பயிர்களைக் காப்பீடு செய்ய நாளை கடைசி நாள்!

– தமிழக அரசு வேண்டுகோள்

பயிர்களில் உற்பத்தியை பெருக்குவதற்கு மட்டுமல்லாது, இயற்கைச் சீற்றங்களினால் பயிர் பாதிப்பு ஏற்பட்டாலும், தமிழக வேளாண் பெருமக்களை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

“வெள்ளம், புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களினால் பயிர்கள் பாதிக்கப்படும்போது, தமிழக விவசாயிகளின் நிதிச்சுமையை குறைக்கும் வகையில்,

முதலமைச்சர் 2022-23 ஆம் ஆண்டில் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக, மாநில அரசின் காப்பீட்டுக் கட்டண மானியமாக ரூ.2,339 கோடி நிதியினை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தற்போது அனைத்து மாவட்டங்களிலும் சம்பா நெல் சாகுபடி முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், சம்பா, தாளடி, பிசானப் பருவத்தில் இதுவரை சாகுபடி செய்யப்பட்டுள்ள 24.13 இலட்சம் ஏக்கர் நெற்பயிரில், 5.90 லட்சம் ஏக்கரில், சுமார் 11 லட்சம் விவசாயிகளால் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, இராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, அரியலூர், வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி,

பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், திருவள்ளூர், ஈரோடு மாவட்டங்களில் சம்பா பருவ நெற்பயிரை காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் என்பதால், விவசாயிகள் பயன்பெறும் வகையில், இந்த மாவட்டங்களைச் சேர்ந்த நெல் விவசாயிகள் நாளைக்குள் காப்பீடு செய்து கொள்ளலாம்” எனக் குறிப்பிட்டுள்ளது.

Comments (0)
Add Comment