வாடகைத்தாய் பின்னணியில் வேறு உலகம்!

புராண காலத்து யசோதா தேவகியின் வயிற்றில் உதித்த கிருஷ்ணரைத் தனது மகவாகப் பெற்றெடுத்தார்.

இந்தக் கால ‘யசோதா’வோ, சூழலின் காரணமாக வாடகைத் தாயாகி யாரோ ஒரு முகம் தெரியாத நபரின் குழந்தையை வயிற்றில் சுமக்கிறார்.

இயக்குனர் ஹரி மற்றும் ஹரிஷ் இருவரும் நாயகி சமந்தாவிடம் கதை சொல்லும்போது மேற்சொன்ன வார்த்தைகளைத்தான் சொல்லியிருப்பார்களென்று தோன்றுகிறது.

அதற்காக பகவத்கீதை வாக்கியங்களையோ, சமஸ்கிருத மந்திரங்களையோ பின்னணியில் ஒலிக்கவிட்டு ஆக்‌ஷனில் பின்னிப்பெடலெடுக்காமல் குற்றப் பின்னணியில் அமைந்த அறிவியல் புனைவாக ‘யசோதா’வை தந்திருக்கின்றனர்.

எல்லாம் சரி, படம் ரசிக மனங்களின் ரசனையோடு யசோதா பொருந்தியிருக்கிறதா?

வாடகைத்தாய் பின்னணி!

தொடக்கத்திலேயே சொல்லிவிட்டதால் கதையைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.

போதைப்பொருள் செலுத்தியதால் ஒரு வெளிநாட்டு மாடல் கோரமான முறையில் மரணமடைவதில் இருந்து திரைக்கதை தொடங்குகிறது.

அடுத்து, ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு தொழிலதிபருடன் இந்தியாவின் முன்னணி மாடல் ஒருவர் பயணிக்கும்போது, அந்த கார் வெடித்து இருவரும் பலியாகின்றனர்.

மேற்சொன்ன இரண்டு வழக்குகளும் தனித்தனியாக விசாரிக்கப்படுகிறது. அடுத்தடுத்து நடக்கும் கொலைகளும் அங்கு கிடைக்கும் ஆதாரங்களும் இரு வழக்குகளுக்கும் தொடர்பிருப்பதைக் காட்டுகிறது.

அதேநேரத்தில், டாக்டர் கௌதம் (உன்னி முகுந்தன்) மற்றும் மது (வரலட்சுமி சரத்குமார்) நிர்வகித்துவரும் மருத்துவமனையில் ஒரு வாடகைத்தாயாக யசோதா (சமந்தா) சேர்க்கப்படுகிறார்.

அங்கு, அவரைப் போலவே பல கர்ப்பிணிப் பெண்கள் இருக்கின்றனர். அனைவருமே வாடகைத்தாய்களாக வந்தவர்கள்தாம். பல வசதிகளோடு தனியறையில் இருந்தாலும், அவர்கள் சிறையில் இருக்கும் உணர்வையே பெறுகின்றனர்.

அந்த இடத்தில், பிரசவ வலியெடுத்து ரகசிய அறைக்குள் செல்லும் கர்ப்பிணிகள் என்னவாகின்றனர் என்பது பற்றி எவருக்கும் தெரியவில்லை. சந்தேகம் வலுப்பெற, உண்மையைத் தேடிச் செல்கிறார் யசோதா.

அப்போது தெரியவரும் கொடுமைகள் எவ்வளவு பயங்கரமாக இருக்கின்றன என்பதே ‘யசோதா’வின் அடிப்படைச் சிறப்பு.

குளோனிங், ஸ்டெம் செல் உட்பட அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றி சிலாகிக்கும்போதெல்லாம் அவற்றின் பாதகமான பக்கங்களைக் காட்டும் கற்பனைகளும் உருப்பெறத்தான் செய்கின்றன.

அந்த வகையில், வாடகைத்தாய் பின்னணியில் நிகழக்கூடிய குற்றங்களின் ஒரு பகுதியைப் பேசும் ’கிராபிக் நாவல்’ ஆகத் தோற்றமளிக்கிறது ‘யசோதா’.

‘பிட்’ சமந்தா!

குறும்பு, கோபம், வேட்கை மிகுந்த பெண்ணாக நடித்திருக்கிறார் சமந்தா. அவரது பிட்னெஸ் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு உதவியிருக்கிறது.

ஆனால், கர்ப்பமாக இருக்கும்போது ஓடியாடிச் சண்டையிடுவதாக காட்டுவதெல்லாம் கொஞ்சம் ஓவர்!

சமந்தாவின் தங்கையாக நடித்தவருக்குப் பெரிதாக வேலையில்லை. ஆனால், மருத்துவமனையில் சமந்தாவின் குழுவில் இடம்பெற்றிருக்கும் பெண்களாக நான்கு பேர் வருகின்றனர். அதில் திவ்யா ஸ்ரீபதா, கல்பிதா இருவரும் நம் கவனம் ஈர்க்கின்றனர்.

வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன் பாத்திரங்கள் எப்படிப்பட்டவை என்பதை சினிமா பித்து கொண்ட ஒரு ரசிகரால் எளிதில் ஊகித்துவிட முடியும். போலவே ராவ் ரமேஷ், முரளி சர்மாவின் பாத்திரங்களும் அமைந்திருக்கின்றன.

இப்படத்தில் ராவ் ரமேஷ், வரலட்சுமி, உன்னி ஒன்றாகச் சேருமிடம் மட்டுமே இதில் ஆச்சர்யப்படுத்தும் அம்சம். சம்பத், சத்ரு என்ற ராமகிருஷ்ணா குழுவினர் விசாரணை மேற்கொள்ளும் காட்சிகள் திரைக்கதையின் வேகத்தை அதிகப்படுத்துகின்றன.

இப்படியொரு கதையில் வெவ்வேறு களங்களுக்கேற்ப ஒளிப்பதிவு அமைவது அவசியம். எம்.சுகுமாரின் உழைப்பு அதனைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது.

மார்த்தாண்ட் வெங்கடேஷின் படத்தொகுப்பும் மணி சர்மாவின் பின்னணி இசையும் காட்சிகளின் அடர்த்தியை அதிகப்படுத்தியிருக்கின்றன.

மருத்துவ ஆய்வு தொடர்பான கற்பனையில் கலை இயக்குனரின் பங்கு முக்கியம். அதற்காகவே நிறைய மெனக்கெட்டிருக்கிறார் அசோக் குமார்.

வெங்கட்டின் தலைமையிலான விஎஃப்எக்ஸ் குழுவினருடன் இணைந்து அவரது அணி கூட்டுழைப்பைக் கொட்டியிருப்பதற்குப் பலன் கிடைத்திருக்கிறது.

இயக்குனர்கள் ஹரிஷ் சங்கர், ஹரி நாராயணன் இருவரும் இணைந்து திரைக்கதை அமைத்திருக்கின்றனர்.

அது மட்டுமே திரையரங்கில் நாம் தொடர்ந்து அமர்வதற்கான உத்தரவாதத்தை வழங்கியிருக்கிறது.

அதே நேரத்தில், கிளைமேக்ஸ் காட்சியில் நெளிய வைத்திருப்பதை தவிர்த்திருக்கலாமே என்பதையும் குறிப்பிட வேண்டியிருக்கிறது.

முன்பாதி ‘த்ரில்’!

யசோதாவாக நடித்துள்ள சமந்தாவைச் சுற்றியே மொத்த திரைக்கதையும் நகர்கிறது. அதற்கேற்ப, ஆக்‌ஷன் காட்சிகளில் அவரது இருப்பு குறித்து எழும் கேள்விகளுக்குப் பின்பாதியில் பதில் தரப்பட்டிருப்பது அருமை.

வெளிநாட்டு மாடல் மரணம், உள்ளூர் மாடல் கொலை என்பதில் இருந்து வாடகைத்தாயாக மாறிய பெண்கள் ஒரே இடத்தில் தங்குவதைக் காட்டும்போதே, அதன் பின்னணியில் குற்றம் இருப்பதாகத் தோற்றம் தென்படுகிறது. அதனால், இடைவேளை வரை தங்குதடையின்றி கதை நகர்கிறது.

ஆனால், இறுதிக்கட்ட இருபது நிமிடங்கள் ‘இன்னும் படம் முடியலையா’ என்று கேட்க வைத்திருக்கிறது. அந்த இடத்தைச் செப்பனிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

கலை இயக்கம், ஒளிப்பதிவு, விஎஃப்எக்ஸ் உட்பட அனைத்து நுட்பங்களின் தரமும் கிளைமேக்ஸில் இடம்பெற்ற மலையுச்சிக் காட்சியில் மொத்தமாகச் சரிந்திருக்கிறது.

அதற்கு பட்ஜெட் பற்றாக்குறையே காரணம் என்றால், கதையை முழுமையாக நம்பாமலேயே ஒரு படம் எடுக்கப்பட்டிருப்பதாக அர்த்தம்.

இப்படத்தில் போக்கிரி விஜய்யை, மகேஷ்பாபுவை (தெலுங்கு ஒரிஜினல்) நினைவூட்டும் காட்சியொன்று உண்டு. ஜிம் கேரியின் ‘தி ட்ரூமேன் ஷோ’வின் பிரதிபலிப்பும் மிகச்சிறியளவில் உண்டு.

சமந்தாவின் பாத்திரப் பின்னணி, அவரது தங்கை சம்பந்தப்பட்ட வாழ்க்கை முழுதாகத் திரைக்கதையில் இடம்பெறவில்லை; அது சர்ப்ரைஸ் ஆக இருக்கட்டும் என்று இயக்குனர்கள் நினைத்திருந்தால் ‘சாரி’ என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.

அதேபோல, இரண்டு தனித்தனி பிளாஷ்பேக்குகள் இரண்டரை மணி நேரத்திற்கும் குறைவாக ஓடும் படமொன்றில் இடம்பிடித்திருப்பது அயர்ச்சியுற வைக்கிறது.

இது போன்ற எதிர்மறையான விஷயங்களைத் தாண்டி, வாடகைத் தாய் எனும் சொல்லின் பின்னால் எத்தனையோ விதமான குற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது என்று சொன்ன வகையில் திரைக்கதை அமைத்த இயக்குனர்கள் ஹரி, ஹரீஷ் இணையைப் பாராட்டியே தீர வேண்டும். மற்றபடி, ‘யசோதா ஒரு நல்ல த்ரில்லர்’ என்று மட்டுமே சொல்ல முடியும்!

– உதய் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment