2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சி வாயிலாக மக்களிடையே உரையாற்றுகையில் ரூ.1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாதவை என்று அறிவித்தார்.
பயங்கரவாதிகளிடையே பணப்புழக்கத்தை நிறுத்த, டிஜிட்டல் எனப்படும் எண்ம முறையில் பணப்பரிமாற்றத்தை ஊக்கப்படுத்த என பல்வேறு காரணங்களும் இதற்காக சொல்லப்பட்டன.
ஆனால், கையிலிருந்த ரூபாய் நோட்டுகள் செல்லாமல் மக்களும், ஏழைகளும் வியாபாரிகளும் வணிகர்களும் சொல்லாணாத் துயரங்களை அடைந்தனர்.
வங்கிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சிறு வியாபாரிகள் நொடித்துப் போயினர்.
இதையெல்லாம் கடந்து வந்து, தற்போது ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்பிஐ ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது.
அதாவது, பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு சுமாா் 6 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையிலும், நாட்டின் பணப் பரிவா்த்தனை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது என்பதுவே அது.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஆர்பிஐ, “கடந்த மாதம் 21-ஆம் தேதியுடன் நிறைவடைந்த அரை மாதத்தில் மக்களிடையே ரூ.30.88 லட்சம் கோடி பணப் பரிவா்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள அதிகபட்ச பணப் பரிவா்த்தனையாகும்.
கடந்த 2016-ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டபோது, அந்த ஆண்டின் நவம்பா் மாதம் 4-ம் தேதியுடன் நிறைவடைந்த அரை மாதத்தில் ரூ.17.7 லட்சம் கோடிக்கு பணப் பரிவா்த்தனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அதனுடன் ஒப்பிடுகையில், கடந்த அக்டோபா் 21-ம் தேதியுடன் நிறைவடைந்த அரை மாதத்தில் மக்களிடையே பணப் பரிவா்த்தனை 71.84 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன” என்று குறிப்பிடப்பட்டுளள்து.
மத்திய அரசு கூறியது போல, கருப்புப் பணம் ஒழிக்கப்பட்டதா? கள்ள நோட்டுகள் புழக்கத்திலிருந்து முற்றிலும் ஒழிந்துபோயினவா? பயங்கரவாதிகளுக்கு பணப்புழக்கமே இல்லாமல் போனதா?
இந்தக் கேள்விகளுக்கு எப்போதுதான் உண்மை தெரியவரும் என இதுவரை தெரியவில்லை.
இது குறித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “கருப்புப் பணம் ஒழிக்க பணமதிப்பிழப்பு உதவும் என்று மோடி அறிவித்திருந்தார். ஆனால், வியாபாரமும் சிறு தொழில்களும்தான் ஒழிந்தன.
அவ்வளவு பெரிய பொருளாதார நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு 2016-ம் ஆண்டைக் காட்டிலும் 72 சதவீதம் அதிக பணநடமாட்டம் இருப்பதாகப் புள்ளி விவரம் காட்டுகிறது.
அந்த பேரிடர் மிகப்பெரிய தோல்வி என்பதையும், அதுதான் நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம் என்பதையும் பிரதமர் மோடி இன்னமும் ஒப்புக் கொள்ளவில்லை” என்று பதிவிட்டுள்ளார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு புழக்கத்தில் விடப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளும் தற்போது புதிதாக அச்சிடப்படுவதில்லை என்று ஆர்பிஐ அறிவித்துள்ளது.
அதனுடன் புதிதாக 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளும் அறிமுகப்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
– நன்றி: தினமணி