எம்.ஜி.ஆர் மறைவைத் தாங்கும் சக்தி தனக்கு இல்லை!

நடிகர் தேங்காய் சீனிவாசன் நெகிழ்ச்சி

தமிழ் சினிமாவில் ரசிகர்களை அழவும் வைக்கத் தெரிந்த சிரிப்பு நடிகர்களில் ஒருவர் தேங்காய் சீனிவாசன்.

இவரின் பிரதான அடையாளம் நகைச்சுவையாக இருந்தாலும், ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என பன்முகத்தையும் காட்டி வெள்ளித் திரையில் பரிமளித்திருக்கிறார்.

உலகின் புகழ்பெற்ற பத்திரிக்கைகளில் ஒன்றான போர்ப்ஸ் 2013-ம் ஆண்டு இந்திய சினிமாவின் 25 சிறந்த நடிப்புக்களை பட்டியலிட்டது.

பராசக்தி படத்தில் சிவாஜி நடிப்பையும், மகாநதி படத்தில் கமல்ஹாசன் நடிப்பையும், மவுனராகம் படத்தில் ரேவதி நடிப்பையும் அந்த பட்டியலில் சேர்த்திருந்த போர்ப்ஸ், தில்லு முல்லுபடத்தில் இருவரது நடிப்பை கொண்டாடியது. ஒருவர் ரஜினிகாந்த், மற்றொருவர் தேங்காய் சீனிவாசன்.

தில்லுமுல்லு நகைச்சுவை படமாக இருந்தாலும் அதில் சீரியஸாகத்தான் நடித்திருப்பார் தேங்காய் சீனிவாசன். இவரது சீரியஸ் நடிப்பை சுற்றியே காமெடி கலாட்டாக்கள் அரங்கேறும்.

ஒரு ஏமாளி தொழிலதிபராக ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி என்கிற அந்த கதாபாத்திரத்தில் அவர் யதார்த்தமாக வாழ்ந்து காட்டியதுதான் லாஜிக்கை பற்றியெல்லாம் யோசிக்கவிடாமல் ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியது.

கதாபாத்திரத்தின் உடல் மொழி எப்படி இருக்க வேண்டும், எப்படி நடிக்க வேண்டும் என பொதுவாக நடிகர்களுக்கு சொல்லிக் கொடுப்பேன்.

ஆனால் தில்லுமுல்லுவை பொருத்தவரை ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி கதாபாத்திரம் எப்படி நடிக்க வேண்டும் என்பதை தேங்காய் சீனிவாசனே முடிவு செய்யட்டும் என விட்டுவிட்டேன் என கூறியிருக்கிறார் இயக்குனர் கே.பாலச்சந்தர்.

கமலுக்கே நடிப்பு சொல்லிக்கொடுத்தவர், தேங்காய் சீனிவாசனை அவரது போக்கிலேயே விட்டுவிட முடிவு செய்தது அவரது நடிப்பாற்றலுக்கு ஒரு சிறந்த அங்கீகாரமாக விளங்கியது.

சினிமாவில் கொடூர முகத்தையும் குழந்தை முகத்தையும் காண்பித்து ரசிகர்களை நம்பவைக்கத் தெரிந்த மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான தேங்காய் சீனிவான், 1937-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்தார்.

இவரது தந்தை ராஜவேலு முதலியாரும் ஒரு நடிகர்தான். நடிப்புத்துறையில் தந்தை அடைய ஏங்கிய இலக்குகளை தனயன் தேங்காய் சீனிவாசன் அடைந்தார்.

ராஜவேலு முதலியார் எழுதிய கலாட்டா கல்யாணம் நாடகம்தான் நடிப்புத்துறையில் தேங்காய் சீனிவாசனின் அரிச்சுவடி.

எனினும் தேங்காய் சீனிவாசன் முழுநேர நடிகராகவும், சினிமாவில் களம் இறங்கவும் அடித்தளம் போட்டது ரயில்வேத்துறை. தமிழ் சினிமாவிற்கு நாகேஷிற்கு பிறகு ரயில்வேத்துறையிலிருந்து வந்த மற்றொரு நடிகர் தேங்காய் சீனிவாசன்.

பள்ளி படிப்பு முடிந்ததும் சென்னை ஐசிஎஃப் ரயில் பெட்டி தொழிற்சாலையில் ஊழியராக சேர்ந்த தேங்காய் சீனிவாசன், அங்கிருந்த ரயில்வே நாடகக் குழுவில் இணைந்து நாடகங்களை அரங்கேற்றினார்.

தேங்காய் சீனிவாசனின் நடிப்புப் பசிக்கு தீனி போட்டது ரயில்வே நாடகக் குழு.

இதையடுத்து கவர்ச்சி வில்லன் என தமிழ் சினிமாவில் போற்றப்பட்ட கே.கண்ணனின் நாடகக் குழுவில் இணைந்தது தேங்காய் சீனிவாசனின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. சீனிவாசனுக்கு முன்னாள் தேங்காய் என்கிற பட்டமும் சேர்ந்துகொண்டது அங்கேதான்.

கண்ணன் அரங்கேற்றிய கல்மனம் நாடகத்தில் தேங்காய் வியாபாரியாக வந்து சீனிவாசன் செய்த நகைச்சுவை சேஷ்டைகள் கல் மனம் கொண்டவர்களையும் கலகலப்பாக்கியது.

அப்போது தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்த தங்கவேலு கல்மனம் நாடகத்தை ஒரு முறை பார்க்க வந்தார்.

அப்போது தேங்காய் வியாபாரி வேடத்தில் சீனிவாசனின் நடிப்பை பார்த்து வியந்த தங்கவேலு, மேடையில் பேசும்போது, சீனிவாசன் இனி தேங்காய் சீனிவாசன் என்றே அழைக்கப்படட்டும் என்று பட்டம் சூட்டினார்.

சிவக்குமார், ஜெய்சங்கர் உள்ளிட்ட பிரபல ஹீரோக்களை அறிமுகப்படுத்திய 1965ம் ஆண்டுதான் தேங்காய் சீனிவாசனையும் வெள்ளித் திரைக்கு அழைத்து வந்தது. அவர் முதலில் இரவும் பகலும் என்கிற படத்தின் மூலம் தான் திரையுலகில் அறிமுகமாக இருந்தார்.

ஜெய்சங்கர் ஹீரோவாக அறிமுகமான அந்த படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க தேங்காய் சீனிவாசனுக்கு வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் ஹீரோவும் புதுமுகம் நகைச்சுவை நடிகரும் புதுமுகம் என்று இருந்தால் படம் வியாபாரம் ஆகாது என விநியோகஸ்தர்களிடையே எதிர்ப்புகள் கிளம்ப இரவும் பகலும் படத்திலிருந்து நீக்கப்பட்டார் தேங்காய் சீனிவாசன்.

சினிமா கோட்டையின் நுழைவு வாயிலிலேயே தடுக்கி விழுந்தது தேங்காய் சீனிவாசனை மிகவும் மனவேதனைக்கு உள்ளாக்கியது. இதனால் பல வாரங்கள் சோகத்தில் மூழ்கியிருந்தவரை மீட்டெடுத்தது ஒரு விரல் படத்தில் கிடைத்த வாய்ப்பு.

சிஎம்வி ராமன் இயக்கிய அந்த திரில்லர் படத்தில் சிஐடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் தேங்காய் சீனிவாசன். நாடக உலகில் தேங்காய் சீனிவாசனுக்கு புகழ் வாங்கிக் கொடுத்த கண்ணன் மூலம்தான் ஒரு விரல் படத்தின் வாய்ப்பு தேங்காய் சீனிவாசனுக்கு கிடைத்தது.

ஒரு விரல் படத்தில் கவர்ச்சி வில்லன் கண்ணணுக்கும் முக்கிய கதாபாத்திரம். 1965ம் ஆண்டு இறுதியில் வெளிவந்த இந்த படம் தேங்காய் சீனிவாசனின் திரையுலக வாழ்க்கையின் தொடக்கமாக அமைந்தது.

இரவும் பகலும் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்தாலும் அந்த இழப்பு மூலம் ஜெய்சங்கரின் ஆழமான நட்பைப் பெற்றார். இந்த ஆழமான நட்பும், தேங்காய் சீனிவாசனின் அசாத்திய நடிப்பும் அவருக்கு தென்னகத்து ஜேம்ஸ்பாண்டின் பெரும்பாலான படங்களில் வாய்ப்பை பெற்றுத் தந்தது.

ஜெய்சங்கர் நடித்த 80 சதவீத படங்களில் தேங்காய் சீனிவாசன் நடித்துள்ளார். 1965-ம் ஆண்டு திரையுலகில் அறிமுகமான ஜெய்சங்கரும், தேங்காய் சீனிவானும் 1966-ம் ஆண்டு வல்லவன் ஒருவன் படத்தில் இணைந்து நடித்தனர்.

ஜெய்சங்கருக்கு திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்த வல்லவன் ஒருவன் திரைப்படம் தேங்காய் சீனிவாசனின் திரையுலக வாழ்க்கையிலும் ஏற்றத்தை ஏற்படுத்தியது.

கே.பாலச்சந்தரின் எதிர் நீச்சல் படத்திலும் எட்டிப்பார்த்து தனது இமேஜை ஏற்றிக்கொண்ட தேங்காய் சீனிவாசனின் திரையுலக பயணம் 1960-களின் இறுதியில் வேகமெடுக்கத் தொடங்கியது. 1970-களில் உச்சம் தொட்ட இந்த பயணம் 1980-களிலும் தொய்வின்றி தொடர்ந்தது.

நகைச்சுவையில் நாகேசுக்கு இணையாக தேங்காய் சீனிவாசன் வளர்ந்து நின்றதை உணர்ந்த கே.பாலச்சந்தர் வெள்ளி விழா படத்தில் நாகேஷிற்காக தான் உருவாக்கி வைத்திருந்த பாத்திரத்தை தேங்காய் சீனிவாசனுக்கு வழங்கினார்.

படத்தில் ஜெமினிகணேசன் வாணிஸ்ரீ நட்பை பற்றி ஜெமினியின் மனைவி ஜெயந்தியிடம் வத்தி வைக்கும் தேங்காய் சீனிவாசனின் நடிப்பு குணச்சித்திரம், காமெடி, வில்லத்தனம் என எல்லாம் கலந்த கலவையாக இருக்கும்.

ஜெமினிகணேஷன், வாணிஸ்ரீ நட்பின் புனிதத்தை உணர்ந்தபின் அவர்களிடம் மன்னிப்பு கேட்கும் கிளைமாக்ஸ் காட்சியில், நாகேசுக்கு பதிலாக வெள்ளிவிழா படத்தில் தான் தேர்ந்தெடுக்கப்பட்டது நியாயம்தான் என உணர்த்தியிருப்பார் தேங்காய் சீனிவாசன்.

1972-ம் ஆண்டு வெளிவந்த காசேதான் கடவுளடா படமும் அவரது வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. முழுநீள காமடி சித்திரமான இந்த படத்தை எழுதி இயக்கியவர் சித்ராலயா கோபு.

தனது சித்தியிடமிருந்த பணத்தை அபகரிக்க முயலும் மகன்களுக்கு போலிச் சாமியார் வேடத்தில் உதவும் நண்பனாக தேங்காய் ஸ்ரீனிவாசன் இந்த படத்தில் நடித்திருப்பார்.

மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்தப் படம் அடுத்தடுத்து முழுநீள காமடிச் சித்திரங்கள் வருவதற்கான டிரென்ட் செட்டராக அமைந்தது.

இந்தப் படத்தின் கதாநாயகன் முத்துராமரானாக இருந்தாலும் அவரது கதாபாத்திரத்தைவிட தேங்காய் சீனிவாசன் ஏற்றிருந்த போலிச்சாமியார் வேடமே அதிக புகழ்பெற்றது.

அதன் எதிரொலியாக தியேட்டர் வாசல்களில் சாமியார் வேஷத்தில் தேங்காய் சீனிவாசன் இருப்பது போன்ற பிரம்மாண்ட கட்அவுட் வைக்கப்பட்டன. இதனால் சந்தோஷம் அடைய வேண்டிய தேங்காய் சீனிவாசன் அதற்கு பதில் பதறினார்.

படத்தின் ஹீரோவான முத்துராமன் கோபித்துக்கொள்ளக் கூடாது என்று நினைத்த தேங்காய் சீனிவாசன், சித்ராலயா கோபுவையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு முத்துராமன் வீட்டிற்குச் சென்று அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.

ஆனால் கட் அவுட் விஷயத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளாத முத்துராமன், தேங்காய் சீனிவாசனின் நடிப்பை பாராட்டி தனது பெருந்தன்மையைக் காட்டினார்.

(பிரமாணர்கள் பாஷை, மெட்ராஸ் பாஷை, கோயமுத்தூர் பாஷை என எல்லா விதங்களிலும் யதார்த்தமாக தமிழை உச்சரிக்கும் வல்லமை படைத்தது தேங்காய் சீனிவாசனின் நாக்கு.

அதே நாக்குதான் புரியாத மொழி பேசியும் ரசிகர்களை கலகலப்பாக்கும். ஒரு வசனத்தின் ஒவ்வொரு வார்த்தையையும் உடல்மொழியால் மொழிபெயர்க்கும் இவரது நடிப்பு காமெடியில் இவருக்கு மட்டுமே கைவந்த தனி பாணி.

ஏழை விவசாயி, நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த குடும்பத் தலைவன், பந்தா காட்டும் பணக்காரர் என எல்லாவிதமான கதாபாத்திரங்களிலும் இயல்பாகப் பொருந்திப்போவார் தேங்காய் சீனிவாசன்,

இவர் வளைந்து குலைந்து பவ்யம் காட்டினாலும் கோட் சூட் அணிந்து திமிர்காட்டினாலும், இரண்டிலும் யதார்த்தம் மிளிரும்.) 1976-ம் ஆண்டு இளையராஜா இசையமைப்பாளராக அறிமுகமான அன்னக்கிளி படத்தில் தேங்காய் சீனிவாசன் ஏற்றிருந்த காமெடி கலந்த வில்லன் கதாபாத்திரம், அடுத்த 10 ஆண்டுகளுக்கு அவரது மார்க்கெட்டை உறுதி செய்யும் வகையில் அமைந்தது.

தொடர்ந்து பல்வேறு படங்களில் தேங்காய் சீனிவாசன் வில்லன் கதாபாத்திரம் ஏற்பதற்கு இந்த படம் அடித்தளமாக அமைந்தது.

வில்லத்தனத்தை வெளிப்படுத்துவதில் மட்டுமல்ல அப்பாவித்தனத்தை வெளிப்படுத்துவதிலும் தேங்காய் சீனிவாசன் அசகாய நடிகர். 1976-ம் ஆண்டு வெளிவந்த பத்ரகாளி படத்தில் மனோரமாவுக்கு பயந்து நடுங்கும் கதாபாத்திரத்தில் வெள்ளந்தி மனிதராக வந்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருப்பார் தேங்காய் சீனிவாசன்.

எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் ஆகிய புகழின் உச்சம் தொட்ட 4 ஹீரோக்களுடனும் நெருக்கமான நண்பராக இருந்தவர் தேங்காய் சீனிவாசன். குறிப்பாக எம்.ஜி.ஆருடன் அவர் கொண்டிருந்த பாசம் ஒரு தலைவனுக்கும் அவரது முரட்டு பக்தனுக்கும் இடையேயான பந்தத்தைப் போன்றது.

நாடி, நரம்பெல்லாம் எம்.ஜி.ஆர் பற்று ஊறிப்போன ஒரு அடிமட்ட ரசிகனை, தொண்டனை கண்முன் நிறுத்தும் கதாபாத்திரமாக வந்து, பல்வேறு படங்களில் எம்.ஜி.ஆரின் புகழ்பாடியிருக்கிறார் தேங்காய் சீனிவாசன்.

(1972ம் ஆண்டு எம்.ஜி.ஆர் அதிமுகவை ஆரம்பித்தபோது அந்தக் கட்சியில் இணைந்தவர் கிராமம் கிராமமாகசென்று அதிமுகவிற்காக பிரச்சாரம் செய்துள்ளார்.

நீங்கள் நடித்த படங்களில் உங்களுக்கு பிடித்த படம் எது என்று கேட்டால் எம்.ஜி.ஆருடன் நான் நடித்த அனைத்துப் படங்களும் எனக்கு பிடித்தவைதான் என்று தெரிவிப்பார் தேங்காய் சீனிவாசன்.

எம்.ஜி.ஆருக்காக என் உயிரையும் கொடுப்பேன் என உணர்ப்பூர்வமாக தனது நண்பர்களிடம் கூறுவாராம் தேங்காய் சீனிவாசன். அவரது இந்த பாசமும் பற்றுதலும் எம்.ஜி.ஆரிடமிருந்து தேங்காய் சீனிவாசனை நோக்கியும் எதிரொலித்தது.

எம்.ஜி.ஆரின் வள்ளல் தன்மையை நினைத்து தேங்காய் சீனிவாசன் திக்குமுக்காடிப்போன தருணம் ஒன்று நிகழ்ந்தது.

தேங்காய் சீனிவாசனுக்கு பல உதவிகளை எம்.ஜி.ஆர் அதற்குமுன் செய்திருந்தாலும் பெரும் பெருளாதார சிக்கலிலிருந்து தேங்காய் சீனிவானை மீட்ட அந்த உதவி எல்லாவற்றுக்கும் உச்சமாய் அமைந்தது.) எம்.ஜி.ஆரை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என்கிற கனவு நிறைவேறாமலேயே போன நிலையில் சிவாஜி வைத்தாவது ஒரு படம் எடுத்துவிட வேண்டும் என்கிற துடிப்பில் கிருஷ்ணன் வந்தான் படத்தை தயாரித்தார் தேங்காய் சீனிவாசன். போதிய நிதி கிடைக்காததால் அந்த படத்தின் சூட்டிங் பாதியிலேயே நின்றது. இதனால் மிகவும் நொந்துபோன தேங்காய் சீனிவாசன் ராமாவரம் தோட்டத்திற்குச் சென்று எம்.ஜி.ஆரை சந்தித்து உதவி கேட்டாராம். படம் தயாரித்து பொருளாதார சிக்கலில் மாட்டிக்கொள்ளாதே என ஏற்கனவே தேங்காய் சீனிவாசனை எச்சரித்திருந்த எம்.ஜி.ஆர் தற்போது அதனை சுட்டிக்காட்டி திட்டி அனுப்பியிருக்கிறார்.

எம்.ஜி.ஆரிடம் சென்றும் உதவி கிடைக்கவில்லையே, அடுத்து என்ன செய்வது என மனம் நொந்தபடியே தனது வீட்டிற்கு வந்த தேங்காய் சீனிவாசனுக்கு அங்கே ஆச்சர்யம் காத்திருந்தது.

எம்.ஜி.ஆர் கொடுத்தனுப்பியதாக ஒரு பெட்டியை ராமாவரம் தோட்டத்திலிருந்து கொடுத்தனுப்பியிருக்கிறார்கள். அதனை திறந்து பார்த்தபோது அதில் 25 லட்ச ரூபாய் இருந்ததாம்.

எம்.ஜி.ஆரின் கொடைத்தன்மையை நினைத்து தேங்காய் சீனிவாசனுக்கு மெய் சிலிர்த்தது. (உடனடியாக ராமாவரம் தோட்டத்திற்குச் சென்ற தேங்காய் சீனிவாசன் உணர்ச்சி மேலோங்க, நா தழுதழுக்க எம்.ஜி.ஆருக்கு நன்றி கூறினாராம்.

அவரின் வள்ளல் தன்மைக்கு உதாரணமாகவும், எம்.ஜி.ஆர் தேங்காய் சீனிவாசன் நட்புக்கு உதாரணமாகவும் இந்த சம்பவம் தமிழ் சினிமா உலகில் கூறப்படுவதுண்டு.)

எம்.ஜி.ஆருடன் கறுப்பு வெள்ளை படங்கள் பலவற்றில் தேங்காய் சீனிவாசன் நடித்திருந்தாலும், 1972-ம் ஆண்டு அதிமுக உருவான பிறகு எடுக்கப்பட்ட கலர் எம்.ஜி.ஆர் படங்களில் தேங்காய் சீனிவாசனுக்கு முக்கியத்துவம் அதிகம் இருந்தது.

1970-களில் எம்.ஜி.ஆர். படங்களில் அதிகம் இடம் பெற்றிருந்தார். பல்லாண்டு வாழ்க, நினைத்ததை முடிப்பவன், இதயக்கனி, உரிமைக்குரல், உழைக்கும் கரங்கள், என ஏராளமான எம்.ஜி.ஆர் படங்களில் நடித்துள்ளார்.

குறிப்பாக பல்லாண்டு வாழ்க படத்தில் கதையோடு இணைந்த முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் தேங்காய் சீனிவாசன்.

அந்த படத்தில் எம்.ஜி.ஆரால் நல்வழிப்படுத்தப்படும் 6 கொடிய வில்லன்களில் ஒருவராக வரும் தேங்காய் சீனிவாசன், ஒரு காட்சியில் நீ அடிக்கிற கொள்ளைக்கு சாவு மணி அடிக்க எங்கள் தலைவர் புறப்பட்டுவிட்டார் என்று எம்.ஜி.ஆரைப் பற்றி குறிப்பிட்டு பேசுவார்.

அன்றைய அரசியலோடு பொருத்திப் பார்க்கப்பட்டு தியேட்டர்களில் கைத்தட்டல்களை அள்ளியது அந்தக் காட்சி.

நினைத்ததை முடிப்பவன் படத்திலும், எம்.ஜி.ஆர் நெஞ்சத்தோடு ஒட்டிய ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் தேங்காய் சீனிவாசன். சுக்கு காபி விற்பவராக அந்த படத்தில் நடித்திருக்கும் அவர், எம்.ஜி.ஆருடன் இணைந்து பேசும் வசனங்கள், சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பதாக இருக்கும்.

வாத்தியாரே, துரை என அடி வயிற்றிலிருந்து உணர்வுப்பூர்வமாகக் குறிப்பிட்டு எம்.ஜி.ஆரை புகழ்ந்து தேங்காய் சீனிவாசன் பேசிய வசனங்கள் பல கைத்தட்டல்களாலும், விசில் சப்தங்களாலும் திரையரங்கை அதிர வைத்துள்ளன.

திரையுலகில் எம்.ஜி.ஆரின் இதயக் கனியாக விளங்கிய நடிகர்களில் தேங்காய் சீனிவாசனுக்கு தனி இடம் இருந்தது.

எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசியான அவர் எம்.ஜி.ஆர் மறைவைத் தாங்கும் சக்தி தனக்கு இல்லை என்பதை போல், 1987-ம் ஆண்டு நவம்பர் மாதம் எம்.ஜி.ஆர் இறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே இயற்கை எய்தினார். 

– நன்றி நியூஸ் 7 தமிழ்

Comments (0)
Add Comment