தமிழக காவல்துறையில் கூடுதல் டிஜிபியாக பணியாற்றிய ஜாபர் சேட், உளவுப்பிரிவு அதிகாரியாகப் பணியாற்றிய போது, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, சென்னை திருவான்மியூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடம் இருந்து அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பல கோடி மதிப்புள்ள நிலத்தை, ஒதுக்கீடு முறையில் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலத்தை அவர் முறைகேடாகப் பெற்றார் என்றும், அந்த நிலத்தில் கட்டுமான நிறுவனத்துடன் சேர்ந்து மிகப்பெரிய கட்டடம் கட்டியுள்ளார் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக அவர் மீது 2011ஆம் ஆண்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டு பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது.
இந்த நிலையில் ஜாபர் சேட்டின் மனைவி பர்வீன் ஜாஃபர், தமிழக முன்னாள் முதல்வரின் செயலாளராக இருந்த ராஜமாணிக்கத்தின் மகன் துர்காஷங்கர், லேண்ட்மார்க் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் டி.உதயகுமார் ஆகியோருக்குச் சொந்தமான ரூ.14.23 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டிருப்பதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.