– முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வட தமிழகம் உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்மழை பெய்து வருகிறது. சென்னையில் இன்றும் அடை மழை நீடிக்கிறது.
இந்நிலையில் வேளச்சேரி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மழைநீர் அகற்றும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி நடைபெறும் பணிகள் குறித்து அப்போது விளக்கம் அளித்தார்.
இந்நிலையில் கன மழையிலும் விடாது பணியாற்றும் உள்ளாட்சி பணியாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “மழை வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில் மக்களைக் காக்கும் மகத்தான பணியில் தங்களை ஒப்படைத்துக் கொண்டு இருப்பவர்கள் அரசு மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்களே.
சென்னையில் தண்ணீர் தேங்கவில்லை, தேங்கினாலும் உடனே வெளியேற்றப்பட்டு விடுகிறது என்று பொதுமக்கள் அரசை வாழ்த்துகிறார்கள் என்றால் அதற்கு இப்பணியாளர்களின் இடைவிடாத பணிதான் முக்கியக் காரணம்.
அடாத மழையிலும் விடாது பணியாற்றும் அந்த ஊழியர்களுக்கு மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் மகத்தான பணி அனைவராலும் பாராட்டத்தக்கது” என்றுக் குறிப்பிட்டுள்ளார்.