ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் நிறைவு பெற்றன.
நேற்று நடந்த சூப்பர் லீக் சுற்று கடைசி ஆட்டத்தில் இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் மோதின.
டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்ததுடன் 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடிய சூரியகுமார் 25 பந்துகளில் 6 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 61 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்.
இந்தப் போட்டியில் 61 ரன்கள் குவித்ததன் மூலம் நடப்பு ஆண்டில் நடைபெற்ற 28 டி 20 போட்டிகளில் பங்கேற்று 1,026 ரன்களை எடுத்துள்ளார்.
இதன்மூலம், டி 20 போட்டிகளில் ஒரே வருடத்தில் 1000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
ஒட்டுமொத்தமாக ஒரே ஆண்டில் 1000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் சூர்யகுமார் பெற்றுள்ளார்.
இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் முதலிடத்தில் உள்ளார்.
அவர் கடந்த ஆண்டு 29 போட்டிகளில் 1326 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.