாழ்த்திவிட்ட நிலையில் மீண்டும் உச்ச நீதிமன்றமே தனது கையிலெடுத்து முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், நளினி ஆகிய அறுவரையும் விடுதலை செய்திருப்பது வரவேற்பிற்குரியது.
விடுதலைப் பெற்றவர்கள் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்குள் அதிலுள்ள நால்வரை மட்டும் தனிமைப்படுத்தி வெளிநாட்டவர்கள் என்று காரணம் கூறி மீண்டும் திருச்சி சிறப்பு முகாமில் அங்குள்ள கைதிகளைக்கூட சந்திக்கவிடாமல் அறைகளின் ஜன்னல், கதவுகளைக்கூட அடைத்து பூட்டி சிறை வைத்திருப்பதென்பது ஒரு கொடூர வன்முறையாகும்.
இத்தகைய ஈவு இரக்கமற்ற செயலுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு தமிழ்நாடு அரசு உடனடியாக அவர்களை திறந்த வெளிக்குள் அனுமதித்து அவர்கள் விரும்புகிற அயல்நாட்டிற்கு செல்வதற்கான ஏற்பாடுகளை விரைந்து செய்ய வேண்டுமென தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் அவர்கள் நால்வரையும் இலங்கக்கு விரைவில் அனுப்ப இருப்பதாக தெரிவிதிருப்பது கடும் அதிர்ச்சியளித்தது. தமிழ்நாடு அரசும் காவல் துறையும் முடிவு செய்யாமல் இப்படி ஒரு அறிவிப்பை ஆட்சியர் அவர்கள் வெளியிடுவதற்கு வாய்ப்பே இல்லை.
மேற்கண்ட நால்வரின் விருப்பம் இல்லாமல் சட்டம் ஒழுங்கு சரியில்லாத இன்றைய இலங்கைக்கு அனுப்புவது என்பது மீண்டும் அவர்களை கொலைக்களத்திற்கு அனுப்புவதற்கு ஒப்பான செயல் என்பதை உரிமையோடு தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.