குடியரசுத் தலைவருக்கு மனு!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை ஆளுநர் பொறுப்பிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் கையொப்பமிட்ட மனு குடியரசுத் தலைவர் மாளிகையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில், “இந்திய அரசியலமைப்புச் சட்டம் மாநிலத்தின் நிர்வாக அதிகாரம் ஆளுநரிடம் உள்ளதாகத் தெரிவிக்கிறது.
ஆளுநர், தனது அதிகாரத்தை முதல்வர் தலைமையிலான அமைச்சரவைக் குழுவின் ஆலோசனை மற்றும் அறிவுரைப்படியே பயன்படுத்த வேண்டும்.
அரசியல் சார்புத்தன்மை கொண்டவராக ஆளுநர் மாறுவாரேயானால் அந்தப் பதவியில் அவர் தொடரும் தகுதியை இழந்துவிடுகிறார்.
தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் சட்டம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு, கடந்த 10 மாதங்களாக, இச்சட்ட வரைவு ஆளுநர் அலுவலகத்தில் பரிசீலிக்கப்படாமல் இருக்கிறது.
இதேபோல, 2021-இல் நீட் விலக்கு சட்டவரைவு தமிழக சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால், அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்காமல் பலமாத காலம் காலந்தாழ்த்தியதோடு, அதை சட்டப் பேரவைக்கே திருப்பி அனுப்பினார்.
தாம் வகிக்கும் ஆளுநர் பொறுப்புக்குச் சிறிதும் பொருத்தமற்ற வகையில் ஆர்.என். ரவி பேசி வருகிறார் எனக் குறிப்பிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்,
அரசியல் சட்டப்பிரிவு 159-இன் கீழ் எடுத்துக் கொண்ட பதவிப் பிரமாணத்தை மீறி மாநிலத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக ஆளுநர் இருக்கிறார்.
எனவே, அந்தப் பொறுப்பிலிருந்து அவர் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.